முள்ளம்பன்றியைச் சுவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது சிறுத்தை. ஆனால், அதன் மீதுள்ள முள்ளைக் கண்டு அச்சப்பட்டது. ஆலோசனை கேட்க அது நரியைத் தேடிச் சென்றது. விஷயத்தைக் கேட்ட நரி, “சிறுத்தையே, நாம் இருவருமே செல்வோம். முள்ளம்பன்றியின் உடலிலுள்ள முள்களை நீக்குவது என் பொறுப்பு. அதை வேட்டையாடினால் எனக்கும் பங்கு தர வேண்டும்” என்றது.
மகிழ்ச்சியாக நரியுடன் புறப்பட்டது சிறுத்தை. இரண்டும் முள்ளம்பன்றி வசிக்கும் புதரின் அருகில் வந்தன. “நண்பனே, கொஞ்சம் வெளியே வா. ஒரு உதவி கேட்டு வந்திருக்கிறோம்” என்று முள்ளம்பன்றியை நரி அழைத்தது. முள்ளம்பன்றி புதருக்கு உள்ளிருந்து எட்டிப் பார்த்தது.
“என்னால் என்ன உதவி செய்ய முடியும்?” என்று கேட்டது முள்ளம்பன்றி. “இன்னும் சில நாள்களில் பனிக்காலம் தொடங்கிவிடும். கடுமையான குளிர் நிலவும். அதனால் நம் காட்டிலுள்ள விலங்குகளுக்குக் கம்பளி ஆடை நெய்து தர நினைக்கிறேன். செம்மறி ஆடுகள் அவற்றின் ரோமங்களைத் தருவதாகச் சொல்லிவிட்டன. நீ உன் உடலிலுள்ள முள்களைக் கொடுத்தால், நான் அவற்றைக் கொண்டு கம்பளி ஆடைகளை நெய்துவிடுவேன்” என்றது நரி.
“நீ மட்டுமே கம்பளி ஆடைகளை நெய்து விடுவீயா?” என்று கேட்டது முள்ளம்பன்றி. “இதோ நண்பன் சிறுத்தையும் வந்திருக்கிறது. நாங்கள் இன்னும் சில நண்பர்களோடு சேர்ந்து கம்பளி ஆடைகளை நெய்வோம்” என்று நரி சொல்ல, ஒரு மரத்தின் பின்னால் மறைந்திருந்த சிறுத்தையும் வெளியே வந்தது.
“நரி சொல்வது உண்மைதான். நாங்கள் பலர் சேர்ந்து கம்பளி ஆடைகளை நெய்யப் போகிறோம்” என்றது சிறுத்தை. “நீங்கள் செய்யப் போகும் இந்தப் பொதுநலச் செயலுக்காக நிச்சயம் நான் என் முள்களைத் தருகிறேன். நீங்கள் இருவரும் நாளை காலை வாருங்கள்” என்றது முள்ளம்பன்றி.
நரிக்கும் சிறுத்தைக்கும் சற்று ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல், “காலை வருகிறோம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தன. மறுநாள் காலை. “நண்பனே, நாங்கள் வந்துவிட்டோம். முள்களைத் தருகிறாயா?” என்று கேட்டது நரி.
“இதோ தயாராக எடுத்து வைத்திருக்கிறேன்” என்று குரல் கொடுத்தது முள்ளம்பன்றி, அடுத்த நொடியே முள்கள் வெளியே வந்து விழுந்தன. ‘ஆஹா! முள்ளம்பன்றியின் உடலில் முள்களே இருக்காது. அது வெளியே வந்தவுடன் பிடித்துவிட வேண்டியதுதான்’ என்று நரியும் சிறுத்தையும் தயாராக நின்றிருந்தன. ஆனால், எட்டிப் பார்த்த முள்ளம்பன்றியின் உடலில் முன்பு போலவே முள்கள் இருந்தன.
சிறுத்தையும் நரியும் குழப்பம் அடைந்தன. “என் உடலிலிருந்து உதிரும் முள்களைச் சேமித்து வைத்திருந்தேன். கம்பளி ஆடை நெய்வதற்காக நீங்கள் கேட்டதால் அனைத்தையும் உங்களுக்குக் கொடுத்துவிட்டேன்.
நேற்று சிங்கராஜாவைப் பார்த்து, நீங்கள் இருவரும் நம் காட்டு விலங்குகளுக்காகக் கம்பளி ஆடை நெய்ய இருப்பதைச் சொன்னேன். உங்களின் நல்ல செயலுக்காக அரசர் பரிசு தரப்போவதாகச் சொன்னார்” என்றது முள்ளம்பன்றி.‘கம்பளி ஆடை நெய்து கொடுக்காவிட்டால் சிங்கராஜா நம்மைத் தண்டித்து விடுவாரே’ என்று நினைத்த நரியும் சிறுத்தையும் அந்தக் காட்டைவிட்டே ஓடிவிட்டன.