மாயா பஜார்

வெள்ளையணுக்கள் வெள்ளையாக இருக்குமா? | டிங்குவிடம் கேளுங்கள்

செய்திப்பிரிவு

பிராய்லர் கோழி முட்டை வெள்ளையாகவும் நாட்டுக் கோழி முட்டை பழுப்பாகவும் காடை முட்டை புள்ளிகளுடனும் காணப்படுவது ஏன், டிங்கு? - ம.ஜெ. நிகுன், 1-ம் வகுப்பு, புனித அந்தோணியார் மெட்ரிக் பள்ளி, கணேசபுரம், கோவை.

பறவைகளின் முட்டைகள் வண்ணத்திலும் வடிவத்திலும் மாறுபடுவதற்கு உயிரியல், மரபணுக் காரணங்கள் உள்ளன. கோழி முட்டை ஓட்டின் நிறம் முற்றிலும் இனத்தைப் பொறுத்தது. வெள்ளைக் கோழிகள் பொதுவாக வெள்ளை முட்டைகளை இடுகின்றன. நாட்டுக்கோழிகள் பழுப்பு முட்டைகளை இடுகின்றன.

முட்டை ஓடு வெளிவரும்போது, இனப்பெருக்க உறுப்பில் சுரக்கும் நிறமிகள்தான் ஓட்டின் நிறத்தைத் தீர்மானிக்கின்றன. நாட்டுக்கோழி முட்டைகளில் 'ப்ரோட்டோபார்பைரின்' (protoporphyrin) என்கிற நிறமி சேர்க்கப்படுவதால், முட்டைகள் பழுப்பு நிறத்தில் இருக்கின்றன.

வெள்ளைக் கோழிகளின் முட்டைகளுக்கு இதுபோன்ற நிறமிகள் சேர்க்கப்படுவதில்லை என்பதால் வெள்ளையாக இருக்கின்றன. காடை முட்டைகளில் காணப்படும் கரும்புள்ளிகள், கோடுகள், அவை முட்டை ஓடாக உருமாறும் கடைசிக் கட்டத்தில் ‘பார்பைரின்' (porphyrin) என்கிற நிறமி சீரற்ற முறையில் படியும்போது ஏற்படுகின்றன.

இந்தத் தனித்துவமான தோற்றம் காட்டுச் சூழலில் உள்ள காடை முட்டைகளுக்கு இயற்கையான பாதுகாப்பு அரணாக உதவுகிறது; அதாவது புதர்களுக்கு நடுவே எதிரிகளின் கண்களில் எளிதில் படாமல் இருக்க உதவுகிறது, நிகுன்.

சிவப்பணுக்கள் இருப்பதால் ரத்தம் சிவப்பாக இருக்கிறது. ஆனால், ரத்தத்தில் வெள்ளையணுக்களும் இருக்கின்றன என்கிறார் ஆசிரியர். வெள்ளையணுக்கள் எங்கே இருக்கின்றன, டிங்கு? - ம. செந்தூரப்பாண்டி. 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி. பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.

நீங்கள் சொல்வதுபோல் ரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகமாக இருப்பதால் ரத்தம் சிவப்பாக இருக்கிறது என்பது சரி. குறைவான எண்ணிக்கையில் இருக்கும் வெள்ளையணுக்கள் பால் போன்று வெள்ளையாக இருக்காது.

அவை நிறமற்ற கண்ணாடி போன்ற அணுக்கள். 600 முதல் 700 சிவப்பணுக்களுக்கு ஒரு வெள்ளையணு என்கிற அளவில் இருப்பதால், சிவப்பணுக்கள் நிறமற்ற வெள்ளையணுக்களை மறைத்துவிடுகின்றன. அதனால் வெள்ளையணுக்கள் தெரிவதில்லை. நம் உடலை நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் காவலர்களே இந்த வெள்ளையணுக்கள்தான், செந்தூரப்பாண்டி.

SCROLL FOR NEXT