மாயா பஜார்

மண் எவ்வாறு உருவாகிறது? | டிங்குவிடம் கேளுங்கள்

Guest Author

இசையைக் கேட்டால் நமக்கு ஏன் மகிழ்ச்சி வருகிறது? தலையையும் கால்களையும் ஏன் ஆட்டுகிறோம், டிங்கு?ஆர். கிருஷ்ணகுமாரி, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.

நமக்குப் பிடித்த உணவைச் சாப்பிடும் போதும் நாம் ஒரு போட்டியில் வெற்றி பெறும்போதும் பிடித்த பாடலைக் கேட்கும் போதும் நமக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.

இந்த மகிழ்ச்சிக்குக் காரணம் நமது மூளையில் நடக்கும் சில அற்புதமான விஷயங்களால்தான்! நாம் இசையைக் கேட்கும் போதும் பிடித்த உணவைச் சாப்பிடும்போதும் 'டோபமைன்' என்கிற மகிழ்ச்சி ஹார்மோனை நம் மூளை சுரக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது.

நாம் கேட்கும் பாடல்கள் நம் இனிமையான நினைவுகளை நினைவூட்டுகின்றன. நம் உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது மோட்டார் கார்டெக்ஸ். இசையின் தாளமும் மூளையின் இயக்கப்பகுதியும் சேரும்போது நம் உடல் தானாகவே இயங்கத் தொடங்குகிறது.

அதனால்தான் நாம் தலையை ஆட்டுகிறோம், கால்களைத் தட்டுகிறோம். எனவேதான், நாம் சோகமாக இருக்கும்போதுகூட இசையைக் கேட்டால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இது நம் மூளையின் சிறந்த செயல்பாடு.

மண் எவ்வாறு உருவாகிறது? ஏன் வெவ்வேறு வண்ணங்களில் இருக்கிறது, டிங்கு?பா. மித்ரன், 3-ம் வகுப்பு, ராமநாதன் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, காரைக்குடி.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெரிய பாறைகள் வெயிலாலும் காற்றாலும் மழையாலும் பனியாலும் மெதுவாக விரிசலடைந்து, சிறு துகள்களாக மாறுகின்றன. இவற்றோடு இறந்த தாவரங்கள், விலங்குகளின் எச்சங்கள் எல்லாம் சேர்ந்து மட்குகின்றன.

இதில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளும் கலக்கின்றன. இவ்வாறு ஒரு செ.மீ. மண் உருவாக குறைந்தது 200 முதல் 400 ஆண்டுகள் ஆகலாம். பழங்காலப் பாறைகளின் தன்மைகள், அங்கு நிலவும் காலநிலை, மண்ணில் கலந்துள்ள வேதிப் பொருள்கள் போன்றவற்றின் காரணமாக மண்ணின் நிறம் மாறுபடுகிறது.

மண் சிவப்பாக இருந்தால் அதில் இரும்புத் தாது அதிகமாக இருகும். எரிமலைக் குழம்பால் உருவான பாறைகளில் இருந்து கிடைக்கும் மண் கறுப்பாக இருக்கும். இரும்புத்தாதுடன் நீர் சேரும்போது மஞ்சள் வண்ண மண் உருவாகும், மித்ரன்.

SCROLL FOR NEXT