மாயா பஜார்

வலியிலிருந்து விடுதலை அளித்த அனஸ்தீசியா! - மயக்க மருந்து | அறிவியல் திருப்புமுனைகள் 27

நன்மாறன் திருநாவுக்கரசு

வரலாற்றில் மனித ஆரோக்கியத்தை உறுதி செய்ததில் அறுவைசிகிச்சைக்குப் பெரும் பங்கு உண்டு. ஆனால், அறுவைசிகிச்சை என்பது எளிதானது அல்ல. உடலின் பாகங்களை வெட்டி எடுக்கும்போது வலி கடுமையாக இருக்கும்.

நோயாளிகளுக்கு எந்தவித வேதனையும் தராமல் சிகிச்சையை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்றால் மயக்க மருந்து (அனஸ்தீசியா) தேவை. நமது உடலில் வலி என்பது காயம்பட்ட பகுதியில் மட்டும் நிகழ்வதில்லை.

உடலில் பாதிப்பு ஏற்படும்போது அது குறித்த தகவல் மின் சமிக்ஞையாக நரம்பு மண்டலத்தின் வாயிலாக மூளைக்குச் செல்லும். மூளை அதைப் புரிந்துகொண்டு வலியின் உணர்வைத் தரும்.

மூளைக்கும் நரம்பு மண்டலத்துக்கும் இடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்தைத் தற்காலிகமாக மயக்க மருந்து, நிறுத்துகிறது. அதனாலேயே வலியை உணர முடிவதில்லை.

அறுவைசிகிச்சையின் தீவிரத்தைப் பொறுத்து நம்மை முழுவதும் மயக்கத்தில் ஆழ்த்தும் மருந்து வேண்டுமா அல்லது உடலின் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் மரத்துப்போக வைக்கும் மருந்து வேண்டுமா என்பதை மருத்துவர்கள் முடிவுசெய்வார்கள்.

பண்டைய காலத்தில் ஓபியம் உள்ளிட்ட சில போதை வஸ்துகள் வலியைப் பொறுத்துக்கொள்ளத் தரப்பட்டன. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் சில மூலிகைகள் பயன்பாட்டில் இருந்தன.

ஐரோப்பாவில் ஐஸ் கட்டிகளை வைத்து நரம்புகளை மரத்துப்போக வைத்து சிகிச்சை செய்யும் முறை இருந்தது. தடியால் தலையில் அடித்து நோயாளிகளை மயக்கமடைய வைத்த விநோத முறைகளும்கூட இருந்துள்ளன.

19ஆம் நூற்றாண்டின் ஆரம்பம்வரை அறுவை சிகிச்சை என்றால் சுயநினைவில் இருக்கும்போதே செய்ய வேண்டும். வலி கடுமையாக இருக்கும். நோயாளிகள் வலியால் துடிக்கும்போது சிகிச்சை மேற்கொள்வது கடினம்.

நீண்ட நேரம் நோயாளிகளை வேதனைப்படுத்த முடியாது என்பதால் மருத்துவர்களும் வேகமாகச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சில ஆழமான, நுண்ணிய சிகிச்சைகளை மேற்கொள்வது முடியாத காரியம்.

அதைவிட மோசம், அறுவைசிகிச்சையைப் பார்க்கும் போதே நோயாளிகளுக்கு அச்சத்தில் உயிர்போய்விடும். இந்த நிலையைத்தான் மயக்க மருந்து மாற்றி அமைத்தது.

1772இல் ஜோசப் பிரீஸ்ட்லி நைட்ரஸ் ஆக்சைடைக் கண்டறிந்தார். நைட்ரஸ் ஆக்சைடை முகர்ந்தால் நமக்குள் கிச்சுகிச்சு மூட்டுவதுபோல் சிரிப்பு வரும். இதுவே சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட முதல் வாயு.

இங்கிலாந்தில் வாயுக்களை மருத்துவத்துக்குப் பயன்படுத்த முடியுமா எனச் சில அறிவியலாளர்கள் சோதித்துவந்தனர். அதில் ஒருவராக இருந்த ஹம்ப்ரி டேவி, நைட்ரஸ் ஆக்சைடை நுகரும்போது வலியில் இருந்து நிவாரணம் கிடைப்பதைக் கண்டறிந்தார்.

மேலும் அதனை அறுவைசிகிச்சையின்போது பயன்படுத்தலாம் என்றும் பரிந்துரைத்தார். ஆனாலும் அந்த முறையை உடனே மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் நைட்ரஸ் ஆக்சைடு கேளிக்கைகளுக்கே பயன்பட்டது.

1844ஆம் ஆண்டு ஒரு கேளிக்கை நிகழ்வுக்குச் சென்ற ஹோரஸ் வெல்ஸ் என்கிற மருத்துவர், நைட்ரஸ் ஆக்சைடை நுகர்ந்த ஒருவர் காலில் பலத்த காயம்பட்டபோதும்கூட வலியை உணராமல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதைக் கவனித்தார். இதையடுத்து நைட்ரஸ் ஆக்சைடை மருத்துவத்துக்குப் பயன்படுத்த முடியுமா என்கிற எண்ணம் அவருக்கு வந்தது.

பல் மருத்துவத்தில் அதனைப் பயன்படுத்தினார். 1846இல் வில்லியம் மார்ட்டன் பாஸ்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்கள் முன்னிலையில் நோயாளி ஒருவருக்கு டை எத்தில் ஈதரை மயக்க மருந்தாகக் கொடுத்தார். பிறகு ஜான் காலின்ஸ் வாரன் என்கிற மருத்துவரின் உதவியுடன் அவரது உடலில் இருந்த கொப்புளத்தை வெட்டி எடுத்தார்.

அப்போது அந்த நோயாளி வலியை உணரவில்லை. இந்தச் சம்பவம்தான் மருத்துவர்கள் மத்தியில் மயக்க மருந்தின் பயன்பாட்டினை ஊக்குவித்தது.

இதில் இன்னோர் ஆச்சரியமான விஷயம், குழந்தை பிறப்பின்போது ஏற்படும் வலியையும் மயக்க மருந்து மட்டுப்படுத்தியது. ஆனால், அப்போதைய ஐரோப்பிய திருச்சபைகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

குழந்தை பிறப்பின்போது ஏற்படும் வலி புனிதமானது என அவர்கள் வாதிட்டனர். சில மருத்துவர்களேகூட அந்த வலியை நிறுத்தும்போது குழந்தை பெற்றுக்கொள்வதில் பாதிப்பு ஏற்படலாம் என்றனர்.

ஆனால், ஜேம்ஸ் யங் சிம்ப்ஸன் குழந்தை பிறப்பின்போது கட்டாயம் க்ளோரோஃபார்ம் எனும் மயக்க மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வாதாடினார்.

மத எதிர்ப்பையும் மருத்துவர்கள் எதிர்ப்பையும் தாண்டி மயக்க மருந்தைப் பயன்படுத்தினார். இதன்பின் 1853இல் இங்கிலாந்து அரசியான விக்டோரியா குழந்தை பெற்றெடுத்தபோது அவருக்கு க்ளோரோஃபார்ம் கொடுக்கப்பட்டது. அரசியே மயக்க மருந்தைப் பயன்படுத்துகிறார் என்கிற செய்தி, பலருக்கும் அதன் மீதிருந்த தயக்கத்தை நீக்கியது.

ஆனால், மயக்க மருந்தின் அளவை சரியாகப் பயன் படுத்தாவிட்டால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதால், இதற்கென்று சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் உலகம் முழுவதும் இன்றைக்கு சிகிச்சைகள் நடைபெற்று, உயிர்கள் காக்கப்பட்டு வருகின்றன.

(திருப்புமுனையைக் காண்போம்)

- tnmaran25@gmail.com

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT