சூரியனா, பூமியா? - சூரியமையக் கோட்பாடு | அறிவியல் திருப்புமுனைகள் 04

சூரியனா, பூமியா? - சூரியமையக் கோட்பாடு | அறிவியல் திருப்புமுனைகள் 04
Updated on
3 min read

சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது. இப்படி யாராவது சொன்னால் என்ன நினைப்பீர்கள்? பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று குழந்தைக்குக்கூடத் தெரியும் என்று சொல்வீர்கள்தானே? ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அறிஞர்களுக்குக்கூட இது தெரியாது.

பொ.ஆ.(கி.பி.)1500கள் வரை பூமியே அண்டத்தின் மையம், அதைச் சுற்றியே சூரியனும் பிற கோள்களும் வலம்வருகின்றன என உலகம் நம்பிக்கொண்டிருந்தது. இது புவிமையப் பார்வை (Geo-Centric) என அறியப்பட்டது. இவ்வாறு நம்பியதற்குக் காரணமும் இருந்தது.

நாம் பூமியில் இருந்தபடி வானத்தைப் பார்த்தால் சூரியன், நிலவு, நட்சத்திரங்கள் போன்றவை நகர்வதுபோலத் தெரியும். ஆனால் நாம் நின்றுகொண்டிருக்கும் பூமியோ கொஞ்சமும் நகராமல் அப்படியே இருப்பதாகத் தோன்றும். இதனால்தான் பூமி நிலையானது, அதனை மற்ற கோள்கள் சுற்றுகின்றன என்றார் அரிஸ்டாட்டில். இதையே சிந்தனை உலகம் ஏற்றுவந்தது.

ஆனால் நாம் பூமியில் இருக்கும்போது வானமும் பிற கோள்களும் நகர்வதுபோல் தோன்றுவதற்குக் காரணம், தோற்ற மயக்கம் (Apparent Motion). அந்தப் புரிதல் அப்போது இல்லை. அரிஸ்டாட்டிலுக்குப் பிறகு வந்த தாலமி, இந்தக் கோட்பாட்டைக் கொஞ்சம் சீர்படுத்தினார்.

கோள்கள் ஒருபக்கம் சிறிய வட்டத்தில் சுற்றியபடியே (Epicycles) பூமியையும் சுற்றுகின்றன. ஆனால், அவை பூமியை மையமாக வைத்துச் சுற்றவில்லை. பூமிக்கு அருகில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு புள்ளியைச் (Equant) சுற்றுகின்றன என்றார்.

தாலமியின் இந்தக் கருத்தே பல ஆண்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. இதை யாரும் மறுக்க முடியவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. அப்போதைய காலக்கட்டத்தில் கிறிஸ்துவ திருச்சபையிடம்தான் ஆட்சி அதிகாரம் இருந்தது.

திருச்சபை ஆள்களே பெரும்பாலும் அறிவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டனர். அவர்கள் பைபிள் நூலை ஏற்றவர்கள் என்பதால், அதில் பூமி மாறாமல் நிலையாக இருக்கிறது என்று கூறப்பட்ட கருத்துகளையே நம்பிவந்தனர். இந்த நம்பிக்கையே அறிவியலிலும் வெளிப்பட்டது.

மேலும், அந்த நேரத்தில் கிறிஸ்துவ மதத்துக் குள்ளேயே பூசல் ஆரம்பித்திருந்தது. அப்போது ஐரோப்பா முழுவதும் பின்பற்றி வந்த ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்துவத்தை மார்டின் லூதர் எனும் மதபோதகர் எதிர்த்தார். கத்தோலிக்கத்தில் பைபிளைவிட அதைப் பின்பற்றிய தலைவர்களுக்கே அதிக அதிகாரம் இருப்பதாகவும், கத்தோலிக்க நிர்வாகம் ஊழல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதில், பைபிளே முழு அதிகாரம் படைத்தது என்பது போன்ற சில கொள்கைகளை முன்வைத்தார். அவரது கொள்கைகள் பல இடங்களுக்குப் பரவின. சீர்த்திருத்த கிறிஸ்துவம் எனும் புதிய பிரிவு உருவானது. கிறிஸ்துவம் இரண்டு பிரிவுகளாக உடைந்தது.

இப்போது யார் உண்மையான கிறிஸ்துவர்கள் என்று இரு பிரிவினரும் மோதிக்கொண்டனர். நாங்கள்தான் பைபிளை உண்மையாகப் பின்பற்றுபவர்கள் என்று பைபிள் கருத்துகளை எதிர்த்தவர்களை எல்லாம் தண்டித்தனர் திருச்சபையினர். இதனால் பைபிள் கருத்துகளின் அடிப்படையிலேயே வானியல் கருத்துகளும் ஏற்கப்பட்டன.

பூமியே அண்டத்தின் மையம் என்கிற கருத்து நீடித்தது. ஆனாலும் திருச்சபையில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையே புவிமையவாத கருத்துக்குக்கு மறைமுகமாக முடிவுரை எழுதியது. கிறிஸ்துவர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுவதை அறிந்திருப்போம்.

இன்றைக்கு காலண்டரில் பார்த்து என்றைக்கு ஈஸ்டர் என்று தெரிந்துகொள்கிறோம். ஆனால் அன்றைக்கு ஒவ்வோர் ஆண்டும் திருச்சபைதான் ஈஸ்டர் பண்டிகையை அறிவிக்கும். வசந்தகாலத்தில் சூரியன் நிலநடுக்கோட்டுக்கு மேல் வரும் நாளுக்குப் (vernal equinox) பிறகு வரும் முதல் பெளர்ணமியை ஒட்டிய ஞாயிற்றுக்கிழமையே ஈஸ்டர் பண்டிகை நாளாக அறியப்படும்.

இவ்வாறு சூரியன் நிலநடுக்கோட்டுக்கு மேல் வரும் நாளை மார்ச் 21 என்று திருச்சபை நிர்ணயித்து வைத்திருந்தது. இதில் ஒரு பிரச்சினை இருந்தது. அன்றைக்கு மனிதர்கள் பயன்படுத்தி வந்த ஜூலியன் காலண்டரில் ஓர் ஆண்டு என்பது 365.25 நாள்கள்.

ஆனால், சூரியன் ஒருமுறை நிலநடுக்கோட்டில் தொடங்கி மீண்டும் அந்த இடத்துக்கு வருவதற்கு ஆகும் காலம் 365.24 நாள்கள். அதாவது, 11 நிமிடங்கள் கூடுதல். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21ஐ கணக்கிட்டு ஈஸ்டர் அறிவிக்கப்பட்டதால் இந்த 11 நிமிடங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒருகட்டத்தில் உண்மையாகச் சூரியன் நிலநடுக்கோட்டுக்கு மேல் வரும் நாள் திருச்சபை சொல்லிவந்த நாளுக்கு முன்பே வந்துகொண்டிருந்தது.

இந்தப் பிரச்சினையைத் தீர்த்து சரியான ஈஸ்டரைக் கண்டறிய ஒரு வானியல் நிபுணரை நியமித்தது திருச்சபை. அவர்தான் நிகோலஸ் கோபர்நிகஸ். கோபர்நிகஸ் திருச்சபையில் பணியாற்றி வந்த அதிகாரி. கூடுதலாக அறிவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுவந்தார்.

கோபர்நிகஸ் அவருக்கு முன் இருந்த இந்திய, அரபி வானியலாளர்கள் எழுதிய நூல்கள் அனைத்தையும் படித்தார். அவர்கள் புவிமையக் கோட்பாட்டில் இருக்கும் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி, வகுத்த கணிதக் கோட்பாட்டினை ஆராய்ந்தார். அதன் அடிப்படையில் புதிய கோட்பாட்டை உருவாக்கினார்.

அவரால் ஈஸ்டர் பண்டிகை பிரச்சினைக்கான தீர்வைக் கண்டடைய முடியவில்லை. ஆனால், சூரியன் பூமியைச் சுற்றவில்லை; சூரியனைத்தான் பூமியும் பிற கோள்களும் சுற்றுகின்றன என்கிற உண்மையைக் கண்டறிந்தார். ஆயிரம் ஆண்டுகள் நம்பப்பட்டு வந்த புவிமையக் கோட்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சூரியமையக் கோட்பாட்டை (Helio-Centric) நிறுவினார்.

இந்தக் கருத்தை ஆரம்பத்தில் திருச்சபை கண்டு கொள்ளவில்லை என்றாலும், பின்னாளில் கடுமையாக எதிர்த்தது. கோபர்நிகஸுக்குப் பிறகு வந்த கெப்லர், சில நேரம் கோள்கள் வேகமாகவும், சில நேரம் மெதுவாகவும் வானில் வலம்வருகின்றன. இதற்குக் காரணம் கோள்களின் சுற்றுப்பாதை வட்டம் கிடையாது; நீள்வட்டம் என்று கூறினார்.

அதன்பின் வந்த கலிலியோ 1609இல் தொலை நோக்கியைப் பயன்படுத்தி நிலவில் மலைகள், பள்ளதாக்குகள் இருப்பதைக் கண்டறிந்தார். வியாழனுக்குத் தனியாக நிலவுகள் இருப்பதையும் அறிந்தார். இதன்மூலம் வானில் வெளிச்சமாகத் தோன்றும் கோள்கள் உண்மையில் வெறும் ஒளி அல்ல; அவை தனி உலகம் என்றார்.

குறிப்பாக வெள்ளிக் கோளை ஆராய்ந்த அவர், நிலவு எவ்வாறு வளர்வதும், தேய்வதுமாக நமக்குத் தோன்றுகிறதோ அதேபோல பூமியில் இருந்து பார்க்கும்போது வெள்ளியும் தேய்வதும் வளர்வதும்போலத் தெரியும்.

இதற்குக் காரணம், சூரியனை வெள்ளியும் பூமியும் சுற்றுவதே என கோபர்நிகஸின் கோட்பாடுக்கு வலுவூட்டினார். இதனால் ஆத்திரமடைந்த திருச்சபை கலிலியோவைக் கைது செய்து வீட்டுச்சிறையில் வைத்தது.

அதன்பின் வந்த ஐசக் நியூட்டன் கோள்கள் வலம் வருவதற்குக் காரணம் ஈர்ப்புவிசை என்கிற கருத்தை முன்வைத்தார். இவ்வாறு அதன்பின் வந்த ஒவ்வோர் ஆய்வும் பல ஆண்டுகள் நிலவிவந்த அண்டம் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றி அமைத்தபடி இருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் வித்திட்டது சூரியமையக் கோட்பாடு.

இன்றைக்கு இந்த வானியல் உண்மைகளின் அடிப்படையில்தான் நிலவு உள்ளிட்ட பல இடங்களுக்கு விண்கலங்களை நாம் அனுப்புகிறோம். பிற கோள்களை ஆராய்கிறோம். அண்டத்தை அறிகிறோம்.

சூரியமையக் கோட்பாடு அண்டத்தின் உண்மைகளை மட்டுமல்ல; அதில் மனிதரின் இடம் என்ன என்பதையும் சுட்டுகிறது. நம்மை மையப்படுத்தியே உலகம் இயங்குகிறது என்கிற உண்மையை மாற்றி, நாம் இவ்வளவு பெரிய அண்டத்தில் சிறிய புள்ளிதான். பூமி கோடிக்கணக்கான கோள்களில் ஒன்றுதான் என்கிற பணிவை நமக்கு ஏற்படுத்துகிறது.

(திருப்புமுனையைக் காண்போம்)

- tnmaran25@gmail.com

சூரியனா, பூமியா? - சூரியமையக் கோட்பாடு | அறிவியல் திருப்புமுனைகள் 04
நீங்களும் ஒரு ஆர்ட்டிஸ்ட்! | இளம் தொழில்முனைவோர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in