தீனா மிகவும் புத்திசாலி மாணவன். வீட்டிலும் வெளியிலும் பள்ளியிலும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருப்பான். மீதி நேரத்தில் ஏதாவது புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருப்பான். விடுமுறை நாளில் அருகில் இருக்கும் நூலகத்துக்குச் சென்றுவிடுவான்.
சமீப நாள்களாகக் கால இயந்திரம் குறித்து வாசித்துக் கொண்டிருக்கிறான். எப்போதும் அது பற்றிய சிந்தனையே ஓடிக்கொண்டிருந்தது. “என்ன தீனா, ரொம்பத் தீவிரமா எதையோ யோசிச்சிட்டிருக்கே?” என்று கேட்டார் தாத்தா.
“தாத்தா, டைம் மிஷின் பத்திப் படிச்சிட்டிருக்கேன். பின்னோக்கிப் போக முடியுமா?” “நானும் படிச்சிருக்கேன் தீனா. ஆனா, டைம் மிஷின்ல பின்னோக்கிப் போறது எல்லாம் கதைகளிலும் திரைப்படங்களிலும்தான் நடக்கும்னு நினைக்கிறேன்.”
“என்ன தாத்தா, இப்படிச் சொல்லிட்டீங்க?” “ஆனா, எதிர்கால மனுசங்க கிட்ட என்ன கேட்கணுமோ அதை எல்லாம் எழுதி, ஒரு பாட்டிலில் போட்டு, மண்ணைத் தோண்டி புதைச்சு வச்சிடு. நூறு, இருநூறு வருஷம் கழிச்சு அவங்க இந்த பாட்டிலை எடுத்து, கேள்விகளுக்குப் பதில் சொல்வாங்க” என்றார் தாத்தா.
“இது சாத்தியமான விஷயமா தெரியுது. கேள்விகளைத் தயார் பண்ணறேன்” என்று சொல்லிவிட்டு, இருபது கேள்விகளை எழுதினான். தீனா, 9ஆம் வகுப்பு மாணவன் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டான். அதைத் தண்ணீர்ப் புகாத பிளாஸ்டிக் பையில் போட்டான். பிறகு அந்தப் பையை எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடினான்.
மறுநாள் பள்ளிக்குச் சீக்கிரமாகவே சென்றான் தீனா. யாருக்கும் தெரியாமல் மைதானத்தின் மூலையில் இருந்த ஒரு மரத்துக்கு அடியில் தோண்டினான். ஓர் அடி ஆழத்துக்குத்தான் தோண்ட முடிந்தது. அதற்குள் மாணவர்கள் வரத் தொடங்கிவிட்டனர். எனவே வேகமாக மண்ணைப் போட்டு மூடிவிட்டு, தன் வகுப்பறைக்குச் சென்றான்.
மாலை வீட்டுக்குச் சென்ற தீனா, “தாத்தா, நூறு வருஷம் கழிச்சும் இந்த தீனாவின் பேரை மக்கள் சொல்ற மாதிரி ஒரு காரியம் செஞ்சுட்டு வந்திருக்கேன்” என்றான் பெருமிதத்துடன். “என்னப்பா பண்ணிருக்கே?” “நீங்க சொன்ன மாதிரி கேள்விகளைத் தயார் செஞ்சு, எங்க பள்ளிக்கூடத்தில் புதைச்சு வச்சிட்டேன். நூறு வருஷம் கழிச்சு எடுத்துப் படிக்கிறவங்க, அதுக்குப் பதில் சொல்வாங்க.”
“அப்படியாப்பா, வருஷத்தை எழுதினீயா?” “ஓ…” “ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால வாழ்ந்த அசோகருடைய தூண்களைக் கண்டறிஞ்சு, படிக்கிற மாதிரி உன்னோட கேள்விகளைக் கண்டறிஞ்சு பதில் சொல்லப் போறாங்க! அப்படித்தானே தீனா?” “ஆமா, தாத்தா!” தீனா கேள்விகளைப் புதைத்து ஒரு மாதமாகிவிட்டது. அவன் அதை மறந்தே விட்டான்.
ஒரு நாள் மதிய உணவு நேரத்தில் மாணவர்கள் எல்லாம் மைதானத்தின் மூலையில் இருந்த மரத்தை நோக்கி ஓடினார்கள். தீனாவுக்குத் தான் புதைத்த பாட்டில் நினைவுக்கு வந்தது.
அவனும் ஓடினான். அங்கே கேபிளுக்காகக் குழிதோண்டிக் கொண்டிருந்தவர்கள் ஒரு பாட்டிலைக் கண்டெடுத்திருந்தார்கள். அந்தத் தகவலைக் கேட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் அங்கே கூடியிருந்தனர்.
அந்த பாட்டிலைப் பார்த்ததும் துணுக்குற்றான் தீனா. ‘நூறு வருஷம் கழிச்சு எடுத்துப் படிக்க வேண்டியதை இப்பவே எடுத்துட்டாங்களே! ஐயோ, என் பேரை வேற எழுதி வச்சிட்டேனே’ என்று விழித்தான்.
அந்த பாட்டிலை வாங்கி, திறக்க முயன்றார் தலைமை ஆசிரியர். அப்போது, “சார், இன்னொரு பாட்டிலும் இருக்கு” என்று எடுத்துக் கொடுத்தார் குழி தோண்டிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர். தீனாவுக்கு ஆச்சரியமாகிவிட்டது! ‘நான் ஒரு பாட்டில்தானே வைத்தேன்? இன்னொன்று எப்படி வந்தது?’ என்று யோசித்தான்.
இரண்டு பாட்டில்களையும் திறந்தார் தலைமை ஆசிரியர். தீனா வைத்திருந்த பாட்டிலில் உள்ள கேள்விகளுக்கு, இன்னொரு பாட்டிலில் பதில்கள் இருந்தன! “தீனா, இது உன் வேலையா?” என்று கேட்டார் தலைமை ஆசிரியர்.
“ஆமாம் சார்” என்று மகிழ்ச்சியாகச் சொன்னான் தீனா. “உனக்கு எதிர்கால மனிதர்கள் பதில் அனுப்பியிருக்காங்கப்பா!” என்று அந்த பாட்டிலைக் கொடுத்தார் தலைமை ஆசிரியர். அன்று முழுவதும் அனைவரும் எதிர்கால மனிதர்களின் பதில்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.
மாலையில் மைதானத்துக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டார்கள். “தீனாவின் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் இந்தப் புத்தகம் பரிசு!” தீனா மகிழ்ச்சியாகப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டான். மாணவர்கள் கைதட்டிப் பாராட்டினர்.
“ஆனா, அவனுக்கு எதிர்கால மனிதர்கள் பதில் அனுப்பல. நம்ம பெரியசாமி வாத்தியார்தான் பதில் எழுதிப் போட்டிருக்கார்” என்றதும் மாணவர்கள் திகைத்தனர். “தீனா, உனக்கு ஏமாற்றமா இருக்கா?” “இல்லை சார், எனக்குத் தேவை பதில்கள்தான். யார் மூலம் வந்தால் என்ன?” என்றான் அவன்!