

இதயத்துடிப்பை மருத்துவர் பார்க்கும்போது ஏன் நம் மூச்சை இழுத்துவிடச் சொல்கிறார், டிங்கு? - மு.கவின். 8-ம் வகுப்பு. ஊ.ஒ.ந.நிலைப் பள்ளி, தங்களாச்சேரி. மதுரை.
இதயம், நுரையீரல் ஆகியவற்றின் செயல்பாட்டைக் கண்டறிய மருத்துவர்கள் மூச்சை இழுத்துவிடச் சொல்லி, பரிசோதிக்கிறார்கள். மூச்சை இழுக்கும்போது நுரையீரல் விரிவடையும். இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் சிறிய மாற்றம் ஏற்படும். ஒலி அதிகமாகக் கேட்கலாம். மூச்சை விடும்போது நுரையீரல் சுருங்கும். ஒலி குறைவாகக் கேட்கலாம்.
இந்த ஒலி சாதாரணமானதா, அசாதாரணமானதா என்பதையும் ஒலி இதயத்திலிருந்து வருகிறதா, நுரையீரலில் இருந்து வருகிறதா என்பதையும் மருத்துவர்கள் கண்டறிவார்கள்.
எல்லாம் இயல்பாக இருந்தால் பிரச்சினை இல்லை. வழக்கத்தைவிட வேறுபட்டிருந்தால், அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காகவே மூச்சை இழுத்துவிடச் சொல் கிறார்கள், கவின்.
பி பாசிட்டிவ் ரத்தம் உள்ளவர்களைத்தான் கொசுக்களுக்கு அதிகம் பிடிக்கும் என்பது உண்மையா, டிங்கு? – மா. மாரிசெல்வம், 9-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, அனவரதநல்லூர், தூத்துக்குடி.
கொசுக்கள் கடிக்க வருவதற்கு ரத்த வகைகள் முக்கிய மான காரணம் அல்ல, மாரிசெல்வம். நாம் மூச்சுவிடும் போது வெளியேறும் கார்பன் டை ஆக்சைடின் அளவு, உடலின் வெப்பம், உடல் வாசனை, வியர்வையில் உள்ள வேதிப் பொருள்கள் போன்றவை கொசுக் களை ஈர்ப்பதால், அவர்களை அதிகம் கடிக்கின்றன.
ஒப்பீட்டளவில் பி.பாசிட்டிவ் ரத்த வகையைவிட ஓ வகை ரத்தம் உடையவர்களை கொசுக்கள் சற்று அதிகம் கடிப்பதாகச் சொல்கிறார்கள்.
பாவம், புண்ணியம் என்றெல்லாம் இருக்கின்றனவா, டிங்கு? – ஆர்.பி. சுபிக்ஷன், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
சக மனிதர்களுக்கு, சக உயிரினங்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதுதான் அறிவில் மேம்பட்ட உயிரினமான மனிதர்களை வேறு படுத்திக்காட்டும். நல்லது, கெட்டது, பாவம், புண்ணியம் போன்றவை எல்லாம் அதற்காகவே உருவாக்கப்பட்டவை.
ஒருவருக்கு நல்லது செய்யும்போது நம் மனம் மகிழும். அதுவே கெட்டது செய்யும்போது நம்மால் பாதிக்கப்பட்டவருக்கு அது துன்பத்தைக் கொடுக்கும். அப்போது நமக்குக் குற்றவுணர்வு ஏற்படும்.
அதனால் நல்லது செய்தால் நாமும் மகிழ்ச்சியாக இருக்கலாம், நம்மால் பலன் அடைந்தவர்களும் மகிழ்ச்சியாக இருக்கலாம். நல்லது செய்தால் புண்ணியம் என்பதும் கெட்டது செய்தால் பாவம் என்பதும் மனிதர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை, சுபிக்ஷன்.