மாயா பஜார்

உலகப் போரின் செல்லக்குட்டி நான்சி! | வரலாறு முக்கியம் மக்களே! - 37

முகில்

‘இங்கேதான் கட்டிப் போட்டிருந்தோம். கயிறு மட்டும்தான் இருக்கிறது. நான்சியைக் காணவில்லை.’ வீரர் ஒருவர் அந்தத் தகவலைச் சொன்னதுமே ராணுவ முகாமே பரபரப்பானது. அங்கும் இங்கும் தேடினர். அன்றைய பொழுது சாயும்வரை நான்சி திரும்பி வரவே இல்லை. ஒவ்வொரு வீரரின் மனதிலும் ஒரே எண்ணம்தான். ‘நாளைக்காவது நான்சியைக் கண்டறிந்துவிட வேண்டும். அதுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது.’

ராணுவப் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஓர் அடையாளச் சின்னம் (Mascot) உண்டு. அது ஓர் ஆள், ஒரு விலங்கு, ஒரு பறவை என எதுவாகவும் இருக்கலாம். உயிருள்ள விலங்குகளும் பறவைகளும் உலகப் போர் காலத்தில் அடையாளச் சின்னங்களாக வலம்வந்தன.

அப்படி, முதல் உலகப் போர் காலத்தில் தென்னாப்ரிக்காவின் நான்காம் ரெஜிமெண்ட்டின் அடையாளச் சின்னமாக ஒரு வயது மான்குட்டி அனுப்பி வைக்கப்பட்டது. மெக்லேரென் கென்னடி என்கிற பெண், போருக்குச் செய்யும் சேவையாகத் தான் வளர்த்துவந்த மானை, ராணுவச் சேவைக்கு அனுப்பி வைத்தார். அது ஸ்பிரிங்பாக் (Springbok) என்கிற இரலைவகை. அதன் பெயர் நான்சி.

          

1915, மார்ச்சில் பிரைவேட் பீட்டர்சன் என்கிற வீரரின் பொறுப்பில் நான்சி ஒப்படைக்கப்பட்டது. ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்வது, ராணுவ வீரர்களின் செல்லமாக, அவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பது, அந்த ராணுவப் பிரிவினர் செல்லும் நாடுகளுக்கு எல்லாம் சென்று போர்ச் சூழலிலும் வாழக் கற்றுக்கொள்வது நான்சியின் கடமைகள்.

இப்படி ஓர் உயிருள்ள விலங்கோ பறவையோ படைப்பிரிவில் இருந்தால் அது வெற்றியைத் தரும் என்கிற நம்பிக்கையும் வீரர்கள் மத்தியில் இருந்தது. ஆகவே, அவற்றின் பராமரிப்புக்காகத் தனியே பணம் ஒதுக்கினார்கள். முதல் உலகப் போர் வலுவடைந்திருந்தது. 1915, செப்டம்பரில் அந்த ராணுவப் பிரிவினர் இங்கிலாந்துக்குப் புறப்பட இருந்தனர். மெக்லேரென் நான்சிக்குப் பிரியாவிடை கொடுத்தார். இங்கிலாந்தில் இறங்கியது நான்சி. அங்கும் அதுக்குப் பயிற்சிகள் தொடர்ந்தன.

1916இல் அந்தப் படைப்பிரிவினர் போர் நிமித்தமாக நான்சியோடு எகிப்துக்குச் சென்றனர். இங்கிலாந்தின் குளிரைவிட, எகிப்தின் புழுதி பறக்கும் வெயில் நான்சிக்குப் பிடித்திருந்தது. அலெக்ஸாண்ட்ரியாநகரத்து மெக்ஸ் ராணுவ முகாமில் எல்லாரும் செல்லம் கொஞ்சும் மான்குட்டியாக அது வலம்வந்தது. தினசரி ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்டது. ஒருநாள் காலை காணாமல் போயிருந்தது.

‘விடுப்புக்கான அனுமதி பெறாமல் பணிக்கு வராத வீரர்’ என்று படைப்பிரிவு அதிகாரி நான்சியை அறிவித்தார். அன்றைக்கு முகாமின் வழக்கமான அணிவகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.

இரண்டாவது நாளும் நான்சியைத் தேடும் பணியில் வீரர்கள் அலைந்து திரிந்தனர். அருகில் இருந்த ராணுவ முகாம் களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. வீடு வீடாகச் சென்றும் தேடுதல் வேட்டை நடத்தினர். எதுவும் பலன் அளிக்கவில்லை.

மூன்றாவது நாள் ‘படைப்பிரிவின் அடையாளச் சின்னத்தைப் பாதுகாக்க முடியவில்லை. இவர்கள் எல்லாம் போரில் என்ன செய்வார்கள்?’ என்று பிற நாட்டினர் நினைப்பார்கள் அல்லவா. தென்னாப்ரிக்க வீரர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது ஒரு வீரர், ஓர் இசைக்கருவியை வாசித்தபடி வந்தார்.

‘இந்த இசையைக் கேட்டால் நான்சி ஓடோடி வரும்’ என்று நம்பிக்கையுடன் சொன்னார். ஆம், ஒவ்வொரு முறை ராணுவ அணிவகுப்பில் இசைக்கருவியை இசைத்து வீரர்கள் முன்னே செல்லும்போதும் அதைக் கேட்டு நடந்துவர நான்சி பழகியிருந்தது.

வீரர்கள் பலரும் வாத்தியத்தை வாசித்தபடியே வெவ்வேறு இடங்களுக்குச் சென்றனர். மதியம் ஆனது. இசை காற்றில் மிதந்தபடியே இருந்தது. எங்கிருந்தோ துள்ளிக்குதித்து ஓடிவந்தது நான்சி. அந்த ராணுவ முகாமே புத்துயிர் பெற்றது. வீரர்கள் முகத்தில் மகிழ்ச்சி. அது எங்கு சென்றது என்பது மட்டும் தெரியவில்லை.

சில மாதங்களில் அந்தப் படைப்பிரிவினர் எகிப்திலிருந்து பிரான்ஸுக்குப் புறப்பட்டனர். அங்கே போர் கடுமையாகவே இருந்தது. தோட்டாக்கள் வெடிக்கும் ஓசைக்கு மத்தியில் அமைதியாகப் புல் மேயவும் கற்றுக் கொண்டிருந்தது நான்சி. பிரான்ஸின் வடக்குப் பகுதியில் இருக்கும் சோமே நதியோரம் நடந்த போரில், ஜெர்மானியர்கள் வீசிய குண்டு ஒன்று நான்சியை மிரள வைத்தது.

அந்த அதிர்ச்சியில் அருகிலிருந்த சுவர் ஒன்றில் வேகமாக மோதிக் கொண்டது. அதில் நான்சியின் இடதுபக்கக் கொம்பு உடைந்து போனது. அந்தச் சம்பவத்துக்காக நான்சிக்கு நோய்க்கால விடுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. வழக்கம்போல அது தன் கடமைகளைத் தொடர்ந்தது. பின்பு அதற்கு மீண்டும் கொம்பு முளைத்தபோது, அது கீழ்நோக்கி வளர்ந்தது.

முதல் உலகப் போர் முழுக்க நான்சி, அந்தப் படைப்பிரிவுடன் இணைந்து பல்வேறு இடங்களில் தன் கடமைகளைத் தொடர்ந்தது. 1918, பிப்ரவரி 17. அன்றைக்கு அது தன் பணிக்காலத்தின் இறுதி ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்டது. முதல் உலகப் போரில் இறந்துபோன தென்னாப்ரிக்க வீரர்களுக்காக, பிரான்ஸில் அமைக்கப்பட்ட டெல்வில் வுட்நினைவிடத்தை நோக்கிய ஊர்வலம் அது.

ஊர்வலத்திற்குப் பின் வீரர்கள் நான்சியை அணைத்துக் கொண்டனர். சில மாதங்களில் குளிர்காலம் ஆரம்பமானது. அப்போது நிமோனியாவால் பாதிக்கப்பட்டது நான்சி. பீட்டர்சனும் மருத்துவ உதவியாளர்களும் நான்சியை அக்கறையுடன் கவனித்துக் கொண்டனர். அந்த நவம்பர் 26 அன்று நான்சி விடைபெற்றது.

ஒரு ராணுவ அதிகாரியின் மறைவுக்கு உரிய மரியாதைகள் அனைத்தும் நான்சிக்கும் வழங்கப் பட்டன. குண்டுகள் முழங்கின. உலகப் போரில் உயிரிழந்த பிற வீரர்களின் கல்லறைகளுக்கு அருகிலேயே நான்சியும் புதைக்கப்பட்டது. அப்படி ஒரு கௌரவம் வேறு எந்தப் படைப்பிரிவு அடையாள விலங்குக்கும் கிடைத்ததில்லை.

(சந்திப்போம்)

SCROLL FOR NEXT