மாயா பஜார்

செம்பு மோதிரம் ஏன் பச்சையாக மாறுகிறது?

Guest Author

பாட்டி ஆசையாக ஒரு செம்பு மோதிரத்தை எனக்கு அணிவித்தார். ஆனால் இரண்டே நாள்களில் மோதிரத்தைச் சுற்றிப் பச்சையாக வளையம் வந்துவிட்டது. உடனே கழற்றச் சொல்லிவிட்டார். ஆனால், என் அம்மா போட்டிருந்த செம்பு மோதிரம் ஒன்றும் ஆகவில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆனது, டிங்கு? - ஏ. திவாஸ்ரீ, 8-ம் வகுப்பு, அரசினர் உயர்நிலைப் பள்ளி, ஆதனூர்.

செம்புப் பாத்திரமோ அணிகலனோ பச்சையாக மாறினால் உடனே பயப்பட வேண்டாம். செம்பு காற்றில் உள்ள ஆக்சிஜன், நம் உடலில் உள்ள வியர்வை, அமிலத்தன்மை, நாம் பயன்படுத்தும் சோப்பு, வாசனைத் திரவியம், தைலம் போன்றவற்றுடன் வேதிவினை புரியும்.

இதனால் செம்பு பச்சை அல்லது நீல நிறத்துக்கு மாறும். மோதிரத்தை அழுத்தித் தேய்த்தால் பச்சை நிறம் போய்விடும். இந்தப் பச்சை நிறத்தால் தீங்கு ஒன்றும் இல்லை. எல்லாருக்கும் இப்படிப் பச்சை நிறமாக மாறாது. அவரவர் உடலில் சுரக்கும் அமிலத்தன்மையைப் பொறுத்துதான்

பச்சை வண்ணம் உருவாகும். அதனால்தான் உங்கள் அம்மாவின் மோதிரம் பச்சையாக மாறவில்லை. வீட்டில் பயன்படுத்தும் பாத்திரங்கள், தண்ணீர் பாட்டில் போன்றவற்றில் வெளிப்புறம் பச்சையாக இருந்தால் பயப்பட வேண்டியதில்லை.

சமைக்கும், தண்ணீர்ப் பிடித்து வைக்கும் பாத்திரம், பாட்டிலின் உள்பக்கம் பச்சையாக மாறினால், அதில் பாக்டீரியா தொற்று இருக்கலாம் என்பதால் அப்போது பயன்படுத்த வேண்டியதில்லை, திவாஸ்ரீ.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT