மாயா பஜார்

கோடை எவ்வாறு ஏற்படுகிறது? | வானம் நமக்கொரு போதிமரம் 32

த.வி.வெங்கடேஸ்வரன்

பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. இந்தப் பயணப் பாதை ஒரு முழு வட்டமாக இல்லை. அது சற்றே நீள்வட்ட வடிவில் இருக்கிறது. அதாவது, ஒரு முட்டையின் வடிவத்தைப் போல.

எனவே, இந்தப் பாதையில் பூமி சூரியனுக்கு மிக அருகில் செல்லும் ஒரு புள்ளி உண்டு. அதே போல, மிகத் தொலைவில் செல்லும் மற்றொரு புள்ளியும் உண்டு.

சூரியனுக்கு மிக அருகில் உள்ள புள்ளியை ‘பெரிஹீலியன்’ (Perihelion) என்று அழைக்கிறோம். மிகத் தொலைவில் உள்ள புள்ளிக்கு ‘அஃபீலியன்’ (Aphelion) என்று பெயர்.

நீள்வட்டப் பாதையில் செல்லும்போது சூரியனுக்கு நெருக்கமாக அமையும் பெரிஹீலியன் பகுதிக்கு பூமி வந்து சேரும்போது கூடுதல் வெப்பம் (கோடை) ஏற்படும் என்று கருதலாம்.

ஆனால், வட அரைக்கோளத்தில் (Northern Hemisphere) குளிர்காலம் நிலவும் ஜனவரி மூன்றாம் தேதி அன்று, பூமி சூரியனுக்கு மிக அருகில் வருகிறது. ஆம், வட அரைக்கோளக் குளிர்கால ஜனவரியில் அருகிலும் கோடைக்கால ஜூலையில் தொலைவிலும் வருகிறது.

ஜனவரியில் பூமி சூரியனுக்கு அருகில் இருந்தால், அப்போது கோடைக்காலம் இருக்க வேண்டுமே. ஆனால் ஜனவரியில் குளிர்காலம். எப்படி இது சாத்தியம்? இந்த முரண்பாட்டிற்கான விடை மிகவும் எளிது.

பருவங்களை நிர்ணயிப்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் அல்ல. பூமி அச்சின் சாய்வே (axial tilt) பருவங்களை உருவாக்குகிறது.

பெரிஹீலியனுக்கும் அஃபீலியனுக்கும் இடையிலான தொலைவு வேறுபாடு சுமார் 50 லட்சம் கி.மீ. இது நமக்குப் பெரிய தொலைவுதான். ஆனால், 15 கோடி கி.மீ. என்கிற சூரியன் - பூமி சராசரி தொலைவுடன் ஒப்பிடும்போது, இது ஒரு சிறிய வேறுபாடே.

யானை மீது அமரும் குருவி போல! பூமியின் சுழற்சி அச்சு 23.5 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. அச்சின் சாய்வு, சூரிய ஒளி எந்தக் கோணத்தில் புவியின் மீது விழுகிறது என்பதை மாற்றுகிறது. இதுவே கோடையையும் குளிர்காலத்தையும் நிர்ணயிக்கிறது.

‘அனலேமா’ வளைவு

உங்கள் வீட்டின் முற்றத்தில் அல்லது பால்கனியில் ஒரு நீண்ட குச்சியை நட்டு வையுங்கள். ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்குச் சரியாக, அந்தக் குச்சியின் நிழல் நுனியைச் சமதளத் தரையில் குறித்துக்கொள்ளுங்கள்.

ஆண்டு முழுவதும் இந்தப் புள்ளிகளை இணைத்துப் பார்த்தால், அவை ‘8’ என்கிற எண்ணின் வடிவத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். இந்த வடிவத்திற்கு ‘அனலேமா’ (Analemma) என்று பெயர்.

இந்த வளைவின் மிக உயரமான புள்ளி, கோடைகாலக் கதிர்த்திருப்பம் (summer solstice) மதிய நிழலைக் குறிக்கும். மிகத் தாழ்வான புள்ளி, குளிர்காலக் கதிர்த்திருப்பத்தின் (winter solstice) மதிய நிழலைக் குறிக்கும்.

கோடைகாலக் கதிர்த்திருப்பக் காலக்கட்டத்தில் சூரியனின் பாதை வானில் உயர்ந்தும், குளிர்காலக் கதிர்த்திருப்பத்தில் சூரியனின் பாதை வானில் தாழ்ந்தும் அமைவதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

மதியச் சூரியன் வானில் உயர்ந்து உள்ளதா, தாழ்வாக உள்ளதா என்பதற்கும் பருவகால மாற்றத்துக்கும் என்ன தொடர்பு? இதை எளிதாகப் புரிந்துகொள்ள ஒரு கைவிளக்கையும் ஒரு காகிதத்தையும் எடுத்துக் கொள்வோம்.

கோடைக்காலம்:

விளக்கை நேராகக் காகிதத்திற்குச் செங்குத்தாகப் பிடித்தால், ஒளி ஒரு சிறிய, பிரகாசமான வட்டமாகத் தெரியும். ஒவ்வொரு புள்ளியிலும் ஒளி பிரகாசமாக இருக்கும்.

இது சூரியன் நேரடியாகத் தலையின் மேல் இருக்கும் நிலையைக் குறிக்கும். இந்தக் கோடைக்காலத்தில், சூரிய ஒளி நேராக விழுவதால் பூமி அதிக வெப்பத்தைப் பெறுகிறது. பகல்கள் நீண்டிருக்கும். சூரியன் வானில் உச்சியில் இருக்கும்.

குளிர்காலம்:

இப்போது விளக்கைச் சற்றே சாய்த்துப் பிடியுங்கள். ஒளி நீள்வட்டமாக ஒரு பெரிய பகுதியில் பரவும். எனவே ஒவ்வொரு புள்ளியிலும் அதன் பிரகாசம் குறையும். இது குளிர்காலத்தில் சூரியன் குறைந்த உயரத்தில் இருப்பதைப் போன்றது.

சூரியன் வானில் தாழ்வாக வரும்போது, அதன் கதிர்கள் சரிவாக விழுகின்றன. சாய்வாகக் கதிர்கள் விழுவதால் அதன் வெப்பச் செறிவு குறைந்துவிடும். அப்போது அந்த இடத்திற்குக் கிடைக்கும் வெப்பமும் குறைகிறது.

பகல்கள் குறுகி, இரவுகள் நீளும். ஓர் அரைக்கோளம் சூரியனை நோக்கிச் சாயும்போது, மறு அரைக்கோளம் விலகி இருக்கும். எனவே ஓர் அரைக்கோளத்தில் கோடை என்றால், மறு அரைக்கோளத்தில் குளிர்காலம். அதனால்தான் இந்தியக் கோடைக்காலத்தின் போது ஆஸ்திரேலியாவில் குளிர்காலம்.

(அறிவோம்)

- tvv123@gmail.com

SCROLL FOR NEXT