நாம் உயிர் வாழ ஆக்சிஜன் அவசியம். இந்த ஆக்சிஜனைக் கண்டறியும் முயற்சிகள்தான் நவீன வேதியியல் அறிவுத் துறை உருவாக வித்திட்டன. இந்த உலகம் நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு பூதங்களால் ஆனது என்று இரண்டாயிரம் ஆண்டுகளாக மேற்கத்திய உலகம் நம்பிவந்தது.
மத்தியக் காலக்கட்டத்தில் ரசவாதம் எனும் புதிய சிந்தனை உருவாகி அறிவியல், தத்துவம், மாந்திரீகம் மூன்றையும் இணைத்தது. சாதாரண உலோகத்தைத் தங்கமாக மாற்றுவது, சாகாவரம் தரும் மருந்தைக் கண்டறிவது போன்ற வேலைகளில் ரசவாதிகள் ஈடுபட்டனர். இவர்கள்தான் வேதியியல் ஆய்வுகளுக்கு முன்னோடிகள்.
1700களில்தான் தர்க்கரீதியான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. ஜார்ஜ் ஏர்னஸ்ட் ஸ்டால் எனும் ஆய்வாளர், ப்ளாஜிஸ்டன் (phlogiston) எனும் மர்மப் பொருள் ஒன்று இருப்பதாகக் கூறினார். பெரும்பாலான பொருள்களில் இந்த ப்ளாஜிஸ்டன் இருக்கிறது.
அந்தப் பொருள்கள் எரியும்போது ப்ளாஜிஸ்டன் வெளியேறி காற்றில் கலக்கிறது. மீதம் இருப்பது சாம்பலாகிறது (Calx) என்றார். ஒரு பொருளுக்கு எரியும் தன்மை இல்லை என்றால் அதில் ப்ளாஜிஸ்டன் இல்லை என அர்த்தம் என்றார். இதை அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டது. இதன் அடிப்படையிலேயே அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜோசப் பிளாக் எனும் ஆய்வாளர் தன் ஆய்வுக்கூடத்தில் புதிய வாயு ஒன்றைக் கண்டறிந்தார். அந்த வாயு ஒரு மெழுகுவர்த்தியை அணைத்துவிட, அந்த வாயுவுக்கு அழுத்தம் இருப்பதையும் அறிந்து, அதற்கு Fixed Air எனப் பெயரிட்டார். அதுதான் இன்றைக்கு கார்பன்-டை-ஆக்சைடு என அறியப்படுகிறது.
1766இல் ஹென்றி கேவண்டிஷ் எனும் விஞ்ஞானியும் புதுவித வாயு ஒன்றைக் கண்டறிய, அந்த வாயு தீயை அணைக்குமா என்று பரிசோதித்தார். அதுவோ தீயைக் கொழுந்துவிட்டு எரிய வைத்தது. உடனே இதற்குப் ‘பற்றி எரியும் காற்று’ என்று பெயர் சூட்டினார். அது ஹைட்ரஜன்.
இதன் தொடர்ச்சியாக வந்த ஜோசப் பிரிஸ்ட்லி, 10க்கும் மேற்பட்ட வாயுக்களைக் கண்டறிந்தார். அதில் ஒன்றாகப் பாதரச உப்பை (mercury calyx) ஒரு ஜாடியில் போட்டு எரித்தபோது, வாயு ஒன்று வெளியானது. அந்த ஜாடியில் எலியை விடும்போது சாதாரணமாக 15 நிமிடங்களில் இறந்துவிடும் எலி, 30 நிமிடங்கள் வரை உயிரோடு இருந்தது.
அதேபோல் மெழுகுவத்தியை வைத்தபோது சுடர் நெடுநேரம் எரிந்தது. அதுதான் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன். பிரிஸ்ட்லிக்கு முன்பே 1772இல் ஆக்சிஜனைத் கண்டறிந்தவர் ஸ்வீடனைச் சேர்ந்த கார்ல் வில்ஹம் ஷீல். ஆனால் அவர் தன் ஆய்வை 1777 வரை வெளியிடவில்லை என்பதால் 1774இல் கண்டறிந்த பிரிஸ்ட்லி முந்திக்கொண்டார்.
ஆனாலும் பிரிஸ்ட்லி ஆக்சிஜனை ப்ளாஜிஸ்டன் கொள்கையுடன் இணைத்தே வெளிப்படுத்தியதால், அதில் குறைபாடுகள் இருந்தன. அதைத் தவறு என்று நிரூபித்து புதிய வேதியியல் கொள்கைகளுக்கு வித்திட்டவர், அந்துவான் லவாய்சியே (Antoine Lavoisier).
லவாய்சியே பிரான்ஸில் பிறந்தவர். புவியியல், இயற்பியல், கணிதம் என்று பல துறைகளில் ஆர்வம் காட்டியவர். அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டார். குறிப்பாக விவசாயிகளிடம் வரிவசூல் செய்யும் ஃபார்ம் ஜெனரல் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தார். அப்போது புகையிலை விவசாயம் பெரிய லாபம் தரும் தொழிலாக இருந்தது.
அதன் தரத்தை மேம்படுத்தும் ஆய்வுகளில் லவாய்சியேவை ஈடுபடுத்தியது. அவரோ, புகையிலை ஆய்வை முடித்துவிட்டு, தனக்கு விருப்பமான ஆய்வுகளிலும் ஈடுபட்டார். குறிப்பாக ஆக்சிஜன் குறித்த அவரது ஆய்வு அறிவியல் உலகையே மாற்றி அமைத்தது.
லவாய்சியே, தன் ஆய்வுக்கூடத்தில் முதலில் பாதரசத்தைச் சுடவைத்தார். அதிலிருந்து பாதரச உப்பு உருவாவதை அறிந்தார். பாதரசத்துடன் ஒப்பிடும்போது அதன் எடை கூடியிருப்பதையும் கவனித்தார். அதன்பிறகு அந்தப் பாதரச உப்பை மறுபடியும் சுடவைத்தார். இப்போது அது மீண்டும் பாதரசமாக மாறியது.
இதைக் கவனித்தபோது அதன் எடை பழையபடி ஆனதுடன், புதுவித வாயு ஒன்றையும் வெளியேற்றியது. அந்த வாயுவை மெழுகுவத்தியின் மேல் செலுத்த, சுடர் நீண்ட நேரம் எரிந்தது. இது அவருக்குச் சில உண்மைகளைக் காட்டியது.
முதலில் ப்ளாஜிஸ்டன் கொள்கையின்படி ஒரு பொருள் எரியும்போது ப்ளாஜிஸ்டன் வெளியேறும் இல்லையா? அப்படி வெளியேறினால் எரிந்த பொருளின் எடை குறைய வேண்டும். ஆனால் பாதரசம், பாதரச உப்பாக மாறியவுடன் அதன் எடை கூடுகிறது. அப்படி என்றால் ப்ளாஜிஸ்டன் என்கிற ஒன்று வெளியேறவில்லை. வேறு ஏதோ ஒன்று கூடியிருக்க வேண்டும் என்று உணர்ந்தார்.
அது என்னவாக இருக்கும் என்று தேடியபோது, பாதரச உப்பைச் சுடவைத்தபோது அது மீண்டும் பாதரசமானதுடன் புதிய வாயு ஒன்றும் உருவானது அல்லவா? அந்த வாயுதான் வேதிவினையின்போது பாதரசத்துடன் சேர்ந்து உப்பாக மாறி இருக்க வேண்டும். அதுதான் பாதரச உப்பு எடை கூடுதலாக இருக்கக் காரணம் எனப் புரிந்துகொண்டார் லவாய்சியே.
மேலும் அந்த வாயு தீயை நீண்ட நேரம் எரியவைக்கிறது என்றால், அந்த வாயுதான் பாதரசம் எரிவதற்கும் காரணமாக இருந்திருக்க வேண்டும். அப்படி என்றால் ப்ளாஜிஸ்டன் வெளியேறும்போது பொருள் எரிகிறது என்பது தவறு. மாறாக இந்த வாயு இருப்பதால்தான் தீ எரிகிறது. இதனால் ப்ளாஜிஸ்டன் கொள்கையே தவறு என்று கூறினார்.
இந்தப் புதிய வாயுவுக்கு அமிலம் அவசியமாக இருப்பதாக லவாய்சியே கருதியதால், ‘அமிலம் உருவாக்கி’ என்று அர்த்தம் தரும் கிரேக்கச் சொல்லில் ‘ஆக்சிஜன்’ எனப் பெயரிட்டார். இத்துடன் இன்னொரு கூற்றையும் முன்மொழிந்தார் லவாய்சியே.
இந்த வேதி ஆய்வுகளின்போது பழையப் பொருள்கள் அழிந்து புதிய பொருள்கள் உண்டாவதில்லை. பழைய பொருள்களின் உருவமும் குணமும் மட்டுமே மாறுகின்றன என்றார். இதுவே நிறைமாறா விதி (Law of conservation of Mass) என அறியப்படுகிறது.
அத்துடன் அவரது ஆய்வுகள் நிற்கவில்லை. ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் ஒன்றாகச் சுடவைக்கும் போது நீர்த்துளிகள் உருவாவதைப் பார்த்தார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது நீரும் அடிப்படை பூதம் இல்லை, நெருப்பும் அடிப்படை பூதம் இல்லை.
ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்றவைதான் அடிப்படை பூதங்கள் என்று கூறி, அவற்றுக்குத் தனிமங்கள் (Elements) என்று பெயர் சூட்டினார். மேலும் இந்தத் தனிமங்கள் கலந்தால் சேர்மங்கள் (Compounds) உண்டாகின்றன என்றார்.
இந்தத் தனிமங்கள் எப்படிக் கலக்கின்றன என்பதை அறியக் கணிதக் குறிப்பு தேவை என்று கணிதச் சமன்பாடுகளையும் வேதியியலுக்குள் புகுத்தினார். இவ்வாறு நவீன வேதியியல் பிறக்க லவாய்சியே காரணமானார்!
(திருப்புமுனையைக் காண்போம்)
- tnmaran25@gmail.com