கோபி பாலைவனத்தின் எல்லையில் 'சுகோ' என்கிற ஏழைச் சிறுவன் வாழ்ந்துவந்தான். அவனிடம் பழைய கூடாரத்தையும் சில ஆடுகளையும் தவிர சொத்து என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை.
ஒரு கடும் குளிர்கால இரவில், பனிப்புயலில் சிக்கித் தவித்த குதிரைக்குட்டியை சுகோ காப்பாற்றினான். அது பால் போன்ற வெண்மையில் இருந்ததால், ‘வெள்ளை மேகம்' என்று பெயரிட்டு வளர்த்தான்.
குதிரைக்குட்டி வளர்ந்து பெரிதானது. சுகோவும் வளர்ந்து இளைஞனாக மாறினான். அவர்கள் இருவரும் இணை பிரியா நண்பர்களாயினர்.
‘வெள்ளை மேகம்' சுகோவைச் சுமந்தபடி மங்கோலியப் புல்வெளிகளில் ஓடும்! அந்தப் பகுதியை ஆண்டு வந்த குறுநில மன்னர், ஒரு குதிரைப் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தார்.
‘யார் இந்தப் பந்தயத்தில் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்குப் பொற்காசுகளும் என் மகளைத் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.
தன் வறுமையைப் போக்க இதுவே வழி என்று நினைத்த சுகோ, வெள்ளை மேகத்துடன் பந்தயத்தில் கலந்துகொண்டான்.
பந்தயத்தில் நூற்றுக்கணக்கான குதிரைகள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஓடின. ஆனால், சுகோவின் குதிரை மின்னலைப் போல அனைவரையும் கடந்து சென்றது.
பந்தயத்தின் முடிவில் சுகோவே முதலிடம் பிடித்தான். ஆனால், ஓர் ஏழை இளைஞன் தனக்கு மருமகனாவதை மன்னரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. “இந்தக் குதிரை இவனுக்குச் சொந்தமானதாக இருக்க முடியாது. இவன் எங்கிருந்தோ திருடியிருக்க வேண்டும். இவனுக்குப் பரிசும் கிடையாது; என் மகளும் கிடையாது. குதிரையைப் பிடுங்கிவிட்டு, இவனை அடித்துத் துரத்துங்கள்” என்று உத்தரவிட்டார்.
மன்னரின் வீரர்கள் சுகோவை அடித்து விரட்டிவிட்டு, வெள்ளை மேகத்தை இழுத்துச் சென்றனர். சுகோ காயங்களுடன் தன் கூடாரத்திற்குத் திரும்பினான். மன்னர் வெள்ளை மேகத்தின் மீது ஏறி அமர முயன்றார். ஆனால், அது சுகோவைத் தவிர வேறு யாரையும் தன் மீது அமர அனுமதிக்காது. துள்ளிக் குதித்து மன்னரைக் கீழே தள்ளியது.
கோபமடைந்த மன்னர், “என்னை மதிக்காத இந்த விலங்கு உயிருடன் இருக்கக் கூடாது. அம்புகளால் இதை வீழ்த்துங்கள்” என்று கத்தினார். வீரர்கள் எய்த அம்புகள் குதிரையின் உடலில் பாய்ந்தன. வலியால் துடித்த அது, தனது முழுப் பலத்தையும் திரட்டி அங்கிருந்து தப்பி ஓடியது. அம்புகள் தைத்த நிலையிலேயே மைல் கணக்கில் ஓடியது. அதன் ரத்தம் மங்கோலியப் புல்வெளியின் பச்சை நிறத்தைச் சிவப்பாக மாற்றியது.
அன்று இரவு சுகோவின் காதுகளில் தளர்ந்த குளம்படிச் சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தான். அங்கே அவனுடைய வெள்ளை மேகம், உடல் முழுவதும் அம்புகள் தைத்திருக்க, ரத்தம் வழிந்தோடிய நிலையில் நின்றுகொண்டிருந்தது. அவனுடைய நெஞ்சு வெடிப்பது போலிருந்தது.
பாய்ந்து ஓடி அதன் உடலில் உள்ள அம்புகளை எடுக்க முயற்சி செய்தான். ஆனால், காலம் கடந்துவிட்டிருந்தது. வெள்ளை மேகம் வேதனையோடு தனது நண்பனைக் கடைசியாகப் பார்த்துவிட்டுச் சரிந்து வீழ்ந்தது. சுகோ அதன் தலையைத் தன் மடி மீது வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டான். பிறகு தன் கூடாரத்துக்கு அருகிலேயே குழிதோண்டி அடக்கம் செய்தான்.
அன்று இரவு அவன் கனவில் வெள்ளை மேகம் வந்தது. “சுகோ, வருந்தாதே! நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன். என் எலும்புகளை எடுத்து ஒரு தண்டு செய். என் வால் முடிகளை எடுத்து நரம்புகளாகக் கட்டு. என் தோலை எடுத்து அதன் மீது போர்த்து. அதிலிருந்து வரும் இசை மூலம் நானே உன்னிடம் பேசுவேன்” என்றது.
மறுநாள் கனவில் குதிரை சொன்னபடியே, அதன் உடல் பாகங்களை வைத்து ஓர் இசைக் கருவியைச் செய்தான் சுகோ. தன் அன்பு நண்பனின் நினைவாக, அந்தத் தண்டின் நுனியில் குதிரையின் தலையைச் செதுக்கி வைத்தான்.
அவன் அந்த யாழை மீட்டியபோது பிறந்த இசை, வெள்ளை மேகம் புல்வெளியில் கனைப்பதையும், காற்றைக் கிழித்துக்கொண்டு ஓடுவதையும் போலவே இருந்தது. அந்த இசை அவனுடைய துயரத்தை மெல்லக் கரைத்தது.
அவன் அந்த யாழை எடுத்துக்கொண்டு மங்கோலியப் புல்வெளிகள் எங்கும் சென்றான். அவன் அதை மீட்டும் போதெல்லாம் மேயும் ஆடு, மாடுகள் அமைதியாயின. மக்களும் அந்த இசையில் சொக்கிப் போயினர்.
அந்த யாழுக்கு ‘மோரின் கூர்' (Morin Khuur) என்று பெயர். ‘குதிரைத் தலை யாழ்’ என்று பொருள். அந்த இசைக்கருவி இன்றும் மங்கோலியாவின் தேசிய அடையாளமாகத் திகழ்கிறது. மனிதனுக்கும் விலங்குக்கும் இடையிலான அன்பின் சாட்சியாக அந்த இசை இன்றும் மங்கோலியப் புல்வெளிகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.