இரண்டு முயல் குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்தன. தாய் முயல் அவற்றைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு நிழலைக் கண்டதும் நரிதான் என்று அஞ்சிய முயல், தன் குட்டிகளை அழைத்தது. “முயல்களும் மான்களும் வாங்க.
காட்டில் உள்ள அனைத்துக் குட்டிகளுக்கும் ஆபத்து. பக்கத்துக் காட்டில் உள்ள தாய்கள் எல்லாம் தங்கள் குட்டிகளை இழந்து, அழுதுகொண்டிருக்கின்றன. காரணம், ஏதோ ஒரு மர்ம விலங்கு குட்டிகளைக் குறிவைத்து, இரையாக்கிக் கொள்கிறதாம். எனவே, நீங்கள் எல்லாம் கவனமாகக் குட்டிகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றது நரி.
மான்கள், மாடுகள், பூனைகள், யானைகள் எல்லாம் நரி சொன்னதைக் கேட்டு அஞ்சின. உடனே நரியை அழைத்துக்கொண்டு, சிங்கராஜாவிடம் சென்றது முயல். “மன்னா, இந்த நரி கூறுவதைக் கேட்கும்போதே உடல் நடுங்குது.” “என்ன விஷயம்?” “மன்னா, நான் பக்கத்துக் காட்டைச் சேர்ந்தவன்.
என் நான்கு குட்டிகளைப் பறிகொடுத்தவன். எங்கள் காட்டில் உள்ள அத்தனை சிறு விலங்குகளையும் மர்ம விலங்கு ஒன்று எடுத்துச் சென்றுவிடுகிறது. எங்கள் மன்னரிடம் முறையிட்டோம். கண்டறியவே முடியவில்லை” என்று சொல்லிவிட்டு அழுதது நரி.
“எங்களை எச்சரித்ததற்கு நன்றி. சாப்பிட்டுவிட்டு வா” என்று சிங்கராஜா சொன்னதும், நரியை அழைத்துச் சென்றது கழுதை. மற்ற விலங்குகளை எல்லாம் தங்கள் இருப்பிடத்துக்குப் போகச் சொன்னது சிங்கராஜா. சற்று நேரத்தில் நரி நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, நடக்க முடியாமல் நடந்து வந்தது. “எங்களுக்கு உதவிய நீ, இரண்டு நாள்கள் என் குகையில் தங்கி, விருந்துண்டு செல்ல வேண்டும்” என்றது சிங்க ராஜா.
“தங்களின் விருப்பப்படியே தங்குகிறேன் மன்னா” என்று மகிழ்ந்தது நரி. சிங்கராஜா குகையில் நரி இருந்த இரண்டு நாள்களிலும் எந்த விலங்கும் தங்கள் குட்டிகளை மர்ம விலங்கிடம் பறிகொடுத்ததாகப் புகார் வரவில்லை. அன்று இரவு தாய் முயல் மன்னரைக் காண ஒடிவந்தது.
“மன்னா, அவசரம். நான் அந்த மர்ம விலங்கைப் பார்த்துவிட்டேன். சொல்லவே, அச்சமாக இருக்கிறது. உடனே வாருங்கள்” என்றதும் கழுதையையும் நரியையும் அழைத்துக்கொண்டு முயல் சொன்ன இடம் நோக்கிச் சென்றது சிங்கராஜா. “என்ன நரியே, இதுதான் மர்ம விலங்கா?” என்றதும், நரி “ஆமாம்” என்று அழுதது.
காரணம், அந்த மர்ம விலங்கின் இரண்டு கைகளிலும் இரண்டு நரிக் குட்டிகள். அது மரத்தில் அமர்ந்து, குட்டிகளைக் கொஞ்சிக் கொண்டிருந்தது. “ஐயோ, என் குட்டிகளைக் கொன்றுவிடாதே...” “அப்படி என்றால் எனக்கு உணவு?” “நான் தருகிறேன். நரியே, உனக்குத் தாய் வேணுமா, குட்டி வேணுமா” என்று சிங்கராஜா கேட்டதும் குட்டிகள்தான் வேண்டும் என்றது நரி.
“நீ குட்டிகளை விட்டுவிட்டு, தாயை எடுத்துக்கொள்” என்று சிங்கராஜா சொன்னதும் மெல்ல நழுவப் பார்த்த நரியைப் பிடித்து வைத்தது கழுதை. “மர்ம விலங்கே, இறங்கி வா. குற்றவாளியைப் பிடித்துவிட்டேன்” என்று சிங்கராஜா சொன்னதும் அது இறங்கி வந்தது. நரியின் குட்டிகளை ஒப்படைத்தது.
“ஆ... கரடிதான் அந்த மர்ம விலங்கா?” என்று எல்லாம் அதிர்ச்சி அடைந்தன. “நண்பர்களே, கரடி அல்ல. இந்த நரிதான் அந்த மர்ம விலங்கு. இரண்டு நாள்கள் என் குகையில் நரி தங்கியிருந்தபோது எந்தக் குட்டியும் வேட்டையாடப் படவில்லை.
இப்போது தாய் இரையாகப் போகிறது என்றவுடன் தப்பிக்கப் பார்த்தது.” “அடப்பாவி, பக்கத்துக் காட்டில் உள்ள குட்டிகளை எல்லாம் வேட்டையாடிவிட்டு, இங்கே வந்திருக்கே... இதுக்குச் சரியான தண்டனை கொடுங்கள் மன்னா” என்றது முயல்.
“இதுவரைதான் செய்த செயலுக்கு மன்னிப்புகூடக் கேட்கவில்லை. பக்கத்துக் காட்டு மன்னருக்குச் செய்தி அனுப்பி வைக்கிறேன். அவர்களே தண்டனை அளிக்கட்டும்.
அவர்கள் வரும்வரை நரியை இந்த மரத்தில் கட்டி வையுங்கள். விதவிதமான உணவு வகைகளை நரியின் கண் முன்னே சாப்பிடுங்கள். இதுதான் நான் அளிக்கும் தண்டனை” என்றது சிங்கராஜா.நாவில் நீர் சுரக்க, மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தது, நரி.
- முருகன்