அன்று பள்ளியில் விதை விழா. ஆசிரியர் ஒரு கூடையுடன் வகுப்பறைக்குள் நுழைந்தார். “குழந்தைகளே, இந்தக் கூடையில் விதைகள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒரு விதை கொடுப்பேன். அதை நீங்கள் வளர்க்க வேண்டும். நன்றாக வளர்ப்பவர்களுக்குப் பரிசு!” “என்ன விதை? என்ன விதை?” என்று மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கேட்டார்கள்.
ஆசிரியர் கூடையிலிருந்து சோள விதைகளையும் பூச்செடி விதைகளையும் எடுத்துக் காட்டினார். மஞ்சுவுக்குச் சுடச்சுட வேகவைத்த சோளத்தைச் சாப்பிடப் பிடிக்கும். அதனால், “எனக்குச் சோள விதை கிடைத்தால், எங்கள் வீட்டுத் தோட்டத்தில் வளர்ப்பேன்!” என்றாள்.
ராகவ் அம்மாவுக்குப் பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். காலையில் எழுந்ததும் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருக்கிற பூக்களை அம்மாவும் மகனும் பார்த்து மகிழ்வார்கள். அவர்கள் தோட்டமே பிருந்தாவனம்போல் அவ்வளவு அழகாக இருக்கும்!
தோட்டம் நிறையச் செடிகள் இருந்தாலும் ராகவ் ஒரு செடியை நட்டு, வளர்த்ததில்லை. அதனால் தானே ஒரு பூச்செடியை வளர்த்து, அதில் பூக்கும் முதல் பூவை அம்மாவுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
அதனால்தான் பூச்செடி விதைக்காக ஆவலுடன் காத்திருந்தான். மஞ்சு, “எனக்குச் சோளம்” என்று ராகவ்வைப் பார்த்துச் சிரித்தாள். “எனக்குப் பூ” என்று ராகவும் சிரித்தான். “செடிகளை எங்கே வளர்க்கப் போறீங்க?” என்று கேட்டார் ஆசிரியர்.
“எங்கள் வீட்டுத் தோட்டத்தில்...” “எங்கள் வயலில்...” “எங்கள் மாடித் தோட்டத்தில்...” “மாமரத்துக்குப் பக்கத்தில்...” ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடம் சொன்னார்கள். “தாத்தாவின் வயலில்” என்றாள் மஞ்சு. “எங்கள் பூந்தோட்டத்தில்” என்றான் ராகவ்.
ஆசிரியர் விதைகளைக் கூடையிலிருந்து எடுத்தார். “பையன்கள் இந்தப் பக்கம் வாங்க. உங்களுக்கு எல்லாம் சோள விதைகள்.” “பெண்களே இந்தப் பக்கம் வாங்க. உங்களுக்கு எல்லாம் பூச்செடி விதைகள்!” மாணவர்கள் மகிழ்ச்சியாகச் சோள விதைகளை வாங்கினார்கள். மாணவியர் பூச்செடி விதைகளைப் பெற்றுக்கொண்டார்கள்.
ஆனால், ராகவ், மஞ்சுவின் முகங்கள் மட்டும் வாடின. மஞ்சுவுக்குச் சோளம் வேண்டும். ராகவ்வுக்குப் பூ வேண்டும். இருவரும் ஒருவரை இன்னொருவர் பார்த்துக் கொண்டனர். “ஐடியா! ராகவ், விதைகளை மாற்றிக்கலாமா?” என்றாள் மஞ்சு. “ஓ, தாராளமாக” என்று மகிழ்ச்சியாகத் தலையாட்டினான் ராகவ்.
இருவரும் தங்களுக்குக் கிடைத்த விதைகளை மாற்றிக்கொண்டார்கள். ராகவ் விதையை ஊன்றி, தினமும் தண்ணீர் ஊற்றினான். காய்கறிக் கழிவுகளை உரமாக மாற்றி வைத்திருந்தார் அவனின் அம்மா. அதில் சிறிதளவை எடுத்துத் தன் பூச்செடிக்கு உரமிட்டான். பூச்செடி ஆரோக்கியமாக வளர்ந்தது.
மஞ்சு சோள விதையை மண்ணில் விதைத்து, அன்றாடம் தண்ணீர் ஊற்றினாள். தாத்தாவிடம் இயற்கை உரத்தை வாங்கினாள். பாட்டியிடம் செடியை எப்படிப் பராமரிப்பது என்று கேட்டுத் தெரிந்துகொண்டாள். நாள்கள் சென்றன.
முதலில் ராகவ் வளர்த்த செடியில் அழகான பூக்கள் மலர்ந்தன! அவன் ஆசையாக அந்தப் பூவைப் பறித்து அம்மாவிடம் கொடுத்தான். “என்னடா, ராகவ்? இந்தப் பூச்செடியை நான் வளர்க்கலையே!” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் அம்மா.
“இது நான் வளர்த்த பூச்செடிம்மா!” அம்மாவின் முகம் மலர்ந்தது. “என் செல்லம் வளர்த்த பூவா? ரொம்ப அழகா இருக்கு! அதான் தோட்டத்தின் பின்பக்கம் என்னை வர விடாமல் பார்த்துக்கிட்டியா?” என்று அவனை அணைத்துக்கொண்டார் அம்மா.
ராகவ் ஒரு பூவை ஆசிரியருக்கும், இன்னொன்றை மஞ்சுவுக்கும் கொடுத்தான். மூன்று மாதங்களில் மஞ்சுவின் செடியில் சோளக்கதிர் முற்றியது. சுற்றிலும் இலைக் கவசம். அதனை உரித்துப் பார்த்தால் மஞ்சள் வண்ணத்தில் பற்களை அடுக்கி வைத்ததுபோல சோள மணிகள் அணிவகுத்திருந்தன. அப்பா அதை வேகவைத்துக் கொடுத்தார்.
“பாதி ராகவுக்கு” என்று சிரித்தாள் மஞ்சு. ராகவ் கொடுத்த பூவும் மஞ்சு கொடுத்த சோளமும் ஆசிரியருக்குப் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொடுத்தன. ஆசிரியர் இருவரையும் பார்த்துப் புன்னகை செய்தார். “எந்த விதையையும் எந்தக் குழந்தையும் வளர்க்கலாம்!” அடுத்த ஆண்டு விதை விழா வந்தது.
ஆசிரியர் சோள விதைகளையும் பூச்செடி விதை களையும் ஒரே கூடையில் கலந்து வைத்தார். “இந்த முறை உங்களுக்குப் பிடித்த விதையை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்!” மாணவ, மாணவியர் மகிழ்ச்சியாகத் தங்களுக்குப் பிடித்த விதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.