செண்பகக் காட்டு சிங்கராஜாவுக்குத் தூங்குவது என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், ராஜாவாக இருப்பதால் யாராவது பார்க்க வந்துகொண்டே இருப்பார்கள். அதனால் கழுதையைக் காவலுக்கு வைத்து விட்டு, பகலில் ஓய்வெடுக்கும்.
யார் சிங்கத்தைப் பார்க்க வந்தாலும் முழு விவரம் கேட்டு, அது சரியானதா என்று சோதித்துவிட்டு, சிங்கராஜா எழுந்ததும் சொல்கிறேன், நாளை வா என்று அன்புடன் அனுப்பி வைக்கும் கழுதை.
ஒருநாள் குள்ளநரி வந்து, தன் வருத்தத்தையும், சில கோரிக்கைகளையும் கழுதையிடம் தெரிவித்தது. குள்ளநரி நினைப்பதை அறிந்த கழுதை அன்புடன் அதைத் தடவிக்கொடுத்து, “இதெல்லாம் ஒரு குறையா உனக்கு? உன்னைவிட எவ்வளவோ பேர் மோசமான நிலையில் இருக்கிறார்கள். இருந்தாலும் நான் ராஜாவிடம் சொல்கிறேன். நாளைக்கு வா” என்று அனுப்பி வைத்தது.
குள்ளநரிக்குக் கழுதையின் மீது கோபம் வந்துவிட்டது. பனங்காட்டு நரியிடம் சென்று விவரத்தைக் கூறியது. “எனக்கும் தெரியும். அங்கு எல்லாமே அந்தக் கழுதை வைத்ததுதான் சட்டம். தூங்குமூஞ்சி ராஜாவுக்கு ஒண்ணும் தெரியாது. நான் இப்போதே சென்று நியாயம் கேட்டு வருகிறேன்” என்று ஓடியது பனங்காட்டு நரி.
“நரியே வா. பலரின் பிரச்சினைகளைத் தீர்க்கும் உனக்குமா பிரச்சினை” என்று ஆச்சரியத்துடன் கேட்டது கழுதை. “ஒரு முக்கியமான விஷயம் சிங்கராஜாவிடம் கூற வேண்டும்.” “ என்ன விஷயம்?” “இது, கழுதைக்குப் புரியும் விஷயம் அல்ல. ராஜாவிடம் மட்டுமே சொல்ல முடியும். “இப்போது அவரைப் பார்க்க இயலாது. பிறகு வா” என்றது கழுதை.
“எனக்கு இப்போதே பார்க்க வேண்டும்” என்றது நரி. “பொறுமை இல்லை என்றால் என்னிடம் சொல்லி விட்டுச் செல். நான் ராஜாவிடம் சொல்லிவிடுகிறேன். அவர்தான் உன்னைச் சந்திக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வார்” என்றது கழுதை.
“ஒருவேளை சந்திக்காவிட்டால்?” “வந்த வழியே செல்ல வேண்டியதுதான்…” கோபம் கொண்ட பனங்காட்டு நரி, “உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டது. நரி ஏதோ கெடுதல் செய்யப் போகிறது என்பதை உணர்ந்த கழுதை, தன் நண்பன் சிட்டுக்குருவியை அழைத்தது.
“நரியைக் கண்காணித்துக் கொண்டே இரு. ஏதாவது தவறாக இருந்தால் என்னிடம் சொல்” என்றது கழுதை. பனங்காட்டு நரியும் குள்ளநரியும் பக்கத்துக் காட்டு சிங்கராஜாவைச் சந்தித்தன. “எங்க ராஜா உடல்நலம் இன்றி இருக்கிறார். திறம்பட இந்தக் காட்டை ஆளும் நீங்களே எங்கள் காட்டையும் ஆள வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறோம்” என்றது பனங்காட்டு நரி.
“ஆ… என் நண்பனுக்கு உடல்நலம் சரியில்லையா? என் காட்டை நிர்வகிப்பதற்கே எனக்கு நேரம் போத வில்லை. இதில் உங்கள் காட்டையும் எப்படி? “இரண்டு காடுகளையும் உங்களால் ஆள முடியும். இந்த வாய்ப்பு யாருக்கும் கிடைத்ததில்லை. உங்களுக்கு நாங்கள் உதவுவோம்” என்றது பனங்காட்டு நரி.
மகிழ்ந்த சிங்கராஜா, தன்னோடு சில விலங்குகளை அழைத்துக்கொண்டு புறப்பட்டது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிட்டுக்குருவி, அதிர்ச்சியடைந்தது. உடனே சென்று கழுதையிடம் விஷயத்தைக் கூறியது. கழுதைக்கும் பதற்றமாக இருந்தது. உடனே சிங்கத்தை எழுப்பி, விவரத்தைச் சொன்னது.
“அப்படியா, நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றது சிங்கராஜா. சற்று நேரத்தில் பக்கத்துக் காட்டு சிங்கராஜா விலங்குகள் புடைசூழ வந்தது. “மன்னா, இந்தக் கழுதைதான் மிகவும் பொல்லாதவன். இவனுக்கு உடனே தண்டனை வழங்குங்கள். பிறகு நோயுற்ற சிங்கராஜாவை காடு கடத்திவிடுங்கள்” என்றது பனங்காட்டு நரி.
“விசாரிக்காமல் நான் யாருக்கும் தண்டனை வழங்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, கழுதையிடம் “உங்க ராஜா எப்படி இருக்காரு?” என்று கேட்டது பக்கத்துக் காட்டு சிங்கராஜா. “வணக்கம். எங்கள் சிங்கராஜா மிகமிக நன்றாக இருக்கிறார்” என்றது கழுதை.
பக்கத்துக் காட்டு சிங்கம் நரிகளைப் பார்த்தது. “சிங்கராஜா, இவன் பொய் சொல்கிறான். நீங்களே நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று அன்போடு வரவேற்றது கழுதை. கழுதையைத் தள்ளிவிட்டு, குகைக்குள் நுழைந்தது பக்கத்துக் காட்டு சிங்கராஜா.
அங்கே சிம்மாசனத்தில் அமர்ந்து, ஒவ்வொரு விலங்காக அழைத்து, அதன் குறையைக் கேட்டுக்கொண்டிருந்தது சிங்கராஜா. “இப்போது பக்கத்துக் காட்டு சிங்கராஜா வந்திருக்கிறார், அவரை அன்புடன் வரவேற்போம், வாருங்கள்” என்று விலங்குகளுடன் எழுந்து வந்தது சிங்கராஜா.
மகிழ்ந்த பக்கத்துக் காட்டு சிங்கராஜா, “நலமாக இருக்கும் தங்களை நரிகள் தவறாகச் சொல்லிவிட்டன. அதை நம்பி வந்துவிட்டேன். மகிழ்ச்சி. நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்” என்றது. “தங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி. இதோ சூப் தயாராகிவிட்டது. அனைவரும் பருகிவிட்டுச் செல்ல வேண்டும்” என்றது சிங்கராஜா.
பக்கத்துக் காட்டு சிங்கராஜாவும் விலங்குகளும் சூப்பைப் பருகிவிட்டுச் சென்றன. “கழுதையே, பனங்காட்டு நரியையும் குள்ளநரியையும் அழைத்து வா” என்றது சிங்கராஜா. “அவை இரண்டும் இந்நேரம் நம் காட்டின் எல்லையைத் தாண்டியிருக்கும் சிங்கராஜா” என்றது கழுதை.
- முருகன்