

லண்டனில் 149 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பாரம் பரியப் பெருமைமிக்க டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி விம்பிள்டன். போட்டியில் வீரர்கள் ஆவேசமாக மோதிக் கொண்டிருக்கும் போதே, புறாக்கள் ஆயாசமாகப் புல்வெளியில் வலம்வந்து கொண்டிருக்கும்.
விம்பிள்டன் மைதானத்திலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து மடிந்த புறா பரம்பரையும் உண்டு. அதெல்லாம் பழைய கதை. இப்போதெல்லாம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் பெரும்பாலும் புறாக்களைப் பார்க்க இயலாது. காரணம், அங்கே ஒரு பறவை கம்பீரமாகப் பறந்து திரிந்து காவல் காத்துக் கொண்டிருக்கிறது. அதன் பெயர், ரூஃபஸ்.
1999. டோனா டேவிஸ் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆடவர் அரையிறுதிக்கான போட்டியில் பீட் சாம்ப்ராஸ், டிம் ஹென்மேனுடன் மோதிக் கொண்டிருந்தார்.
இரண்டு வீரர்களும் மட்டை கொண்டு தம்மை நோக்கிப் பாய்ந்து வரும் பந்தை மட்டும் எதிர்கொள்ளாமல், பறந்து வரும் புறாக்களையும் எதிர்கொண்டனர். அது, அவர்களின் ஆட்டத்தைப் பாதிப்பதாக இருந்தது.
இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த டோனா டேவிஸ், இதற்குத் தீர்வு என்ன என்று சிந்திக்கத் தொடங்கினார். அதில் கிடைத்த யோசனையையே, தனக்கு அடையாளம் கொடுக்கும் தொழிலாக மாற்றிக் கொண்டார்.
Harris Hawk கழுகுக் குடும்பத்தைச் சேர்ந்தது. வேட்டைக்காரர்கள் கழுகுகளைப் பழக்கப்படுத்தி, அவற்றைக் கொண்டு வேட்டையாடும் வழக்கம் காலம் காலமாகத் தொடர்கிறது. ஏனெனில் இந்த வகைப் கழுகுகளைப் பழக்கப்படுத்துவது எளிது. புத்திசாலித்தனம் கொண்ட பறவைகள். மனிதர்களோடு பழகும் இயல்பும் கொண்டவை.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் இருந்து புறாக்களை வெளியேற்ற, ஹாரிஸ் வகைக் கழுகைக் கையில் எடுத்தார் டோனா டேவிஸ். ஹாமிஸ் என்கிற கழுகை முதலில் பழக்கப்படுத்தினார். அதனைக் கொண்டு புறாக்களை விரட்டியடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். மூன்று ஆண்டுகள் இந்தப் பயிற்சிகள் தொடர்ந்தன. பின்பு 2008இல், டோனா டேவிஸின் கையில் வந்து சேர்ந்தது ரூஃபஸ் கழுகு, அப்போது அதன் வயது 16 வாரங்கள்.
முதலில் டோனா, ரூஃபஸின் நம்பிக் கையைப் பெற்றார். இது பாதுகாப்பான இடம். இங்கே எப்போதும் உணவு கிடைக்கும். இவருடன் இருந்தால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ரூஃபஸ் நம்ப ஆரம்பித்தது.
ஆகவே ரூஃபஸ், டோனாவின் சொல்படி கேட்டுப் பறக்க ஆரம்பித்தது. விம்பிள்டன் மைதானத்தின் நீள, அகலங்களைத் தனது சிறகுகளால் அளவெடுத்தது. தினமும் காலையிலும் மாலையிலும் ரூஃபஸ் அங்கே வரும். எங்கெல்லாம் புறாக்கள் தென்படுகின்றனவோ அங்கெல்லாம் சென்று அச்சுறுத்தும்.
ரூஃபஸைத் தினமும் காணும் புறாக்கள், ‘இந்த இடம் நாம் வாழறதுக்குச் சரிப்பட்டு வராது’ என்று பயந்து, இடத்தை மாற்றிக்கொள்ளும். மைதானத்தின் கூரையில் இண்டு, இடுக்குகளில் புறாக்கள் கூடு கட்டாமல் ரூஃபஸ் பார்த்துக்கொண்டது.
2012. இரவு நேரத்தில் காருக்குள் வைக்கப்பட்டிருந்த ரூஃபஸ் காணாமல் போனது. யாராவது எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று டோனா குடும்பத்தினர், காவல்துறையில் புகார் கொடுத்தனர். விம்பிள்டனின் பிரியமான பறவை ரூஃபஸ் காணாமல் போன செய்தி பரவியது.
யார் அதைக் கடத்திச் சென்றிருப்பார்கள், அது மீண்டும் திரும்ப வருமா என்று ரசிகர்கள் கவலைப்படத் தொடங்கினார்கள். மூன்றாவது நாள் காலையில் பெட்டி ஒன்றில் ரூஃபஸ் படுத்திருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் வந்தது.
அது வைக்கப்பட்டிருந்த கால்நடை மருத்துவமனைக்கு டோனாவும் குடும்பத்தினரும் விரைந்தனர். அது ரூஃபஸ்தான். காலில் சிறிய காயம். மற்றபடி நன்றாகவே இருந்தது. ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். ரூஃபஸ்ஸின் ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
அடுத்த விம்பிள்டன் போட்டியில், வழக்கம்போல மைதானத்தில் புறாக்களை வீறுகொண்டு விரட்டத் தன் சிறகுகளை விரித்த ரூஃபஸைக் கண்டு பார்வையாளர்கள் மகிழ்ந்தார்கள். போட்டி நடக்கும் போது புறாக்களை ரூஃபஸ் குறிவைக்குமே தவிர, ரசிகர்களையோ ஆட்டக்காரர்களையோ தொந்தரவு செய்யாது.
யாருக்கும் இடைஞ்சல் இன்றி வலம்வந்து மைதானத்தைக் காவல் காக்கிறது. அதனுடைய இருப்பே லண்டன் புறாக்களுக்கு அங்கு வரக்கூடாது எனத் தோன்ற வைத்துவிட்டது. ஆக, விளையாடுபவர்கள் தங்கள் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். ஆம், ரூஃபஸ் விளையாட்டு வீரர்களின் செல்லமும்தான். விம்பிள்டன் மட்டுமன்றி, வேறு சில முக்கியமான நிகழ்வுகளிலும் தொந்தரவு செய்யும் பறவைகளை விரட்டியடிக்கும் வேலையை ரூஃபஸ் செய்து வருகிறது.
வேட்டையாடி உண்பது என்பது ரூஃபஸின் இயல்பு. ஆகவே, சில நேரம் ரூஃபஸ் வெளியே வேட்டையாடித் திரிந்துவிட்டு, திரும்பி வராது. வயிறு நிரம்பியதால் மரக்கிளையில் ஓய்வெடுக்கும். ஓரிரு நாள்கள் கழித்துக்கூட டோனாவிடம் வந்து சேரும். டோனா அதற்காகக் கவலைப்படுவதில்லை. ரூஃபஸுடன் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி, அதன் இடத்தைச் சொல்லிவிடும்.
புறாக்களை விரட்டும் தலைமைப் பறவை (Chief Pigeon Deterrent) என்றுதான் விம்பிள்டன் மைதானத்தில் ரூஃபஸை அழைக்கின்றனர். அதுவே அதன் பெருமைமிகு அடையாளம்.
அது இந்தப் பணியைச் செய்ய ஆரம்பித்து 17 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. ரூஃபஸுக்கெனத் தனி ரசிகர் பட்டாளம் உலக அளவில் பரந்து விரிந்திருக்கிறது. அதற்கெனச் சமூக வலைத்தளப் பக்கங்கள் இருக்கின்றன.
மைதானத்தில் பறக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக, ஒவ்வொரு முறையும் தன் வால்பகுதியைப் பிரத்யேக பாணியில் சிலிர்ப்புடன் அசைத்துப் புறப்படும். அதற்கு Wimbledon Wiggle என்கிற பெயரும் நிலைத்துவிட்டது.
வாழும்போதே வரலாற்றில் இடம்பெற்று, விம்பிள்டன் வானை வலம்வந்து கொண்டிருக்கிறது ரூஃபஸ். பொதுவாக 35 ஆண்டுகள்வரை ஹாரிஸ் வகைக் கழுகுகள் வாழும். ஆகவே, இன்னும் சில ஆண்டுகள் ரூஃபஸின் காவல் பணி தொடரும்.
(அறிவோம்)
- writermugil@gmail.com