மாயா பஜார்

அன்பால் ஒளிர்ந்த காடு!

கொ.மா.கோ.இளங்கோ

செண்பகக் காட்டில் அன்று காலை மகிழ்ச்சி பரவிக் கிடந்தது. புல்வெளியில் சூரியன் தனது பொற்கதிர்களைத் தூவியிருந்தது. காற்றில் ஈரமான மண்ணின் வாசம் கலந்து இருந்தது. “டேய் துளி, ஓடி வா… நீ என்னைப் பிடிக்க முடியுமா பார்ப்போம்” என்று களி துள்ளிக் குதித்து ஓடியது.

“நில்லுடா... இப்போ பார்த்துடுவே” என்று துளியும் சிரித்தபடி பின்னால் பாய்ந்தது. இரண்டு ஆட்டுக்குட்டிகளும் எடுத்துவைத்த ஒவ்வோர் அடியிலும் புல்வெளி அசைந்து சிரித்தது. ‘மே... மே...’ என்கிற அவற்றின் மகிழ்ச்சிக் குரல் காட்டின் அமைதியை இனிமையாக நிரப்பியது.

விளையாட்டின் நடுவே, பாறை ஒன்றின் அருகில் அந்தச் சிறிய ஆட்டுக்குட்டி மட்டும் அமைதியாக நின்றிருந்தது. அதன் பெயர் ஒளி. மற்ற குட்டிகளைப்போல அது அதிகம் ஓடுவதில்லை. பாறையின் அருகே நின்று, வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஒவ்வொரு சத்தத்தையும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தது.

அருகில் புல் மேய்ந்து கொண்டிருந்த செவலை மாடு, ‘இது எப்போதும் இங்கேயே நிக்குதே… மற்றது எல்லாம் எவ்வளவு சந்தோஷமா விளையாடுது…’ என்று எண்ணிக்கொண்டது. நேரம் மெதுவாக நகர்ந்தது. வானில் லேசான மேகங்கள் திரளத் தொடங்கின. விளையாடிக் களைத்த களியும் துளியும் தங்கள் தாயைத் தேடத் தொடங்கின.

“அம்மா… எங்க இருக்கீங்க?” என்ற அவற்றின் குரல் காடு முழுவதும் பரவியது. ஆனால், பதில் இல்லை. சிறிது நேரம் முன்புதான் தாய் ஆடு பசுமையான புல்லைத் தேடி மலையடிவாரச் சரிவுக்குச் சென்றிருந்தது. ஒரு தவறான நகர்வு அதை ஆபத்தில் தள்ளும் என்பதை எதிர்பார்க்கவில்லை.

ஒரு நொடியில் சரிவில் சிக்கிக்கொண்டது. மேலே ஏற முயன்ற போதெல்லாம் மண் சரிந்துகொண்டே இருந்தது. ‘மூன்று குட்டிகளும் காட்டில் தனியாக தவிக்குமே, ஆபத்து வந்துவிடுமோ?’ என்று பயத்தில் கதறியது. மேலே ஏற முயன்றும் முடியாமல் போனது. அதன் உதவிக்குரல், பலத்த காற்றில் சிக்கி யாருடைய காதையும் எட்டவில்லை. களியும் துளியும் பதற்றம் அடைந்தன.

“அம்மா நம்மை விட்டுட்டு எங்கே போனாங்க?” என்று துளி அழ ஆரம்பித்தது. அந்த நேரத்தில் வானில் பறந்துகொண்டிருந்த ஒரு பருந்து அவற்றின் அழுகைச் சத்தத்தைக் கேட்டுக் கீழே வந்தது. “என்னாச்சு குட்டிகளா?” என்று கேட்டது. “எங்க அம்மாவைக் காணல…” என்றபடி களி அழுதது.

“பயப்படாதீங்க… நான் உங்க அம்மாவைத் தேடிப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் பருந்து வானில் மறைந்தது. காற்று குளிர்ந்தது. மழைக்கான அறிகுறி தெரிந்ததும் களி, துளி இரண்டும் பொறுமையை இழந்தன.

“நாமே தேடலாம்” என்று களியும் துளியும் வேகமாக ஓடின. மேட்டில் செவலை மாடும் ஒளியும் மட்டும் இருந்தன. ஒளி எதையோ கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அருகில் வந்த செவலை மாடு, “என்னடா… ரெண்டு பேரும் ஓடிப்போய்ட்டாங்க… நீ மட்டும் இங்கேயே நிக்கிறே?” என்று கேட்டது.

ஒளி பதில் சொல்லவில்லை. “உனக்குப் பாசமே இல்லையா? அம்மா காணாம போயிருக்காங்க… நீ என்ன பண்றே இங்கே?”அப்போதுதான் அந்த மாடு உணர்ந்தது. ஒளியின் கண்கள் திறந்திருந்தன. ஆனால், அது எதையும் பார்க்கவில்லை.

உண்மை புரிந்த கணம், மாடு அதிர்ச்சியில் உறைந்தது. அதுவரை அந்தக் குட்டியை அலட்சியமாக நினைத்ததை எண்ணிக் கலங்கியது. அந்தக் குட்டிக்குத் தானே தாயாக மாற முடிவு செய்தது.

ஒளிக்குப் பிறக்கும்போதே பார்க்கும் திறன் இல்லை. தனக்கு முன்னால் புல் இருக்கிறதா, பள்ளம் இருக்கிறதா, ஆபத்து வருமா என்று எல்லாம் அதுக்குத் தெரியாது. அதனால்தான் அது அம்மா விட்டுச் சென்ற இடத்திலேயே நின்றிருந்தது.

“பயப்படாதே ஒளி. உன் அம்மா வர்ற வரைக்கும் நான் இருக்கேன்” என்ற மாட்டின் ஆறுதல் வார்த்தைகள் ஒளிக்கு நிம்மதியைத் தந்தன. மெல்ல ஒளி அந்தக் குரலை நோக்கி நகர்ந்தது.

மாட்டின் உடலை உரசி, அதன் அருகில் படுத்துக்கொண்டது. மாடு மெதுவாக அதன் தலையை வருடியது. அந்தத் தொடுதலில் ஒரு பாதுகாப்பு இருந்தது. பருந்து தாய் ஆட்டைக் கண்டறிந்தது. மேலே வருவதற்கு வழிகாட்டியது.

தாய் ஆடு நிதானமாகக் காலடி வைத்து, சரிவிலிருந்து மேலே வந்தது. பருந்துக்கு நன்றி சொன்னது. களியும் துளியும் அம்மாவிடம் ஓடிவந்தன. மூன்றும் காட்டுக்குள் வந்தன.

ஒளியைப் பார்த்ததும் தாய் ஆட்டால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒளியை வருடிக் கொடுத்தபடி செவலை மாட்டிடம், “நண்பரே… என் குட்டியின் உலகம் இருட்டாக இருக்கலாம்… ஆனால் உங்க மனசுல இருந்த அன்பு அதுக்கு ஒரு வெளிச்சமா மாறிடுச்சு, நன்றி” என்றது.

அந்தக் கணத்தில் சூரியன் மலைக்குப் பின்னால் மெல்ல மறைந்தது. மாலை இருள் வந்தாலும் அன்பின் வெளிச்சத்தால் செண்பகக் காடே பிரகாசித்துக் கொண்டிருந்தது!

SCROLL FOR NEXT