பாபி
1850களில் ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரத்துக்குப் பிழைப்பு தேடி வந்தார் ஜான் கிரே. இரவு நேரத்தில் காவல்துறை சார்பாக ரோந்து செல்லும் பணி கிடைத்தது. இரவெல்லாம் கடுங்குளிரில் தனியாகச் செல்ல வேண்டும். ஆகவே, துணைக்கு நாய்க்குட்டி ஒன்றை வாங்கினார் ஜான். ஸ்காட்டிஷ் ‘ஸ்கை டெரியர்’ ரக நாய்க்குட்டி. ‘பாபி’ என்று பெயரிடப்பட்ட அந்த நாய்க்குட்டி ஜானின் காலைச் சுற்றிச் சுற்றி வந்தது. இருவரும் இரவில் ஒருவருக்கு இன்னொருவர் ஆதரவாக இருந்தனர். அவர்களுக்கு இடையே அன்பு பெருகியது.
காலம் ஓடியது. ஜானின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தன் அன்புக்குரிய பாபியை இறுதியாக ஒருமுறை கொஞ்சிவிட்டு இறந்து போனார் (1858, பிப்ரவரி 15). அவர் உடல் எடின்பர்க்கில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டது. இனி ஜான் உயிரோடு திரும்பி வர மாட்டார் என்பது பாபிக்குப் புரியவில்லை. ஆகவே, அவரைப் புதைத்த இடத்திலேயே நின்றது. நாள்கள் நகர்ந்தன.
வாரங்கள் கடந்தன. மாதங்கள் ஓடின. பாபி, அந்தக் கல்லறையை விட்டு அகலவில்லை. அந்தக் கல்லறைத் தோட்டத்தையே தனக்கான வாழ்விடமாக்கிக் கொண்டது. ஹிடெசபுரோ உயெனோ ஜப்பானின் டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1924இல் நாய்க்குட்டி ஒன்றை வாங்கினார். ஜப்பானிய வகை அகிடா நாயான அதற்கு, ‘ஹச்சிகோ’ என்று பெயர் வைத்தார்.
உயெனோ தினமும் வேலைக்குச் சென்றுவிட்டு ரயிலில் திரும்பி வருவார். அவர் வந்து இறங்கும் ஷிபுயா ரயில் நிலையத்தில் ஹச்சிகோ காத்திருக்கும். அவரைக் கண்டதும் துள்ளிக் குதித்து ஓடும். இருவரும் சேர்ந்து வீட்டுக்கு வருவார்கள். கிட்டத்தட்ட பதினைந்து மாதங்கள் இப்படித்தான். 1925, மே 21. உயெனோவின் வருகைக்காக வழக்கம்போல ஷிபுயா ரயில் நிலையத்தில் காத்திருந்தது ஹச்சிகோ.
ரயில் வந்தது. உயெனோ வரவில்லை. நேரம் கடந்துகொண்டே போனது. ஹச்சிகோ நிலைகொள்ளாமல் அங்கும் இங்கும் தேடியது. அன்றைய வேலை நேரத்திலேயே உயெனோ இறந்துவிட்டார் என்பது அதுக்குத் தெரியவில்லை. வேலையாள் ஒருவர் அதைத் தேடிக் கண்டறிந்து வீட்டுக்கு அழைத்துவந்தார்.
வீட்டில் உயெனோ சடலம் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் அருகில் ஹச்சிகோ படுத்துக்கொண்டது. அடுத்த நாள் வழக்கம்போல ஹச்சிகோ, ஷிபுயா ரயில் நிலையத்துக்குச் சென்றது. உயெனோவின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தது. மற்ற நேரத்தில் உயெனோவின் வீட்டுத் தோட்டக்காரர், ஹச்சிகோவைக் கவனித்துக்கொண்டார்.
ஹச்சிகோ
‘அடச்சே, இந்த நாய் இங்கேயே சுற்றிச் சுற்றி வருகிறது. தொல்லையாக இருக்கிறது. விரட்டிவிட்டாலும் போக மாட்டேன் என்கிறது’ என்று எடின்பர்க் கல்லறைத் தோட்டப் பணியாளர்கள் பாபியைக் கண்டு எரிச்சல் அடைந்தார்கள். யார் என்ன செய்தாலும் பாபி மீண்டும் கல்லறைத் தோட்டத்திலேயே வந்து நின்றது.
‘இந்த நாய் வருவோர், போவோருக்கு எல்லாம் தொந்தரவாக இருக்கிறது. அதைத் துரத்துங்கள்’ என்று ஷிபுயா ரயில் நிலையத்தைச் சேர்ந்தவர்களும் சில பயணிகளும் ஹச்சிகோவை விரட்டிவிட்டார்கள். ஆனாலும் ஹச்சிகோ தினமும் குறிப்பிட்ட நேரத்தில் ரயில் நிலையத்துக்கு வந்து காத்து நின்றது.
பாபியின் கதையை, அதன் பாசத்தை அந்தக் கல்லறைத் தோட்டத்துப் பணியாளர்கள் புரிந்துகொண்டனர். பாபி தங்குவதற்கு அங்கேயே ஓர் இடமும் உணவும் கொடுத்துப் பராமரிக்கத் தொடங்கினர். ஹச்சிகோவின் உயெனோ மீதான விசுவாசத்தை, ஷிபுயா ரயில் நிலைய ஊழியர்கள் உணர்ந்து நெகிழ்ந்தார்கள். தினமும் அதன் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினார்கள். பாபியின் புகழ் எடின்பர்க் நகரம் எங்கும் பரவியது.
ஹச்சிகோவின் பாசம் பத்திரிகைகளில் செய்தியாக வெளியாகி, ஜப்பானியர்களை நெகிழ வைத்தது. ஜான் வாழ்ந்தபோது நாள்தோறும் ஒரு மணிக்கு பாபியோடு அருகில் இருக்கும் கடைக்குச் சென்று அதற்கு ஏதாவது வாங்கித் தருவது வழக்கம். ஒரு மணிக்குத் தினமும் எடின்பர்க் நகரில் மணிச் சத்தம் கேட்கும். அப்போது பாபி கல்லறைத் தோட்டத்திலிருந்து வெளிவரும்.
அதன் வருகைக்காகச் சிலர் காத்திருப்பார்கள். அதற்கு ஏதாவது வாங்கித் தருவார்கள். இது வழக்கமாக மாறியது. 1867இல் எடின்பர்க் நகரத்து நாய்களுக்கு எல்லாம் லைசென்ஸ் கட்டாயம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. பாபி பிரியர்கள் பலரும் இணைந்து அதற்காக லைசென்ஸ் வாங்கி, கழுத்தில் கட்டிவிட்டார்கள்.
ஹச்சிகோவுக்கென ஜப்பானில் தனி ரசிகர் படையே உருவானது. அதன் பராமரிப்புக்காகப் பலரும் நிதி கொடுத்தார்கள். அதன் அன்பை, விசுவாசத்தைப் போற்றிக் கவிதைகள் படைத் தார்கள். நாட்டின் பல இடங்களிலிருந்தும் ஹச்சி கோவைக் காண ஷிபுயா ரயில் நிலையத்துக்கு வந்தார்கள். 1934இல் விசுவாச ஹச்சிகோவுக்குச் சிலை எழுப்ப நிதி திரட்டுவதற்காக, சுமார் 3,000 பேர் கூடி நிகழ்ச்சி நடத்தினார்கள்.
14 ஆண்டுகள், ஜானின் கல்லறை அருகேயே தன் வாழ்க்கையைக் கழித்த பாபி, 1872, ஜனவரி 14 அன்று இறந்தது. அதே கல்லறைத் தோட்டத்தில் பாபியும் புதைக்கப்பட்டது. 1935, மார்ச் 8 அன்று ஹச்சிகோ இறுதியாக ரயில் நிலையத்துக்குச் சென்றது. இறுதியாக ஒருமுறை ஏமாற்றம் அடைந்தது. 1872இல் பாபியின் கதையைக் கேட்டு நெகிழ்ந்த, ஏஞ்சலியா ஜார்ஜியா அதற்காகச் சிலை ஒன்றை நிறுவினார்.
இப்போதும் அந்தச் சிலை பாபியின் விசுவாசத்தை உலகத்துக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அங்கே வருவோர் எல்லாம் பாபி சிலையின் மூக்கைத் தொட்டுச் செல்வது வழக்கம். அதனால், அதிர்ஷ்டம் கிடைக்கும் என்றொரு நம்பிக்கை. அதை அன்பு என்றும் சொல்லலாம். ஷிபுயா ரயில் நிலையத்தில் ஹச்சிகோவுக்குச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
அங்கே ஒரு டிக்கெட் கவுண்ட்டருக்கு ஹச்சிகோவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. விசுவாசம் என்றதும் இன்றைக்கும் ஜப்பானியர்கள் நினைவுக்கு வருவது ஹச்சிகோதான். மனிதர்களுக்குப் பிற உயிரினங்களைவிட, நாய்கள் மீது ஏன் பிரியம் அதிகம் என்பதற்கு பாபியும் ஹச்சிகோவும் வேறு வேறு காலத்தில் வாழ்ந்த வரலாற்று எடுத்துக்காட்டுகள். அவற்றின் வாழ்க்கைச் செய்தியும் ஒன்றே ஒன்றுதான். ‘எவ்வளவு காலம் ஆனாலும் நான் காத்திருப்பேன்!’
(அடுத்த இதழில் நிறைவடையும்)
- writermugil@gmail.com