கரீபிய நாடுகள் என்பவை எவை, அவை ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன டிங்கு? - ஜி. இனியா, 9-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் சீனியர் செகண்டரி பள்ளி. கிருஷ்ணகிரி.
வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கரீபியன் கடல் அமைந்திருக்கிறது. இந்தக் கடலைச் சுற்றி அமைந்திருக்கும் நாடுகளையும் தீவுகளையும் கரீபியன் நாடுகள், கரீபியன் தீவுகள் என்று அழைக்கிறார்கள்.
கியூபா, ஜமைக்கா, ஹைதி, டொமினிக்கன் குடியரசு, பஹாமாஸ், பார்படோஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆண்டிகுவா மற்றும் பார்புடா, டொமினிகா, கிரெனடா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ், செயின்ட் லூசியா, செயின்ட் வின்செண்ட் மற்றும் கிரெனடைன்ஸ் ஆகிய 13 கரீபியன் சுதந்திர நாடுகள் என அழைக்கப்படுகின்றன.
ஐரோப்பியர்கள் அமெரிக்கக் கண்டங்களுக்கு வருவதற்கு முன்பே, அந்தப் பகுதியில் ‘கரிப்’ எனும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களின் பெயரிலிருந்தே கரீபியன் கடல், கரீபியன் நாடுகள், கரீபியன் தீவுகள் என்று அழைக்கலானார்கள்.
அதோடு கரீபியன் கடலைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்தும் கரீபியக் கடலை எல்லையாகவும் கொண்டுள்ளதால், கரீபியன் நாடுகள் என்று அழைப்பது பொருத்தமாகவும் இருக்கிறது, இனியா.
விரல்களில் சொடக்குப் (நெட்டை) போடும்போது சத்தம் ஏன் வருகிறது, டிங்கு? – ர. தக் ஷ்ணா, 7-ம் வகுப்பு, நாச்சியார் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.
நம் உடலில் மூட்டுகள் இணையும் பகுதியில் எலும்புகள் ஒன்றோடு மற்றொன்று உராயாமல் பாதுகாக்கும் விதத்தில் சைனோவியல் திரவம் இருக்கிறது. நாம் விரல்களை நீட்டும்போதோ மடக்கும்போதோ மூட்டுகளில் இடைவெளி அதிகமாகிறது.
அப்போது சைனோவியல் திரவத்தில் அழுத்தம் குறைந்து, அதில் இருக்கும் வாயுக்கள் சேர்ந்து, சிறிய காற்றுக் குமிழ்களை உருவாக்குகின்றன. நாம் சொடக்குப் போடும்போது, அந்த அழுத்தத்தின் காரணமாக, காற்றுக் குமிழ்கள் வெடிக்கின்றன. அதனால் சத்தம் வருகிறது, தக்ஷ்ணா.