அழகிய பன்றிக்குட்டி,
உதயசங்கர்,
வானம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991
விலங்குக் குட்டிகள் அனைத்துமே அழகுதான். பன்றிக் குட்டியும் அழகுதான். நாய், பூனை, ஆடு மாடு, கோழி போன்றவை பரவலாக வளர்க்கப்படுகின்றன. அதேபோல் பன்றிகள் ஏன் வளர்க்கப்படுவதில்லை என்கிற கேள்வியைப் பின்தொடர்ந்து சென்று பல விஷயங்களை அறிகிறாள் கவிதா. இதுபோல் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வாசிக்கவும், உலகை நேசிக்கவும் மட்டுமல்லாமல் யோசிக்கவும் வைக்கும் கதைகளைக் கொண்ட நூல்.
வானவில்லின் தோழர்கள்,
யெஸ்.பாலபாரதி, புக்ஸ் ஃபார் சில்ரன்,
தொடர்புக்கு: 044 – 2433 2924
பூங்கோதை அக்கா, முத்து தம்பி. முத்து ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவன். அவனை நாள்தோறும் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று மலர்கள், நிறங்களைக் காட்டிப் பேசுவாள் பூங்கோதை. அப்படி ஒரு நாள் வானத்தில் வானவில் தோன்றுகிறது. அதன் சிவப்பு நிறம் வெளிறித் தெரிய, பூங்கோதை, முத்து அதை எப்படி மாற்றினார்கள் என்பதே கதை. பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் வாழ்க்கைக் குறித்த பல விஷயங்களைக் கூறுகின்றன இக்கதைகள்.
எட்டுக்கால் பூச்சிக்கு ஏழு கால்கள்,
மு. முருகேஷ், அகநி வெளியீடு,
தொடர்புக்கு: 94443 60421
அருண் ஓர் எட்டுக்கால் பூச்சியைப் பார்க்கிறான். அதற்கு ஏழு கால்கள்தான் இருக்கின்றன. வகுப்பில் எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்று கேட்கப்பட்டபோது, ஏழு கால்கள் என்று இதனால்தான் கூறுகிறான். ஆனால், அவன் பார்த்த எட்டுக்கால் பூச்சி ஏன் அப்படி இருந்தது? அருணுடன் சேர்ந்து அவன் நண்பன் நவீனும் அறிய முயல்கிறான். இது போன்ற கதைகளைக் கொண்ட தொகுப்பு.
அதிசய யூனிகார்ன்,
கார்த்திகா கவின் குமார்,
நிவேதிதா பதிப்பகம், தொடர்புக்கு: 89393 87296
தேவதைக் கதைகளில் வரும் ஒற்றைக் கொம்புக் குதிரையே யூனிகார்ன். லேனா எனும் சிறுமியைச் சந்திக்கும் யூனிகார்ன் ஒரு மாய பென்சிலைக் கொடுக்கிறது. ஆனால், தனக்கு வரையத் தெரியாது என்கிறாள் லேனா. அதன் பிறகு லேனாவுக்கும் யூனிகார்னுக்கும் இடையிலான உரையாடலில் மிகப் பெரிய மாற்றம் நடக்கிறது. இதுபோன்ற எளிமையான விஷயங்களைக் கொண்ட கதைகள்.
ஏலியனும் லீலாவும், l மதுரை க.சரவணன்,
வெற்றிமொழி வெளியீட்டகம்,
தொடர்புக்கு: 97151 68794
ஏலியன்கள் எனும் வேற்றுக்கோள் மனிதர்கள், வேற்றுக்கோள்கள், விண்வெளி ஓடம், செவ்வாய்க் கோள் என விண்வெளி அறிவியல் சார்ந்த கதைகள் கொண்ட தொகுப்பு. இந்தக் கதைகளில் லீலாவுடன் பாப்பா என்றொரு கதாபாத்திரமும் வருகிறாள். இன்றைய உலக நடப்புகளை ஒப்பிட்டு மற்றொரு கதை பேசுகிறது.
அறிவியலை ஆராய்வோம்,
கமலா சுவாமிநாதன், வானதி பதிப்பகம்,
தொடர்புக்கு: 044 - 2434 2810
பள்ளி ஆசிரியரான நூல் ஆசிரியர், எளிய அறிவியல் பரிசோதனைகளைக் குழந்தைகளே செய்து பார்க்க வசதியாக இந்த நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் 12 அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டப்பட்டு, அவற்றுக்கு ஏற்ற பாடங்கள் தொடர்புபடுத்தியும் காட்டப்பட்டுள்ளன. அதனால் பாடமாகப் படிப்பவற்றைக் குழந்தைகள் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
ரயிலின் நண்பர்கள், ஐந்து குழந்தைகள் மற்றும் அது,
எடித் நெஸ்பிட், l தமிழில்: டாக்டர் எஸ்.அகிலாண்ட பாரதி,
கவிநயா பதிப்பகம், தொடர்புக்கு: 98657 60345
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எடித் நெஸ்பிட், குழந்தைகளுக்கான சாகசக் கதைகள் எழுதுவதில் முன்னோடி. அவர் எழுதிப் புகழ்பெற்ற ரயிலின் நண்பர்கள், ஐந்து குழந்தைகள் மற்றும் அது, ஃபீனிக்ஸ் பறவையும் மந்திரக் கம்பளமும் ஆகிய குறுநாவல்களின் எளிமையான, சுவாரசியமான மொழிபெயர்ப்பு.
நினைவோ ஒரு பறவை,
ராம் எம்.நிவாஸ், l தமிழில்: சாலை செல்வம்,
வகம் பதிப்பகம், தொடர்புக்கு: 98946 92768
இளையோரை மையப்படுத்தி நினைவலைகளாக எழுதப்பட்டுள்ளது இந்த நூல். குடும்பத்தினர் இடையிலான உரையாடல், வளர் இளம் பருவ நினைவுகள், பெற்றோர் - குழந்தைகள், ஆசிரியர்கள் - குழந்தைகள் இடையிலான புரிதலை மேம்படுத்தும் வகையில் அன்றைய இளைய தலைமுறையின் இயல்பை அறிந்துகொள்ள இந்த நூல் உதவும்.
பூ பூ பூவனம், போவோம் நாமும் கானகம்,
பிரகாஷ் எஸ்.பரியேங்கார்,
தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ,
சாகித்திய அகாதெமி, தொடர்புக்கு: 044 - 2431 1741
கொங்கணி எழுத்தாளர் பரியேங்கார் எழுதி பால சாகித்ய விருது பெற்ற ‘இகடி பிகடி திகடி தா’ என்கிற நாடகத்தின் மொழிபெயர்ப்பு. அதை இந்தியில் மோகன் குல்கர்னி மொழிபெயர்த்து, அதன் வழியாகத் தமிழில் வெளியாகியுள்ளது. மந்திரவாதி ஒருவரின் அட்டூழியங்களில் இருந்து உயிரினங்களையும் மக்களையும் காப்பாற்ற முயலும் ஐந்து நண்பர்களின் கதை.
வளர்கிறேன் ஆண், வளர்கிறேன் பெண்,
அமரந்த்தா - சாலை செல்வம், பொன்னி பதிப்பகம், தொடர்புக்கு: 82483 38118
சிறுவர், சிறுமிகள் வளர்ந்து பதின் பருவ வயதை எட்டும்போது உடல் சார்ந்து பல்வேறு சந்தேகங்கள் அவர்களுக்குத் தோன்றும். அந்தக் கேள்விகளை அறிவியல்பூர்வமாகவும், நேரடியாகவும், எளிமையாகவும் விளக்கும் நூல் இது. ஒரே புத்தகத்தில் இரு பாலினத்தவர் வளர்ச்சி குறித்தும் கூறப்பட்டுள்ளது சிறப்பு.