வரலாற்றில் சில கண்டறிதல்கள் விபத்தாக நிகழும். அப்படியொரு கண்டறிதல்தான் கதிரியக்கம். சில தனிமங்களின் உட்கருக்கள் (Nucleus) நிலையற்றவையாக இருக்கும். இவை தானாகவே சிதைவடைந்து நிலைப்புத் தன்மையுடைய உட்கருக்களாக மாறும்.
அப்போது அவற்றில் இருந்து ஆல்பா, பீட்டா, காமா ஆகிய கதிர்கள் வெளிப்படுகின்றன. இந்தச் செயல்முறையே கதிரியக்கம் (Radioactivity) எனப்படுகிறது. கதிரியக்கம் பற்றிய நவீனப் புரிதல், ஜெர்மன் இயற்பியலாளரான ராண்ட்ஜன் எக்ஸ் - கதிர்களைக் கண்டறிந்தவுடன் தொடங்கியது. வெற்றிடக் குழாய்களின் ஊடாக மின்சாரத்தைப் பாய்ச்சி சோதனை செய்துகொண்டிருந்தார் ராண்ட்ஜன்.
அப்போது ஒரு சோதனையில் வெளிச்சம் வெளியேறக் கூடாது என்பதற்காகக் குழாயை மூடிவைத்தார். ஆனாலும் குழாயில் இருந்து வெளியான கதிர்கள் தொலைவில் வைத்திருந்த பேரியம் வேதிப் பொருள் பூசப்பட்டிருந்த திரையில் பட்டு மின்னின.
இதன் மூலம் ஒளியில் இருந்து வெளிப்படும் சில கதிர்கள் மென்மையான பொருள்கள் வழியாக ஊடுருவிச் செல்லும் என்பதை அவர் கண்டுகொண்டார். இவற்றின் மூலம் உடலுக்குள் உள்ள எலும்புகளையும் காண முடியும் என்றார். அந்தக் கதிர் என்னவென்று தெரியாததால் எக்ஸ்-கதிர்கள் என்று அழைத்தார்.
இதைத் தொடர்ந்து பிரெஞ்சு இயற்பியலாளர் ஹென்றி பெக்கரல் யுரேனியம் உப்புகள் இயற்கையாகவே கதிர்களை வெளியிடுவதைக் கண்டறிந்தார். இதனை அடுத்து கதிரியக்க ஆய்வில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியவர் மேரி கியூரி. உட்கருக்களின் சிதைவுக்கு, ‘கதிரியக்கம்’ எனப் பெயர் வைத்தவரும் மேரிதான்.
மேலும் தனது கணவர் பியரி கியூரியுடன் இணைந்து அவற்றை ஆய்வு செய்து பொலோனியம், ரேடியம் ஆகிய இரு கதிரியக்கப் பொருள்களைக் கண்டறிந்தார். இதற்காக 1903ஆம் ஆண்டு பெக்கரல், பியரி கியூரி ஆகியோருடன் இணைந்து இயற்பியலுக்கான நோபல் பரிசும், 1911ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசும் பெற்றார் மேரி கியூரி.
அவரே இந்தக் கதிரியக்கத்தை நடைமுறை பயன்பாட்டுக்கும் கொண்டு வந்தார். முதல் உலகப் போரின்போது அவர் உருவாக்கிய நடமாடும் எக்ஸ்ரே கருவிகள், போர்க்களத்தில் குண்டடிப்பட்டுக் கிடந்த போர்வீரர்களின் உடலில் ஊடுருவியுள்ள தோட்டாக்களைக் கண்டறிந்து எடுக்கவும், உடைந்த எலும்புகளைச் சரி செய்யவும் பயன்பட்டன.
ஆனால், தொடர்ந்து கதிரியக்கத்தில் பணியாற்றியதால் ரத்தம் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் மேரி கியூரி. அவர் வாழ்ந்த காலத்தில் கதிரியக்கத்தால் உடலுக்கு ஏற்படும் ஆபத்தை அறிவியலாளர்கள் அறிந்திருக்கவில்லை.
கதிரியக்க ஆபத்துகள் குறித்தும், கதிரியக்கம் தொடர்பான பணியிடப் பாதுகாப்புகள் குறித்தும் முதன் முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது ‘ரேடியம் பெண்கள்’ என அழைக்கப்பட்ட பெண் உழைப்பாளர்கள்தான். அப்போது அமெரிக்காவிலும் கனடாவிலும் கைக் கடிகாரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைய இருந்தன.
அங்கே இரவில் நேரம் பார்க்க உதவும் ஒளிரும் கைக்கடி காரங்கள் தயாரிக்கப்பட்டன. கடிகாரத்தின் முள்களை ஒளிர வைப்பதற்கு ரேடியம் கலந்த வண்ணப்பூச்சுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த வண்ணம் பூசும் வேலையில் நிறையப் பெண்கள் பணியாற்றினர். குறிப்பாகக் கல்லூரியில் பயிலும் பெண்கள் கைச்செலவுக்காக இந்தப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்தப் பெண்கள் தொடர்ந்து கதிரியக்கத்தை உமிழும் ரேடியத்துடன் பணியாற்ற நேர்ந்தது. மேலும் அவர்கள் கடிகாரத்தில் ரேடியத்தைப் பூசும்போது தூரிகையை நாவில் தொட்டுக் கூர் செய்யவும் நேரிடும். இதனால் அவர்களுக்குத் தெரியாமலேயே அவற்றை உட்கொள்ளவும் செய்தனர்.
பொதுவாக, ரேடியம் உடலுக்குள் சென்றால் கால்சியம் போலச் செயல்படும். நமது உடல் ரேடியத்தை கால்சியம் என நினைத்து எலும்புகளில் சேகரிக்கும். அப்போது அதிலிருந்து கதிரியக்கம் வெளிப்பட்டு எலும்புகளையும் சுற்றி இருக்கும் திசுக்களையும் பாதிக்கும். இதனால் பலர் எலும்பு பாதிப்புகளாலும் புற்றுநோயாலும் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து ஐந்து பெண்கள் இணைந்து அமெரிக்க ரேடியம் கார்பரேஷனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய, அப்போதுதான் இந்தக் கதிரியக்கப் பொருள் களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் ஏற்பட்டது. மேலும் அந்தத் தொழிற்சாலைகளில் பணியாற்றிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களின் மருத்துவ அறிக்கைகளை அறிவியலாளர்கள் ஆராய்ந்து, கதிரியக்கம் உடலில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிற தெளிவையும் பெற்றனர். இந்த நிகழ்வுகளே பணியிடப் பாதுகாப்புக்கான தொடக்கமாகவும் அமைந்தது.
அதேநேரம், கதிர்வீச்சால் ஏற்படும் பயன்களை அறியத் தொடங்கியது பனிப்போர் காலத்தில்தான். பனிப்போரின்போது அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் போட்டியிட்டு சக்திவாய்ந்த அணு ஆயுதங்களை உருவாக்கின. தொடர்ந்து அணுக்கதிர்களைச் சோதனை செய்தன. அப்போது இந்தக் கதிவீச்சைப் பல்வேறு துறைகளில் பயன்படுத்த முடியும் என்கிற புரிதலும் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாகவே இன்றைக்குக் கதிரியக்கம் நோய்களைக் கண்டறியவும், புற்றுநோய் சிகிச்சைக்கும் பயன்பட்டு வருகிறது. இதேபோல் மின்சார உற்பத்தியிலும் புதைபடிமங்களின் காலக்கணக்கை அறியவும் கதிரியக்கம் உதவுகிறது. மேலும் விவசாயம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் கதிரியக்கப் பொருள்களின் பயன்கள் உள்ளன. இவ்வாறு கதிரியக்கம் ஆக்க சக்தியாகவும் அழிக்கும் சக்தியாகவும் மனித குலத்தின் கைகளில் இன்றைக்கு இருக்கிறது.
(திருப்புமுனையைக் காண்போம்)
- tnmaran25@gmail.com