மாயா பஜார்

போப்பின் செல்ல யானை ஹன்னோ | வரலாறு முக்கியம் மக்களே! - 31

சா.ஜெ.முகில் தங்கம்

வாஸ்கோடகாமா, 1498இல் இந்தியாவின் கோழிக் கோடை அடைந்தார். அடுத்த சில ஆண்டுகளில் போர்த்துக்கீசியர்களின் ஆதிக்கம் கேரளத்தில் பரவத் தொடங்கியது. இந்தியாவில் காலனி ஆதிக்கம் நிலைபெற்றது. இங்கிருக்கும் மன்னர்கள், ஆங்கிலேய வைஸ்ராய்களுக்குப் பரிசுகளை வாரிக்கொடுத்தார்கள். அதில் ‘உயிருள்ள’ பரிசுகளும் இருந்தன.

அது ஒரு வெள்ளை யானை (வெளிர் சாம்பல்). அரிதானது, அதிர்ஷ்டம் மிக்கது, புனிதமானது என்று நினைத்தார்கள். ஆகவே கொச்சின் ராஜா, ‘இதை மாண்புமிகு போர்த்துக்கீசிய மன்னருக்கு அனுப்பி வையுங்கள்’ என்றார். போர்த்துக்கீசிய மன்னர் முதலாம் மானுவேல் வேறொரு ‘கணக்கு’ போட்டார். ஐரோப்பிய ராஜ்ஜியங்களில் அப்போதைக்குப் போர்ச்சுகலின் கைதான் வணிகத்தில் ஓங்கியிருந்தது.

ஸ்பெயினும் கடுமையாக முட்டி மோதிக்கொண்டிருந்தது. ராஜ்ஜியங்களுக்குள் சண்டை என்றால் போப்தான் தலையிட்டுத் தீர்த்து வைப்பார். ஆகவே, எதற்கும் இருக்கட்டுமே என்று போப்புக்கு அந்த வெள்ளை யானையை அரிய, பெரிய பரிசாக அனுப்பி வைக்க முடிவுசெய்தார். 1513இல் புதிய போப்பாகப் பத்தாம் லியோ பொறுப்பு ஏற்றிருந்தார்.

யானையை மலையாளத்தில் ‘ஆனா’ என்று அழைப்பார்கள். அதுவே அந்த யானையின் ஆங்கிலேய உச்சரிப்பு Hanno ஆனது. கொச்சி துறைமுகத்திலிருந்து ஹன்னோ பாகன்களுடன் கப்பலில் ஏற்றப்பட்டது. கடல் பயணம் ஹன்னோவுக்குச் சிரமமானதாகத்தான் இருந்தது. உப்புக்காற்றில் அதன் சருமம் வறண்டு போவதைத் தடுக்க அடிக்கடி அதன் உடலில் எண்ணெய் தேய்த்துவிடப்பட்டது.

1514இல் போர்ச்சுகலின் லிஸ்பனுக்கு சென்று இறங்கியது ஹன்னோ. அங்கே கொஞ்ச காலம் ஓய்வு. பிறகு கடல் வழியே ஸ்பெயினைத் தாண்டி இத்தாலியின் ரோமை நோக்கிப் பயணம். போர்த்துக்கீசியத் தூதுவர் டிரிஸ்டாவோ, மன்னர் முதலாம் மேனுவலின் கடிதத்தோடு, ஹன்னோவை போப்பிடம் ஒப்படைக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார். வழியிலிருந்த துறைமுக நிறுத்தங்களில் எல்லாம் மக்கள் பெருமளவு கூடினர், யானையைப் பார்க்க.

பண்டைய ரோம் சாம்ராஜ்ஜியத்தில் யானைகள் வளர்க்கப் பட்டிருக்கின்றன. அதன் பிறகு பல நூற்றாண்டுகளாக ரோமானியர்கள் யானையையே கண்டதில்லை. அப்போது ஒரு யானை அங்கே வரப்போகிறது என்று தெரிந்ததுமே வாடிகனில் மக்கள் குவிந்தனர். டிரிஸ்டாவோ முன்னே வர, பாகனின் வழிகாட்டுதலில் ஹன்னோ, கம்பீர நடை போட்டு அந்த வீதிகளில் வலம்வந்தது.

போப் பத்தாம் லியோ, புனித ஏஞ்சலோ கோட்டை மாடத்திலிருந்து ஹன்னோவைப் பார்த்துக் கொண்டிருந்தார். போப்பின் முன்பு வந்து நின்ற ஹன்னோவுக்கு, பாகன் கட்டளைகளைப் பிறப்பித்தார். ஹன்னோ, தன் முன்னங்கால்களை மடக்கி மரியாதை செய்தது. பின்பு மூன்று முறை அந்த இடமே அதிரும் வகையில் பிளிறியது. கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரித்தனர். அங்கே தண்ணீர் வைக்கப்பட்டிருக்க, ஹன்னோ அதைத் தும்பிக்கையால் உறிஞ்சி, மக்கள் மீது பீய்ச்சி அடித்தது.

அதை எதிர்பாராத மக்கள் சந்தோஷத்தில் கூத்தாடினர். போப்பும் குழந்தைபோலச் சிரித்தார். அவருக்கு ஹன்னோவை மிகவும் பிடித்துவிட்டது. போப்பின் கட்டளைக்கு ஏற்ப, ஹன்னோவுக்கான தங்கும் இடம் அமைக்கப்பட்டது. பின்பு அதற்காகவே சகல வசதிகளும் நிறைந்த புதிய தங்குமிடம் கட்டிக் கொடுக்கப் பட்டது. பாகன்களுக்கும் நல்ல மரியாதை.

தினமும் யானையைப் பார்க்கக் கூட்டம் வந்து போனது. அங்கே நடந்த நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், கொண்டாட்டங்கள், பண்டிகைகள் என எல்லாவற்றிலும் ஹன்னோவுக்குத் தனி மரியாதை வழங்கப்பட்டது. போப்பின் ஆணைப்படி இத்தாலியின் கலைஞர் ரபேல், ஹன்னோவை ஓவியமாகத் தீட்டினார். போப், ஹன்னோவைப் பார்க்க இயலாத நாள்களில்கூட, அதைப் பற்றி விசாரித்துக்கொண்டார்.

போப் பத்தாம் லியோ

1516, மே. ஃபிரான்ஸிஸ்கன் அமைப்பைச் சேர்ந்த துறவி ஃப்ரா பொன்வென்சுரா தனது சீடர்களுடன் ரோமுக்குக் கடும் கோபத்துடன் வந்தார். அது போப்புகளுக்கான அரசியல் பிரச்சினை. தீர்க்கதரிசனங்கள் சொல்வதில் புகழ்பெற்ற ஃப்ரா, தானே தேவனால் அறிவிக்கப்பட்ட போப் என்று உரைத்தார்.

‘1516, செப்டம்பர் 16க்கு முன்னதாகவே போப்பும், திருச்சபையின் இளவரசர்களாகிய ஐந்து கர்டினால்களும், போப்பின் செல்ல யானையும், அதன் பாகன்களும் மரித்துப் போவார்கள்’ என்று கூறினார். அன்றைய மக்கள் தீர்க்கதரிசனங்களைப் பெரிதும் நம்பினார்கள். போப் பத்தாம் லியோவுக்குமே அதில் நம்பிக்கை இருந்தது. அவர், ஃப்ரா பொன்வென்சுராவைக் கைது செய்யச் சொன்னார்.

ஆனால், ஏதாவது நடந்துவிடுமோ என்கிற பயமும் அவருக்கு இருந்தது. ஆகவே, ஹன்னோவை நன்கு கவனித்துக்கொள்ளச் சொன்னார். அந்த ஜுன் ஆரம்பத்தில் ஹன்னோ சோர்ந்து படுத்துக் கிடந்தது. சாப்பிட விருப்பமில்லாமல் இருந்தது. ரோமிலேயே மிகச்சிறந்த மருத்துவர்களை போப் வரவழைத்தார். அவர்கள் ஹன்னோவைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். போகப்போக ஹன்னோவுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் உண்டானது. போப் அதைவிட்டு விலகவே இல்லை.

ஜுன் 8, ஏழே வயதான ஹன்னோவின் உயிர் பிரிந்தது. அப்போது அங்கிருந்த போப், தாங்க முடியாத துயரத்தில் ஆழ்ந்தார். ஹன்னோவுக்காகத் தன் கைப்பட, நீளமான இரங்கல் குறிப்பு எழுதி கௌரவித்தார். மிகுந்த மரியாதையுடன் ஹன்னோவின் சடலம் வாடிகனிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

சரி, ஹன்னோ இறந்தது ஃப்ராவின் சாபத்தாலா? பல காரணங்கள் உண்டு. ஐரோப்பியர்களுக்கு யானையைப் பராமரிக்கத் தெரியவில்லை. ஐரோப்பியச் சூழலில் இந்தியப் பாகன்களாலும் யானையை முறையாகப் பராமரிக்க இயலவில்லை. அங்கு நிலவும் கடும்குளிரும் உணவும் யானைக்கு ஏற்றதாக இல்லை. தவிர, ஹன்னோவுக்கு மலச்சிக்கல் இருந்தது. அதைச் சரிசெய்ய தங்கம் கலந்த மருந்தைக் கொடுத்தார்கள். அதுவே அதன் உயிருக்கு எதிராகப் போனது.

(சந்திப்போம்)

- writermugil@gmail.com

SCROLL FOR NEXT