மாயா பஜார்

அம்மா எங்கே? | கதை

கீர்த்தி

செண்பகக் காட்டில் ஓர் அணிலுக்கு இரண்டு குஞ்சுகள் பிறந்தன. அணில் தன் குஞ்சுகள் மீது மிகவும் அன்பாக இருந்தது. நாள்தோறும் அணில் வெளியே சென்று உணவு தேடும். தான் தேடிய உணவைத் தன் வசிப்பிடத்திற்குக் கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும்.

அணிலின் குஞ்சுகள் சற்று வளர்ந்தன. ஆனாலும் அவை வெளியே செல்வதற்கான வயது இன்னும் வரவில்லை. அவை நாள்தோறும் மரப்பொந்தின் வாசலுக்கு வந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

அம்மா அணில் தினமும் காலையில் உணவு தேடி வெளியே செல்லும்போது அக்கம்பக்கத்திலுள்ள பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் காலை வணக்கம் சொல்வதையும், வீட்டுக்குத் திரும்பி வரும்போது மாலை வணக்கம் சொல்வதையும் குஞ்சுகள் கவனித்தன.

கூடவே, சில விலங்குகளும் பறவைகளும் அம்மா அணிலுக்குப் பதில் வணக்கம் சொல்லாமல் தலையைத் திருப்பிக்கொண்டு செல்வதையும் பார்த்தன. அதைக் கண்டு அணில் குஞ்சுகளுக்கு வருத்தமாக இருந்தது. கூடவே அம்மா மீது கோபமும் வந்தது.

அப்போது அம்மா அணில் நிறைய வாதுமைப் பருப்புகளைக் கொண்டுவந்து குஞ்சுகளுக்குக் கொடுத்தது. “அம்மா, தினமும் நீங்கள் வெளியே செல்லும்போது எல்லாருக்கும் வணக்கம் சொல்கிறீர்கள். ஆனால், பலர் உங்களுக்குப் பதில் வணக்கம் சொல்வதே இல்லை. பிறகு எதற்காக மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வணக்கம் சொல்கிறீர்கள்?” என்று கேட்டது அண்ணன் குஞ்சு.

“அவர்கள் நமக்கு வணக்கம் சொல்லாவிட்டால் என்ன? அவர்களைப் பார்த்துச் சிரிப்பதும் வணக்கம் சொல்வதும் நம் பண்பு” என்று சொன்னது அம்மா அணில். “அம்மா, நம்மைக் கண்டும் காணாமல் போகிறவர்களைப் பார்த்து நாம் எதற்காகச் சிரிக்க வேண்டும்? அவர்களுக்கு ஏன் வணக்கம் சொல்ல வேண்டும்? நீங்கள் இப்படி இருப்பதால்தான் பலர் உங்களை அலட்சியப்படுத்துகிறார்கள்” என்று சொன்னது தம்பி குஞ்சு.

“நாம் நமது நல்ல குணத்தை ஒருபோதும் கைவிடக் கூடாது. அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் எப்போதும் நாம் அன்பாகப் பழக வேண்டும். அதனால் எப்போதும் நமக்கு நன்மைதான் நிகழும்” என்று சொன்னது அம்மா அணில்.

“அம்மா, நமக்கான உணவை நாம் தேடிச் செல்கிறோம். நாம் சாப்பிடுகிறோம். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் பழக நமக்கு என்ன தேவை இருக்கிறது?” என்று அணில் குஞ்சுகள் இரண்டும் ஒன்றாகக் கேட்டன. “பிள்ளைகளே, அதெல்லாம் உங்களுக்குத் தானாகப் புரியும். இப்போது இந்த ருசியான வாதுமைப் பருப்புகளை உண்ணுங்கள்” என்று சொல்லிவிட்டுத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கியது அம்மா அணில்.

மறுநாள் காலை அம்மா அணில் உணவு தேடி வெளியே சென்றது. அணில் குஞ்சுகள் இரண்டும் மரப்பொந்தின் வாசலுக்கு வந்து அம்மாவை வழியனுப்பி வைத்தன. அம்மா அணிலும் வழக்கம்போல அருகிலிருந்த விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் காலை வணக்கம் சொன்னபடி சென்றது.

‘இது பலாப்பழம் பழுக்கும் காலம்தானே, பிள்ளைகளுக்கு ருசியான பலாப்பழம் கொண்டுவந்து கொடுத்தால் அவர்கள் விரும்பி உண்பார்களே’ என்று நினைத்தது அம்மா அணில். எனவே, பலாப்பழங்கள் பழுத்துக் கிடக்கும் மலையடிவாரத்தை நோக்கிச் சென்றது.

அம்மா வருகிறாரா என்று அணில் குஞ்சுகள் வெளியே வந்து பார்த்தன. அம்மாவைக் காணவில்லை. பொழுது போய்க்கொண்டே இருந்தது. மாலைப்பொழுது வந்த பிறகும், அம்மா அணில் வீடு திரும்பவில்லை.

குஞ்சுகளுக்குப் பசித்தது. கூடவே அம்மாவைக் காணவில்லையே என்று கவலையும் அச்சமும் வந்தது. “அண்ணா, மாலைப்பொழுது வந்துவிட்டதே. இன்னும் சற்று நேரத்தில் இருட்டிவிடும். அம்மாவைக் காணவில்லையே?” என்று கவலையோடு கேட்டது தம்பி.

“ஆமாம், அம்மா எங்கே போனார்? மாலைக்குள் வந்துவிடுவாரே, ஏன் இன்று தாமதமாகிறது?” என்று சொன்னது அண்ணன். அவர்கள் அவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதே வெளிச்சம் மறைந்து இருட்டத் தொடங்கிவிட்டது.

அணில் குஞ்சுகள் இரண்டும் அம்மாவைக் காணாமல் அழத் தொடங்கின. அந்த நேரத்தில் வெளியே அம்மா அணிலின் குரலும் காகத்தின் குரலும் கேட்டன. அணில் குஞ்சுகள் இரண்டும் மரப்பொந்தின் வாசலுக்கு ஓடிவந்தன.

“அம்மா, ஏன் இவ்வளவு நேரம்? எங்கே போனீங்க?” “பிள்ளைகளே, இன்று உங்களுக்குப் பலாப்பழம் கொண்டு வரலாம் என்று மலையடிவாரத்துக்குச் சென்றேன்.

பழுத்த ஒரு பலாப்பழத்தைக் குடைந்து பலாச்சுளையை எடுக்கும்போது என் தலை பலாப்பழத்திற்குள் சிக்கிக் கொண்டது. என்னால் தலையை வெளியே எடுக்கவே முடியவில்லை...” “ஐயோ, பிறகு எப்படி அம்மா வந்தீர்கள்?” “நான் வழக்கமாக மாலையில் திரும்பி வரும்போது பக்கத்து மரத்தில் வசிக்கும் நண்பன் காகத்துக்கு மாலை வணக்கம் சொல்வேன் அல்லவா? இன்று வெகுநேரமாகியும் நான் திரும்பி வரவில்லையே என்று அவன்தான் என்னைத் தேடி வந்தான்.

பலாப்பழத்திற்குள் சிக்கியிருந்த என்னைக் காப்பாற்றி அழைத்து வந்தான்” என்றது அம்மா அணில். அணில் குஞ்சுகள் இரண்டும் காகத்துக்கு நன்றி சொன்னதோடு, அக்கம்பக்கத்தினரிடம் பழகுவதால் கிடைக்கும் நன்மையையும் உணர்ந்து கொண்டன.

SCROLL FOR NEXT