மாயா பஜார்

மழையைக் கொண்டுவந்த காகிதக் கப்பல்! | சூடான் நாட்டுப்புறக் கதை

ஷாராஜ்

நைல் நதியால் வளமான சூடான் நாட்டின் நூபியன் பகுதியில் அமைந்திருந்தது அந்தச் சிறிய கிராமம். நூபியன் மக்களுக்கு நைல் வெறும் நீர் அல்ல; அதுவே வாழ்வளிக்கும் கடவுள். ஆனால், பல பருவங்களாக வானம் கருணை காட்டவில்லை. நைல் நதி ஆக்ரோஷத்துடன் நுரைத்துப் பாய்வதற்குப் பதிலாக, மெலிந்து சோகத்துடன் ஊர்ந்துகொண்டிருந்தது. நதிப்படுகையில் பாறைகள் தெரிந்தன. நிலம் வெடித்தது, பயிர்கள் கருகின, கிராமத்தின் மகிழ்ச்சியும் வறண்டுபோனது.

மக்கள் நதிக்கரையில் கூட்டுப் பிரார்த்தனைகளும் சடங்குகளும் செய்தனர். ஆனால், மழை மேகங்கள் வானில் தோன்றவே இல்லை. அந்தக் கிராமத்தில் ஃபரிதா என்கிற சிறுமி இருந்தாள். அவள் கிராமத்தில் உள்ள எல்லாரையும்விட நம்பிக்கை மிகுந்தவள். நாள்தோறும் நைல் நதிக்குச் சென்று, “வாழ்வின் தாயே, நைல் நதியே! நீ மீண்டும் நிறைந்து, எங்கள் நிலத்துக்கு வளம் சேர்க்க வேண்டும்” என்று பிரார்த்தனை செய்வாள்.

ஒரு நாள் ஃபரிதா களைத்துப்போய் நதிக்கரையில் இருந்த பேரீச்சம் பழ மரத்தின் அடியில் தூங்கிவிட்டாள். கனவில் வந்த நைல் நதி, ‘ஃபரிதா, உன் கிராமத்தின் நம்பிக்கை வறண்டுவிட்டது. என் தந்தையான மழைக் கடவுள் மாநூருக்கு நீ செய்தி அனுப்பினால், அவர் உன் கிராமத்துக்கு மழையை அருள்வார்’ என்று கூறியது. ஃபரிதா திடுக்கிட்டு விழித்தாள்.

‘மழைக் கடவுள் மாநூருக்கு எப்படிச் செய்தி அனுப்புவது? அவர் வானில் கழுகுகூடப் பறந்து செல்ல இயலாத உயரத்தில் அல்லவா இருப்பார்!’

அவள் தனது நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு தாளைக் கிழித்து, அதில் தனது கிராமத்தின் துயர நிலையை விளக்கியும் மழை அருளுமாறு வேண்டியும் மாநூருக்கு உருக்கமான கடிதம் எழுதினாள். அதைக் காகிதக் கப்பலாக ஆக்கி, நைல் நதியில் மிதக்கவிட்டாள்.

“நைல் நதியே, எங்கள் நிலங்களை வளப்படுத்தி, எங்களை வாழ வைக்கும் தாயே! எங்கள் கிராமத்துக்காக எனது கோரிக்கையை உன் தந்தையிடம் சேர்த்துவிடு!”

காகிதக் கப்பல் நைல் நதியின் நீரோட்டத்தில் மிதந்து தன் பயணத்தைத் தொடங்கியது. இதைப் பார்த்து மக்கள் கேலி செய்தனர்.

“ஃபரிதா ஒரு காகிதக் கப்பலை நம்பியிருக்கிறாள்! இது எப்படி மழையைக் கொண்டு வரும்?”

“மழைக்காலத்தில் தெரு நீரில் சிறிது தூரம் சென்றாலே காகிதக் கப்பல் நனைந்து சிதைந்துவிடும். ஆற்றில் விட்டால் என்னாகும்?”

“அப்படி எல்லாம் ஆகாவிட்டாலும், காகிதத்தில் மழையைப் பொட்டலம் கட்டி எடுத்து வர முடியுமா?”

எல்லாரும் சிரித்தனர். ஆனால், ஃபரிதாவுக்கு மட்டும் நம்பிக்கை இருந்தது.

அவளது காகிதக் கப்பல் நைல் நதியில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டது. அது நீரில் நனைந்து ஊறிச் சிதையவில்லை. நீர்ச்சுழல்களில் சிக்கியபோதும், பாறைகளில் மோதியபோதும் உருக்குலையவில்லை. நதி நீரோட்டத்தின் மீது ஒயிலாக மிதந்து சென்றது.

பல வாரங்கள் பயணித்த பிறகு, நைல் நதியின் இறுதி எல்லையான, மழைக் கடவுள் மாநூரின் உலகத்தைக் காகிதக் கப்பல் அடைந்தது. நைல் நதி ஒரு பிரகாசமான திரவ மனிதனாக உருப்பெற்று, தன் தந்தையான மாநூரின் சிம்மாசனத்தின் முன் நின்றது. அப்போது அங்கே ஃபரிதாவால் எழுதப்பட்ட காகிதக் கப்பல் மிதந்து வந்தது.

அதைக் கண்டு வியந்த மாநூர், "மகனே, இது என்ன?" என்று வினவினார். “தந்தையே, இது கிராமத்துச் சிறுமி உங்களிடம் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை. அவளது நம்பிக்கையே இவ்வளவு தூரம் அதைக் கொண்டு வந்திருக்கிறது” என்றது நைல்.

மாநூர் அந்தச் சிறிய கப்பலின் எளிமையையும் ஃபரிதாவின் தன்னலமற்ற பொதுநலப் பிரார்த்தனையையும் பார்த்து மனம் நெகிழ்ந்தார். உடனடியாக நூபியன் கிராமத்தை நோக்கி விரையுமாறு கார்மேகங்களுக்கு உத்தரவிட்டார்.

வறண்ட நைல் நதிக்கரையில் சோகமாக அமர்ந்திருந்த கிராம மக்கள், வானில் திரண்ட கரிய மேகங்களைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அடுத்த கணமே, பெருமழை கொட்டலாயிற்று. வறண்ட பூமியின் வெடிப்புகள் மூடின. நதி மீண்டும் பழைய உற்சாகத்துடன் பாய்ந்தது. மக்கள் மகிழ்ச்சியில் ஆடிப் பாடினர்.

கிராமத் தலைவர் ஃபரிதாவின் வீட்டுக்குச் சென்று, “ஃபரிதா, உன்னைக் கேலி செய்த எங்களை மன்னித்துவிடு” என்றார். அன்று முதல் ஒவ்வோர் அறுவடையின் போதும் நூபியன் மக்கள் காகிதக் கப்பலில் தங்களின் நன்றியையும் நம்பிக்கையையும் எழுதி, நைல் நதியில் மிதக்கவிடுவதை வழக்கமாக வைத்திருகிறார்கள்!

SCROLL FOR NEXT