மனிதர்கள் அரிசி சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வருமா? அப்படி என்றால் கோழிகளின் முக்கிய உணவே அரிசிதானே, அவற்றுக்கு ஏன் மஞ்சள் காமாலை ஏற்படவில்லை, டிங்கு ? - த. அபர்ணா, 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி. பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.
அரிசிக்கும் மஞ்சள் காமாலைக்கும் தொடர்பு இல்லை. அசுத்தமான நீர், உணவு மூலம் ஹெபடைடிஸ் ஏ, இ வைரஸ்கள் உடலுக்குச் சென்று, கல்லீரலில் தொற்றை ஏற்படுத்துகின்றன.
அதனால் கல்லீரல் சரியாகச் செயல்படாமல் ரத்தச் சிவப்பணுக்கள் அழிகின்றன. அப்போது பிலரூபின் உருவாகிறது.
இதனால் ரத்தத்தில் மஞ்சள் நிறம் அதிகரிக்கிறது. தோல், கண் போன்ற பகுதிகள் மஞ்சளாகின்றன. இதைத்தான் மஞ்சள் காமாலை என்கிறோம். மஞ்சள் காமாலை என்பது நோய் அல்ல, நோயின் அறிகுறி. தக்க சிகிச்சை செய்து, இதைச் சரிசெய்துவிடலாம்.
அரிசிக்கும் மஞ்சள் காமாலைக்கும் தொடர்பு இல்லை என்பதால், கோழிக்கு மஞ்சள் காமாலை வருமா என்கிற கேள்விக்கு இடமில்லை. அதோடு ஹெபடைடிஸ் வைரஸ் கோழிகளைத் தாக்குவதும் இல்லை, அபர்ணா.
குரங்கிலிருந்து மனிதன் உருவானான், அந்தக் குரங்கு எப்படி உருவானது டிங்கு? - பா. மித்ரன் பாஸ்கரன், இராமநாதன் செட்டியார் மாநகராட்சித் தொடக்கப் பள்ளி, காரைக்குடி.
பரிணாம வளர்ச்சி என்பது ஒன்றிரண்டு ஆண்டுகளிலோ நூறு, இருநூறு ஆண்டுகளிலோ நடந்துவிடக்கூடியது அல்ல. பரிணாம வளர்ச்சியில் ‘காலம்’ என்பது மிக முக்கியமானது.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே மூதாதையரிடமிருந்து இரு வேறு உயிரினங்களாக, மனிதனும் குரங்கும் பரிணாம வளர்ச்சியடைந்தனர்.
2.5 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான இந்த இரண்டு இனங்களும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரிணாம வளர்ச்சியடைந்து, இன்றைய மனிதர்களாகவும் வாலில்லாக் குரங்குகளாகவும் மாறியிருக்கின்றனர்.
புதைபடிவங்கள், டி.என்.ஏ. ஆய்வுகள் மூலம் விஞ்ஞானிகள் இதை உறுதிசெய்துள்ளனர். மனிதர்களும் சிம்பன்சி குரங்குகளும் டி.என்.ஏ.வில் 98.8 சதவீத ஒற்றுமையைக் கொண்டுள்ளன.
மீதி இருக்கும் வேற்றுமை காரணமாக 2.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தங்களின் பொதுவான மூதாதையரிடமிருந்து மனிதர்களும் சிம்பன்சி குரங்குகளும் இரண்டு வேறு உயிரினங்களாகப் பிரிந்துவிட்டன, மித்ரன் பாஸ்கரன்.