மாயா பஜார்

கிளி வளர்க்கலாமா? | கதை

ஈரோடு சர்மிளா

யாழினிக்குப் பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். மாலை நேரத்தில் வீட்டுப் பாடத்தை மொட்டை மாடியில் அமர்ந்துதான் எழுதுவாள். அதற்குக் காரணம், மாலை நேரம் கூட்டம் கூட்டமாகக் கூடுகளுக்குப் பறந்து செல்லும் பறவைகள்.

நம் வீட்டிலும் கிளி வளர்க்கலாம் என்று அம்மாவிடம் கெஞ்சிப் பார்த்துவிட்டாள். அம்மா அதற்கு ஒப்புக் கொள்ளவே இல்லை. “கூண்டுக்குள் அடைக்கக் கூடாது பாவம்” என்றார். “சாந்தி வீட்டில் வளர்க்கிறார்களே, அந்தக் கிளி அவளோடு பேசிக்கிட்டு சந்தோஷமாகத்தான் இருக்கு” என்றாள் யாழினி.

“அது சந்தோஷமா இருக்குன்னு உனக்குத் தெரியுமா?” என்றார் அம்மா. “ம்... எனக்கு நல்லாத் தெரியும். என் பேரைச் சொல்லிக் கொடுத்தாள். அது என் பேரை அழகா யாழினி யாழினின்னு சொல்லுச்சே! அது அப்படிக் கூப்பிடும்போது கேட்க எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா? நீங்கதான் வேண்டாம்னு சொல்றீங்க” என்றாள் யாழினி.

“இங்க பாரு யாழினி, எது எங்கே இருக்கணுமோ அங்கதான் இருக்கணும். அதோட சுதந்திரத்தை நாம பறிக்கக் கூடாது.“ “அம்மா, நாம அதைப் பாதுகாப்பா வச்சுக்க அழகான கூண்டு வாங்கிக்கலாம். அதுக்குத் தேவையான கொய்யா, மிளகாய்ப் பழம் எல்லாம் வாங்கிக் கொடுக்கலாம். சரின்னு சொல்லுங்க” என்று கெஞ்சினாள் யாழினி.

“கிளி வளர்க்கிறதைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம். நான் உனக்கு ஒரு முக்கியமான விருந்தாளியைக் காட்டுறேன் வா” என்று யாழினியைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார் அம்மா. “யாரு வந்திருக்காங்க?” என்று கேட்டுக்கொண்டே அம்மாவுடன் சென்றாள் யாழினி.

“இந்தச் செடியில் பாரு, ஒரு தையல்சிட்டு கூடு கட்டியிருக்கு” என்று காட்டினார் அம்மா. “ஆஹா! போன வாரம் நேஷனல் ஜியாகிரபிக் சேனலில் பார்த்தேன். இன்னிக்கு நம்ம வீட்டிலேயே கூடு கட்டியிருக்கு!” உற்சாகமாகக் குதித்தாள் யாழினி.

“முட்டைகள் இட்டு, குஞ்சுகள் பொரித்து, பறக்கிற வரை இருக்கும். பிறகு எல்லாம் பறந்துடும்” என்றார் அம்மா. “அம்மா, தையல்சிட்டு எவ்வளவு அழகா இலையைத் தைச்சு, கூடு கட்டியிருக்குப் பார்த்தீங்களா! இதுக்கு எப்படி இவ்வளவு அறிவுன்னு ஆச்சரியமா இருக்கும்மா! இது மனிதர்களைக் கண்டு பயப்படாமல் வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடிகளில் கூடுகட்டும், தெரியுமா?” என்றாள் யாழினி.

“உனக்கு எப்படி இவ்வளவு தெரிஞ்சிருக்கு?” என்று ஆச்சரியப்பட்டார் அம்மா. “அதான் போன மாசம் ‘சூழல் அறிவோம்’ குழுவுவோட நம்பியூர் பக்கத்தில இருக்கிற எலத்தூர் குளத்தைச் சுற்றிப் பார்க்க அண்ணாவோட போனேனே... அப்போ தையல்சிட்டு பத்திக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்” என்றாள் யாழினி.

“ஓ, பிரமாதம்! அடிக்கடி இந்தச் செடி கிட்ட வந்து நிற்கக் கூடாது. நாம ஒண்ணும் செய்ய மாட்டோம்னு நம்பிதான் இங்கே அது கூடு கட்டியிருக்கு” என்றார் அம்மா. “தூரத்தில் இருந்து பார்ப்பேன்” என்று சொல்லிவிட்டு, வராண்டாவில் அமர்ந்து தையல்சிட்டுவைக் கவனித்துக்கொண்டே படிக்கத் தொடங்கினாள் யாழினி.

இரண்டு வாரங்கள் கழித்து குஞ்சுகளின் கீச் கீச் ஒலிகள் கேட்டதும் தோட்டத்துக்கு ஓடிவந்தாள், யாழினி. இரண்டு குஞ்சுகள் இருப்பதை அம்மாவிடம் தெரிவித்தாள். அன்று முழுவதும் அவற்றைக் கவனித்துக்கொண்டே இருந்தாள்.

அடுத்த நாள் பக்கத்துத் தெருவில் இருக்கும் அவள் தோழி சாந்தியை யாழினி அழைத்து வந்திருந்தாள். இருவரும் நீண்ட நேரம் வாசலில் அமர்ந்து தையல்சிட்டுகளைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.

அம்மா பறவையும் அப்பா பறவையும் வெளியே சென்று பூச்சி, புழுக்களைப் பிடித்து வந்து குஞ்சுகளுக்கு ஊட்டிவிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தனர். அவை உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாக இருந்தன. தையல்சிட்டு குடும்பத்தைப் பார்த்த சாந்திக்குத் தன் வீட்டில் இருக்கும் கிளி, கூண்டுக்குள் தனியாக இருப்பதை நினைத்து வருத்தமாக இருந்தது.

“யாழினி, எங்க வீட்டுக்குப் போவோம்” என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றாள் சாந்தி. கூண்டிலிருந்து கிளியை வெளியே எடுத்தாள். தடவிக் கொடுத்தாள். பிறகு, சட்டென்று பறக்கவிட்டாள்.

“என்ன பண்றே சாந்தி?” “நாம எல்லாம் நம்ம குடும்பத்தோடு இருக்கோம். நண்பர்களோடு இருக்கோம். கிளியும் அதோட நண்பர்களோடு இருக்கட்டும். ஜாலியா, சந்தோஷமா பறந்து திரியட்டும்” என்ற சாந்தியைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள் யாழினி.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT