மாயா பஜார்

ஒழிக்கப்பட்ட முதல் ‘மனிதத் தொற்றுநோய்’ - தடுப்பூசி | அறிவியல் திருப்புமுனைகள் 16

நன்மாறன் திருநாவுக்கரசு

உலகை மாற்றிய மிக முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று, தடுப்பூசி. இந்தத் தடுப்பூசியின் கண்டுபிடிப்பு, நோய்ப் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே அதைத் தடுக்கும் அறிவியல் முறையை மனித சமூகத்துக்கு அறிமுகப்படுத்தியது.

18ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவை அச்சுறுத்திய நோய் பெரியம்மை. பெரியம்மை தாக்கியதால் பலர் இறந்தனர். அப்போது பெரியம்மையை நேரடியாகக் குணப்படுத்தும் திட்டவட்டமான சிகிச்சை கிடையாது. ஆனால், சில அறிகுறிகளை மட்டும் மருத்துவர்கள் கவனித்து வைத்திருந்தனர்.

பெரியம்மையால் பாதிக்கப்பட்டு, பிழைத்த மக்களுக்கு அடுத்த முறை தொற்றுப் பரவும்போது பாதிப்பு ஏற்படுவதில்லை என அறிந்திருந்தனர். ஆனால், இது ஏன் நிகழ்கிறது என்பதற்கான விளக்கம் அவர்களிடம் இல்லை. நம் உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் இருக்கிறது என்கிற புரிதல் எல்லாம் இல்லாத காலக்கட்டம் அது.

இந்த நிலையில் ஐரோப்பாவில் பெரியம்மைத் தடுப்புமுறையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மேரி வொர்ட்லி மாண்டேகு. மேரி, பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரின் மனைவி.

1716ஆம் ஆண்டு ஆஸ்திரிய - துருக்கியப் போர் குறித்த அமைதிப் பேச்சுவார்த்தையின் தூதுவராக அவரின் கணவர் நியமிக்கப்பட்டபோது மேரியும் அவருடன் பல்வேறு நாடுகளுக்குச் சென்றார்.

அதில் இறுதியாக அவர்கள் சென்ற இடம் ஆட்டோமான் பேரரசின் தலைநகராக இருந்த கான்ஸ்டன்டிநோபிள். ஆட்டோமான் பேரரசில் தங்கியிருந்த மேரி அப்பகுதியில் பின்பற்றி வந்த சமூகக் கலாச்சார விஷயங்களை ஆராய்ந்து பதிவு செய்தார்.

அப்போது அவர் அங்கே பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரிய பெரியம்மைத் தடுப்பு முறையையும் கவனித்தார். அவர்கள் பின்பின்பற்றிய தடுப்பு முறைக்கு ‘அம்மை குத்துதல்’ (Variolation) எனப் பெயர்.

இந்த முறையின்படி பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள புண்ணில் இருந்து நோய்ப்பொருளை எடுத்து, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவரது உடலில் புகுத்துவார்கள். இதன் மூலம் சிறிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டு, அவரது உடல் நோயெதிர்ப்பை உண்டாக்கும்.

இதன்பின் இயற்கையாகப் பெரியம்மைத் தொற்று ஏற்படும்போது அந்த நபரின் உடல் பாதிக்கப்படாது. கான்ஸ்டன்டிநோபிளில் மட்டுமல்ல, ஆசிய, ஆப்ரிக்கப் பகுதிகளிலும் பல்வேறு வடிவங்களில் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை இது.

இந்தத் தடுப்புமுறை மேரியை ஆச்சரியப்படுத்தியது. காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு மேரியும் அவரின் சகோதரரும் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேரியின் சகோதரர் இறந்துவிட, மேரி உயிர்பிழைத்தாலும் அந்த நோய் உண்டாக்கிய தழும்பு உடல் முழுவதும் இருந்தது.

இதனால் இந்தத் தடுப்பு முறையை எப்படியாவது பிரிட்டனுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தார் மேரி. கான்ஸ்டன்டிநோபிளிலேயே தனது 5 வயது மகனுக்கு அம்மை குத்திப் பரிசோதித்துப் பார்த்தார். அவர் எதிர்பார்த்தது போலவே பலன் கிட்டியது.

இங்கிலாந்து திரும்பிய மேரி, தன் மகளுக்கும் அம்மை குத்தி அந்தத் தடுப்பு முறையை இங்கிலாந்து முழுக்கப் பிரச்சாரம் செய்தார். அப்போது வேல்ஸின் இளவரசியாக இருந்த கரோலினின் இரண்டு மகள்களுக்கும் அம்மை குத்தப்பட்டது.

இதன்மூலம் அரசியல் வட்டாரத்தில் அந்த முறைக்கு வரவேற்பு கிடைத்தது. இதன்பின் இங்கிலாந்தில் இருந்த ஒரு சிறைச்சாலையில் சில சிறைவாசிகளைத் தேர்ந்தெடுத்து அம்மை குத்தினர்.

அவர்கள் பெரியம்மைத் தாக்குதல் ஏற்பட்டபோது எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கவே, பிரிட்டன் முழுவதும் வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், அறிவியல் அமைப்புகள், முறையான பரிசோதனைகள் இல்லாததால் பாரம்பரிய மருத்துவத்தை ஆபத்து என எதிர்த்தனர்.

இந்த நேரத்தில்தான் எட்வர்டு ஜென்னர் எனும் மருத்துவர் பெரியம்மைக்கு நோய்த் தடுப்புமுறையை உருவாக்க முடியுமா என ஆராய்ந்துவந்தார். நோய்ப்பொருளை உடலில் செலுத்துவதன் மூலம் எதிர்கால நோய்ப் பாதிப்பைத் தடுக்க முடியும் எனும்போது, ஆபத்தான நோய்ப்பொருளை உடலில் செலுத்தாமல் குறைவான ஆபத்துள்ள நோய்ப்பொருளை உடலில் செலுத்த முடியுமா எனச் சிந்தித்தார்.

இதற்கான விடை அவருக்குப் பால்பண்ணையில் கிடைத்தது. ஜென்னர் அப்போது குளோஸ்டர்ஷயர் பகுதியில் பணியாற்றி வந்தார். அந்தப் பகுதி பால் உற்பத்திக்குப் பெயர்பெற்றது. அப்பகுதியின் பொருளாதாரமே பாலாடைக்கட்டி செய்து விற்பனை செய்வதைச் சார்ந்துதான் இருந்தது.

அங்கே பசுமாடுகளுக்கு அடிக்கடி பசு அம்மை (Cowpox) நோய் தாக்கும். சில நேரம் அது மனிதர்களுக்கும் பரவும். அவ்வாறு பசு அம்மையால்

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பெரியம்மைத் தாக்குதலின்போது பாதிக்கப் படாமல் இருந்ததை ஜென்னர் கவனித்தார்.

பசு அம்மை மனிதர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல், பெரியம்மை யிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது என்றால், பெரியம்மையை ஏற்படுத்தும் பொருளையே உடலுக்குள் செலுத்துவதற்குப் பதிலாக, அதனுடன் தொடர்புடைய குறைவான ஆபத்துள்ள நோய்ப்பொருளை ஏன் பயன்படுத்தக் கூடாது என்று ஜென்னர் சிந்தித்தார். இப்படித்தான் தடுப்பூசிக்கான எண்ணம் பிறந்தது.

1796இல் பசு அம்மை பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவரிடம் இருந்து நோய்ப்பொருளைச் சேகரித்த அவர், 8 வயது சிறுவனின் உடலில் செலுத்தினார். அந்தச் சிறுவன் சிறிய பாதிப்புக்குப் பின் குணமடைந்தான். பின் அவனது உடலில் பெரியம்மை நோய்ப்பொருளைச் செலுத்தியபோது அவனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இதன்மூலம் தன் சோதனையை ஜென்னர் உறுதிசெய்தார். மேலும் சில சோதனைகள், ஆதாரங்களுக்குப் பிறகு 1798ஆம் ஆண்டு அவரது கண்டுபிடிப்பு வெளியானது. இதன்பின் தடுப்பூசி பற்றிய அறிவியல் ஐரோப்பா முழுவதும் பரவத் தொடங்கியது.

ஜென்னரின் ஆய்வுக்கட்டுரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் கொண்டுசெல்லப்பட்டது. அரசாங்க அதிகாரிகளுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிறகு உலகின் பல நாடுகளிலும் முகாமிட்டிருக்கும் ராணுவத்தினருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டது. பின் பிரிட்டனின் காலனியாக இருக்கும் நாடுகளுக்கும் தடுப்பூசி கொண்டு செல்லப்பட்டது.

தடுப்பூசியின் கண்டுபிடிப்பு பெரிய அரசியல் மாற்றத்தையும் கொண்டு வந்தது. அதற்கு முன் மருத்துவமும் நோய்த்தாக்குதலும் தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயமாகவே பார்க்கப்பட்டன.

தடுப்பூசியின் வருகைக்குப் பின் நோய்த் தடுப்பு தனிநபரின் மருத்துவத் தேர்வாக மட்டும் இல்லாமல், அரசின் பொது சுகாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக மாறத் தொடங்கியது. சில நாடுகளில் தடுப்பூசியை ஊக்குவிக்கும் சட்டங்களும் பின்னர் கட்டாயப்படுத்தும் சட்டங்களும் உருவாகின.

ஒருகாலத்தில் மனிதர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்ற பெரியம்மை, தடுப்பூசியின் உதவியுடன் உலகிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்ட முதல் ‘மனிதத் தொற்றுநோயாக’ மாறியது. இன்று தடுப்பூசி தொழில்நுட்பம் மேலும் வளர்ந்து, பல கொடிய நோய்களிலிருந்து மனிதர்களைக் காக்கும் முக்கியமான கேடயமாக விளங்கிவருகிறது.

(திருப்புமுனையைக் காண்போம்)

- tnmaran25@gmail.com

SCROLL FOR NEXT