மாயா பஜார்

விண்வெளிக் குப்பையால் பூமிக்கு ஆபத்தா? | வானம் நமக்கொரு போதிமரம் 10

எஸ்.வெங்கடேஸ்வரன்

விண்கலங்கள், செயற்கைக் கோள்களை ஏவும்போதும், செயற்கைக்கோள்கள் தங்கள் வாழ்நாளைக் கடந்து செயலிழக்கும் போதும், மனிதர்களின் பயனற்ற உடைமைகளே விண்வெளிக் குப்பைகள்.

ஒரு மதிப்பீட்டின்படி, 10 செ.மீ.க்கு மேல் உள்ள 34,000க்கும் மேற்பட்ட துண்டுகள், 1 செ.மீ. முதல் 10 செ.மீ. வரை உள்ள 9,00,000 பொருள்கள், 1 மி.மீ. முதல் 1 செ.மீ வரையிலான 12.8 கோடிக்கும் மேற்பட்ட நுண்ணியத் துகள்கள் விண்வெளிக் குப்பைகளாக பூமியை வலம்வருகின்றன.

இவற்றில் அளவில் பெரிய குப்பைகள், வேறு செயற்கைக்கோள்களோடு மோதாமல் இருக்கத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விண்வெளியில் மனிதன் செலுத்திய பொருள்களின் மொத்த நிறை 13,486 டன்கள்.

இதில் சுமார் 4,000 டன்கள் பயனற்ற ராக்கெட் பகுதிகளும், 8,000 டன்கள் செயற்கைக்கோள்களும் அடங்கும். இந்தச் செயற்கைக்கோள்களில் பாதி, தங்கள் வாழ்நாள் முடிந்த பின்னர் குப்பைகளாகவே சுற்றிவருகின்றன.

இவ்வளவு குப்பைகள் சுற்றிவரும்போது, அவற்றில் சில பூமியில் விழுவது இயல்பான நிகழ்வாகிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 200 முதல் 400 வரையிலான, கண்காணிப்பின் கீழுள்ள விண்வெளிக் குப்பைப் பொருள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து எரிகின்றன. அதாவது, தினமும் குறைந்தபட்சம் ஒரு விண்வெளிக் குப்பையாவது பூமியின் வளிமண்டலத்தில் நுழைகிறது.

பூமியின் 70 சதவீதப் பரப்பு பரந்த பெருங்கடல்களாலும், மக்கள் வசிக்காத பகுதிகளாலும் ஆனதால், இவை மனிதர்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. எனினும் டிசம்பர் 30, 2024 அன்று, கென்யாவின் முகுகு கிராமத்தில் 600 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள, 8 அடி விட்டமுள்ள ஒரு ராக்கெட் பகுதி உலோக வளையம் விழுந்தது.

யாருக்கும் பாதிப்பு இல்லை, எந்தச் சேதாரமும் ஏற்படவில்லை. மார்ச் 2024இல், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு பயனற்ற பேட்டரி, புளோரிடாவில் ஒரு வீட்டுக் கூரையில் விழுந்து சேதம் விளைவித்தது. நல்வாய்ப்பாக, அப்போது வீட்டில் இருந்த இளைஞருக்குக் காயம் ஏற்படவில்லை.

விண்வெளிக் குப்பையால் முதன்முறையாகப் பாதிக்கப்பட்டவர் அமெரிக்காவின் லாட்டி வில்லியம்ஸ். 1997 ஜனவரி 22 அன்று அவர் ஒரு பூங்காவில் நடந்து கொண்டிருந்தபோது, 12.7 செ.மீ. நீளமுள்ள ஒரு துண்டு அவர் தோளில் விழுந்தது. இது ஒரு டெல்டா II ராக்கெட்டின் பகுதி என இனம் காணப்பட்டது. இந்த ராக்கெட் 1996 ஏப்ரல் 24 அன்று ஏவப்பட்டு, சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்தது.

இது வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து எரிந்தபோது, அதன் துண்டுகள் சிதறின. அதில் ஒன்றுதான் லாட்டி வில்லியம்ஸ் மீது விழுந்தது. சமீபத்தில் டெக்சாஸில் இருந்து 2025 ஜனவரியில் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம், விண்ணில் ஏவிய சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது.

இதன் காரணமாக, தெறித்த துண்டுகளிடமிருந்து தப்பிக்க, மெக்சிகோ வளைகுடா பகுதியில் பயணித்த விமானங்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. விழும் ராக்கெட் துண்டுகள் நேரடியாகப் பாதிக்கக்கூடும் என்கிற அச்சத்தின் காரணமாகப் பல விமான நிலையங்கள் மூடப்பட்டன.

விண்வெளிக் குப்பைகளின் குவிப்பைத் தடுக்க, ஐக்கிய நாடுகளின் விண்வெளிப் பயன்பாடுகள் குழு 2018இல் நீண்டகால விண்வெளிச் செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.

ஒரு பயணம் முடிந்த பிறகு விண்கலங்களைச் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேற்றி வளிமண்டலத்தில் எரியச் செய்தல், ராக்கெட் பகுதிகளை உடனடியாக அகற்றுதல், விண்கலங்களில் மீதமுள்ள ஆற்றல் மூலங்களை முடக்கி விபத்துகளைத் தடுத்தல், வேண்டுமென்றே விண்கலங்களை அழிப்பதைத் தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளை இந்த வழிகாட்டுதல்கள் உள்ளடக்கியுள்ளன.

எனவே, தற்போதைய அச்சம் பூமியில் நேரடியாக விழுவதைவிட, செயற்கைக்கோள்கள், விண்வெளி நிலையங்கள் போன்ற விண்வெளி கட்டமைப்புகளுக்கும் விண்வெளிப் பயணிகளுக்கும் இந்தக் குப்பைகள் ஏற்படுத்தும் அபாயம்.

எனினும், விண்வெளிக் குப்பை பூமியின் மீதும் பெரும் தாக்கம் செலுத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை. இந்தச் சிக்கலைத் தவிர்க்க உலக அளவிலான கவனமும் முன்முயற்சிகளும் இன்றியமையாததாக உள்ளன.

(அறிவோம்)

- tvv123@gmail.com

SCROLL FOR NEXT