

யுபிஐ (Unified Payments Interface - ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண இடைமுகம்) என்பது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக மாறியிருப்பதை அறிவோம். நாட்டின் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 85% யுபிஐ மூலமே நடப்பதால் காகிதப் பணப்பரிவர்த்தனையைக் குறைக்கும் நோக்கம் ஏறக்குறைய இலக்கை நெருங்கியுள்ளதாகக் கருத வேண்டியுள்ளது.
யுபிஐ வளர்ச்சி: கடந்த 10 ஆண்டுகளில் யுபிஐ-யின் இந்த அசுர வளர்ச்சிக்காக மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டது. இதனால் நகர்ப்புறத்தில் இருந்து கிராமங்களுக்கும் யுபிஐ பயன்பாடு விரிவடைந்தது. திறன்பேசிப் புழக்கம் அதிகரித்ததன் விளைவாக யுபிஐ-யும் தன்னைத் திடமாக நிலைநிறுத்திக்கொண்டது. மேலும், பூஜ்ஜிய எம்டிஆர் (zero MDR) கொள்கை நடைமுறையில் இருந்ததால் வணி்க நிறுவனங்களும் இதை நோக்கி இழுக்கப்பட்டன.
இந்தியாவில் தனியார் யுபிஐ பரிவர்த்தனை நிறுவனங்களே ஏகபோகமாக உள்ளன. அதிகமான தனியார் வங்கிகள் மூலமாக இவை செயலாற்றுகின்றன. பொதுத் துறை வங்கிகளின் பங்களிப்பு இதில் மிகக் குறைவு. 30% வரையிலான பரிவர்த்தனைகளை மட்டுமே தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்கிற தேசிய பரிவர்த்தனைக் கழகத்தின் (National Payments Corporation of India) முக்கியமான வழிகாட்டுதல் இருந்தாலும், இதைக் கண்காணிப்பதற்கு ஏற்பாடுகள் இல்லை.