மாயா பஜார்

புனித மீன் | லாவோஸ் நாட்டுப்புறக் கதை

ஷாராஜ்

சியெங் மியெங் மிகவும் புத்திசாலியாகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும் இருந்தார். அவருடைய புகழ் நாடு முழுவதும் பரவியிருந்தது. இது அரசருக்கு அவர் மீது பொறாமையை ஏற்படுத்தியது. அரசருக்கு நாட்டில் தன்னைவிடப் புத்திசாலி யாரும் இருக்கக் கூடாது என்கிற எண்ணம். எனவே அவரை எப்படியாவது சிக்க வைத்துச் சிறையில் அடைக்கத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார்.

ஒருநாள் அரசர் மீகாங் நதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் அரிதான தங்கமீன் சிக்கியது. அரசர் அதை அரண்மனைக்குக் கொண்டுவந்து பீங்கான் ஜாடியில் வைத்தார். பின்னர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

“இது தேவர்களின் மீன். எவராவது இந்த மீனைத் தொட்டால் அல்லது இதன் அழகைக் குலைக்க முயன்றால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.

அதேநேரம், இந்த மீன் தானாகவே இறந்துவிட்டால், அதை எவரும் புதைக்கக் கூடாது, எரிக்கக் கூடாது, விலங்குகள், பறவைகளுக்கு இரையாகப் போடவும் கூடாது. அது என்ன செய்யப்பட வேண்டும் என்பதை சியெங் மியெங்தான் தீர்மானிக்க வேண்டும்.

அவர் தவறான முடிவு எடுத்தால் தண்டனை கிடைக்கும்.” மக்கள் சியெங் மியெங்கிடம், “இதிலிருந்து எப்படித் தப்பப் போகிறீர்கள்?” என்று கேட்டனர். “நான் உண்டு, என் வேலை உண்டு என இருக்கிறேன். அரசர் ஏன் சம்பந்தமே இல்லாமல் இதில் என்னை இழுக்கிறார்? இருந்தாலும், ஒரு கை பார்த்துவிடலாம்” என்றார் சியெங் மியெங்.

அரசர் சூழ்ச்சி செய்தார். உதவியாளரிடம் அந்த மீன் ஜாடியில் மிகக் குறைவான நீரை ஊற்றச் சொன்னார். இறந்த மீனை என்ன செய்வது என்று சியெங் மியெங் எதைச் சொன்னாலும் அது குற்றமாகும்படிச் சட்டங்களை வகுத்தும் வைத்திருந்தார்.

மூன்று நாள்களில் தங்கமீன் இறந்துவிட்டது. அரசர் சியெங் மியெங்கை வரவழைத்தார். “இந்தப் புனித மீன் இறந்துவிட்டது. இதைப் புதைக்கவோ எரிக்கவோ கூடாது. விலங்குகள், பறவைகளுக்கு இரையாகப் போடக் கூடாது. வேறு என்ன செய்வது? உன் பதிலைச் சொல். உன் பதில் எனக்குப் பிடிக்கவில்லை என்றால் தண்டனை நிச்சயம்” என்றார்.

அரண்மனை அதிகாரிகள், வேலையாள்கள் அனைவரும் சியெங் மியெங் மாட்டிக்கொள்வார் என்று நினைத்தனர். சியெங் மியெங் அந்த மீனைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தார். “அரசே, இது புனித மீன்! இதை அப்படியே வைத்திருப்பது நாட்டுக்கே நல்லதல்ல. இந்த மீனைச் சமைத்துவிடலாம்” என்றார்.

சபையே அதிர்ந்தது. அரசர் சிரித்தார். “சமைக்க வேண்டுமா? சமைக்க வேண்டுமானால் அதைத் தொட வேண்டுமே?” சியெங் மியெங் அமைதியாகச் சொன்னார், “மீனைத் தொடவே வேண்டாம் அரசே. அந்த ஜாடியில் இருக்கும் நீரை அப்படியே குழம்புச் சட்டியில் கவிழ்த்தால், மீன் அதில் விழுந்துவிடும்.

அதில் மசாலா, உப்புப் போட்டு, அடுப்பில் வைத்துத் தீயை மூட்டினால் மீன் வெந்துவிடும். அவ்வளவுதான்!” “சரி, அப்படியே சமைப்போம். ஆனால், அந்த மீனை யார் உண்பது?” என்று கேட்டார் அரசர். “அரசே, இது புனித மீன் என்பதால், இதைப் புனிதமான வர்கள் மட்டுமே உண்ண வேண்டும். அதாவது, அரசராகிய நீங்கள்தான் இதை முழுமையாக உண்ண வேண்டும். ஒரு துண்டு மீன் மிஞ்சினாலும் அது நாட்டுக்கே தீங்காகிவிடும்.”

வேறுவழியின்றி அரசர் அந்த மீனைச் சமைக்கச் சொன்னார். மீன் சமைக்கப்பட்டு அவர் முன் வைக்கப்பட்டது. “அரசே, தேவ மணம் கமழ்கிறது, உண்ணுங்கள்” என்று உற்சாகப்படுத்தினார், சியெங் மியெங். அரசருக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. மூக்கைப் பிடித்துக்கொண்டு கஷ்டப்பட்டுச் சாப்பிட்டு முடித்தார்.

“சரி, எப்படியோ புனித மீனின் காரியம் முடிந்துவிட்டது. உன் தலையும் தப்பிவிட்டது” என்று எரிச்சலுடன் சொன்னார் அரசர்.

சியெங் மியெங், “அரசே, அந்த மீன் இப்போது உங்கள் வயிற்றுக்குள் இருக்கிறது.

அது புனித மீன் என்பதால், அது உங்கள் உடலிலிருந்து எக்காரணம் கொண்டும் வெளியேறக் கூடாது. அதாவது, அடுத்த மூன்று நாள்களுக்கு நீங்கள் மலம் கழிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ கூடாது. அப்படிச் செய்தால், மீன் மூலம் நீங்கள் பெற்ற ஆற்றல் வெளியேறிவிடும். அப்படி வெளியேற்றினால், நீங்கள் விதித்த சட்டப்படி நீங்களே தண்டனையை ஏற்க வேண்டும்.”

அரசர் திகைத்தார். “என்ன உளறுகிறாய்? இது இயற்கைக்கு மாறானது” என்று கத்தினார். சியெங் மியெங் சிரித்துக்கொண்டே, “அரசே, தங்கமீன் இறந்தால் அதைத் தொடக் கூடாது, புதைக்கக் கூடாது, விலங்குகளுக்கோ பறவைகளுக்கோ இரையாகப் போடக் கூடாது என்று சட்டம் போடுவது மட்டும் இயற்கையானதா? அதிகாரத்தைப் பயன்படுத்தி நியாயமில்லாமல் நடந்து கொள்வது மட்டும் சரியா? புனிதமான மீன் என்று பொய் சொல்லி என்னைச் சிக்க வைக்க நினைத்தீர்கள்.

இப்போது நீங்களே சிக்கிக்கொண்டீர்கள்” என்றார். அரசர் தனது தவறை உணர்ந்தார். சியெங் மியெங்கின் அறிவுக்கூர்மைக்கு முன்னால் தன் அதிகாரமும் பிடிவாதமும் செல்லாது என்பதை அறிந்துகொண்டார். தோல்வியை ஒப்புக்கொண்டார்.

SCROLL FOR NEXT