மாயா பஜார்

பற்கள் தேயுமா? | டிங்குவிடம் கேளுங்கள்

Guest Author

வண்டிகளின் டயர் மட்டுமல்ல, இரும்பால் ஆன சங்கிலிகள்கூடத் தேய்மானம் அடையும்போது, நாள்தோறும் துலக்கும், மென்று தின்னும் பற்கள் ஏன் தேய்வதே இல்லை, டிங்கு? - சு. அஷ்மிதா, 8-ம் வகுப்பு, புனித அந்தோணியார் மெட்ரிக். பள்ளி, கோவை.

சுவாரசியமான கேள்வி. ஆனால், பற்களும் தேய்கின்றன. இன்று பல்துலக்கி மூலம் பற்பசையால் பற்களைத் தேய்க்கிறோம். அதனால் பற்கள் அதிகமாகத் தேய்மானம் அடைவதில்லை. என் பாட்டி காலத்தில் சாம்பல், பற்பொடி ஆகியவற்றை வைத்துத்தான் தேய்ப்பார்கள்.

கடித்து, மென்று விழுங்கும் உணவு வகைகளைச் சாப்பிடுவார்கள். அதனால் அவர்களின் பற்கள் தேய்ந்து இருப்பதைப் பார்த்திருக்கிறேன். நம் பற்களை மூடியிருக்கும் மேல் அடுக்கு எனாமல், விரைவில் பற்கள் தேய்மானம் அடையாதவாறு பாதுகாக்கிறது. வாயில் உருவாகும் அமிலங்களில் இருந்து உமிழ்நீர் பற்களைக் காப்பாற்றுகிறது. இருந்தாலும் நம் பற்களும் தேய்கின்றன, ஆனால், அது மெதுவாகவே நடை பெறுகிறது, அஷ்மிதா.

மாடுகளுக்குக் கழுத்தில் சதைத் தொங்குவது ஏன், டிங்கு? - க. அபிமன்யு விஸ்வா, 1-ம்‌ வகுப்பு, சென்னை ஆரம்பப் பள்ளி, வேளச்சேரி, சென்னை.

மாடுகளுக்கு மட்டுமல்ல, சில வகைப் பல்லிகள், பறவைகளுக்கும் கழுத்தில் தோல் தொங்குகிறது. ஆனால், மாடுகளில் கழுத்துத் தோல் உடலின் வெப்பத்தைக் குறைப்பதற்குப் பயன்படுகிறது, கழுத்தைத் திருப்பிப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கிறது என்கிறார்கள்.

மாடுகளைவிட காளைகளுக்குக் கழுத்துத் தோல் மடிப்பு பெரிதாக இருக்கும். குளிர்ப் பகுதியில் வசிக்கும் மாடுகளைவிட, வெப்பப் பகுதியில் வசிக்கும் மாடுகளுக்கு கழுத்துத் தோல் மடிப்பு பெரிதாக இருக்கிறது, அபிமன்யு விஸ்வா.

SCROLL FOR NEXT