நாம் மூளையைப் பயன்படுத்தாமல் வீணடிக்கிறோமோ என்று எனக்குத் தோன்றுவதன் காரணம் என்ன, டிங்கு? - பி. மைஷிகா, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
முன்பெல்லாம் தொலைபேசி எண்களை நினைவில் வைத்துக்கொள்வோம். புதிய இடங்களுக்குச் சென்றால் வழி கேட்போம்.
பிறகு அந்த வழியை நினைவில் வைத்துக்கொள்வோம். எவ்வளவு எண்களைக் கொடுத்தாலும் கூட்டுவோம், கழிப்போம், பெருக்குவோம்.
படித்த புத்தகங்களை, பார்த்த திரைப்படங்களை எல்லாம் நினைவில் வைத்திருப்போம். இன்றோ திறன்பேசியைப் பயன்படுத்துவதால் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.
ஜிபிஎஸ் மூலம் புதிய இடங்களிலும்கூட எளிதாக வழிகளை அறிந்துகொள்கிறோம். இணையத்தைப் படிப்பதற்குப் பயன்படுத்துவதைவிட, பார்ப்பதற்கு அதிகமாகப் பயன்படுத்துகிறோம்.
ஏதாவது சந்தேகம் என்றால் மூளைக்கு வேலை கொடுத்து யோசிக்காமல், சட்டென்று இணையத்தில் பார்த்துத் தெரிந்துகொள்கிறோம். இப்படி மூளைக்குச் சவால்விடுவது போல எதையும் யோசிக்காதபோது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளாதபோது, நமக்கு நம் மூளையைச் சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்கிற எண்ணம் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். புதிர்களை விடுவிக்கலாம். புத்தகங்களை ஆழமாக வாசிக்கலாம். திறன்பேசிப் பயன்பாட்டைக் குறைக்கலாம், மைஷிகா.