

இந்தப் பூமியில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின?
வரலாற்றில் இருந்த மிக முக்கியமான கேள்வி இது. இதற்கு முதன்மையாக இருந்த பதில், உயிர்கள் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவை. இதில் மனிதர்கள் மற்ற உயிரினங்களைவிட உயர்ந்தவர்கள் என்பதுதான்.
ஆனால், உயிரினங்களைக் கடவுள் படைக்கவில்லை. அவை ஏற்கெனவே இருந்த உயிர்களில் இருந்து பரிணமித்து வந்துள்ளன என்கிற பார்வையை வைத்தவர்களில் முக்கியமானவர் பிரான்ஸைச் சேர்ந்த ஜீன் பாப்டிஸ்ட் லமார்க்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்றாற்போல் உயிரினங்கள் தங்கள் பண்புகளைப் பெற்றுள்ளன என்றார். எடுத்துக்காட்டாக, ஒட்டகச்சிவிங்கிகளுக்குக் கழுத்து ஏன் பெரிதாக இருக்கிறது என்கிற கேள்விக்கு, கடவுள் ஒட்டகச்சிவிங்கிகளின் கழுத்தை நீளமாகப் படைத்திருக்கிறார் என்பது கடவுள் நம்பிக்கையாளர்களின் விளக்கம்.
தொடக்கத்தில் ஒட்டகச்சிவிங்கிகளின் கழுத்து குட்டையாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஒருகட்டத்தில் மரங்கள் உயரமாக வளர ஆரம்பிக்க, அவை கழுத்தை நீட்டிச் சாப்பிட முயற்சி செய்ததற்கு ஏற்ப அடுத்தடுத்த தலைமுறைகளில் நீண்டதாகப் பரிணமித்து இருக்கிறது என்றார் லமார்க்.
இந்தப் பதில் ‘பரிணாமக் கொள்கை’ என அறியப் பட்டது. அதாவது உயிர்களின் ஒவ்வொரு பண்பும் சூழலுக்கு ஏற்பப் பரிணமித்து வந்துள்ளது. அப்படித்தான் ஒவ்வோர் உயிரினமும் உருவாகி இருக்கிறது என்கிற விளக்கம் இது. லமார்க் போன்றோர் கடவுள் மறுப்பாளர்களாகப் பார்க்கப்பட்டு, தண்டிக்கப் பட்டனர்.
19ஆம் நூற்றாண்டில் உலகம் பெரும் மாறுதலுக்கு உட்பட்டிருந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே உருவான நாடு பிடிக்கும் போட்டியில் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் ஒவ்வொரு நாடாகச் சென்று, அங்கிருக்கும் நில அமைப்பு, தட்பவெப்ப நிலை, தாவரங்கள், விலங்குகள், கடற்கரை எல்லாவற்றையும் பதிவுசெய்து வரையறுக்கும் வேலைகளைச் செய்தன.
இதற்காகப் பல கப்பல்கள் உலகம் முழுவதும் பயணித்தன. அவற்றில் அறிவியலாளர்களும் சென்றனர். அதுபோன்ற ஒரு கப்பலான ஹெச்.எம்.எஸ் பீகிளில் சென்றவர்தான் சார்லஸ் டார்வின். டார்வின் ஐந்து ஆண்டுகள் பயணித்து தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று ஏராளமான விலங்குகளையும் தாவரங்களையும் சேகரித்து வந்தார்.
பிறகு அவற்றை லண்டனில் வைத்துச் சோதித்தார். இதில் அவருக்கு உயிரினங்கள் ‘இயற்கைத் தேர்வு’ எனும் விதியின் அடிப்படையில் பரிணமித்து வந்துள்ளன எனத் தெரியவந்தது.
அது என்ன இயற்கைத் தேர்வு?
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், உயிரினங்களின் உடலில் ஏராளமான பண்புகள் உள்ளன. அவற்றில் எந்தப் பண்புகள் உயிர்பிழைக்க உதவுகின்றனவோ அவற்றை மட்டும் இயற்கை வைத்துக்கொள்கிறது.
மற்றவற்றை அழித்துவிடுகிறது. இதனால் அந்தப் பண்புகள் மட்டும் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன. இவ்வாறு கடத்தப்பட்ட பண்புகள் எல்லாம் இணைந்து புதிய உயிர்களாகப் பரிணமிக்கின்றன என்றார் டார்வின். இதுதான் இயற்கைத் தேர்வு என்றார்.
எடுத்துக்காட்டாக, ஒரு நாய்க்கு இரண்டு குட்டிகள் பிறக்கின்றன. அதில் ஒரு குட்டிக்கு நிறைய முடிகள் இருக்கின்றன. இன்னொரு குட்டிக்குக் குறைவான முடிகள் இருக்கின்றன.
அந்த நாய் குளிர்ப் பிரதேசத்தில் வாழ்கிறது என்றால், அதிக முடிகள் இருக்கும் குட்டியே பிழைக்கும். குறைந்த முடி உள்ள குட்டி குளிர் தாங்காமல் இறந்துவிடும். இவ்வாறு இயற்கையே பண்புகளைத் தேர்வு செய்கிறது.
இதனடிப்படையில் ஒவ்வோர் உயிரினமும் உதவாத பண்புகள் எல்லாம் நீங்க, உதவும் பண்புகள் மட்டும் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டு, அவை எல்லாம் அந்த உயிரினத்தின் உடலிலும் குணத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி, புதிய உயிரினமாக மாற்றிவிடுகிறது என்றார் டார்வின்.
இவ்வாறு இயற்கைத் தேர்வு, உயிரினங்களிடையே நடைபெறும் போட்டியின் அடிப்படையில் நடைபெறுகிறது என்றார்.
அதாவது இயற்கையில் உணவுப் பற்றாக்குறை, இடப்பற்றாக்குறை போன்ற சவால்கள் இருக்கும்போது ஒவ்வோர் உயிரினமும் அவற்றுக்காகப் போட்டியிடுகின்றன.
இந்தப் போட்டியில்தான் எந்தெந்தப் பண்புகள் உதவக்கூடியவை, எவை உதவாது என்றெல்லாம் தெரியவருகிறது என்றார்.
இந்த வகையில் பார்க்கும்போது முதன்முதலில் தோன்றிய சிறிய உயிரில் இருந்து எல்லா உயிரினங்களும் இயற்கைத் தேர்வின் அடிப்படையில் பரிணமித்துள்ளன. அவ்வாறு பரிணமித்த உயிரினத்தில் ஒன்றுதான் மனிதர்கள். இதனால் மனிதருக்கு என்று இயற்கையில் எந்தச் சிறப்பும் இல்லை என்றார்.
இதனாலேயே ஆரம்ப நாள்களில் டார்வினின் கோட்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இருந்தாலும், தொல்லுயிர்ச் சான்றுகளும் உயிர்கள் குறித்த ஆய்வுகளும் டார்வின் சொன்னது உண்மை என உறுதிப்படுத்தின.
பின்னாளில் டி.என்.ஏ ஆய்வு போன்ற தொழில்நுட்பங்கள் அவற்றை உறுதி செய்தன. அதேபோல் டார்வின் வாழ்ந்த காலத்திலேயே ஆல்ஃபர்ட் ரஸல் வாலஸ் என்பவரும் பல நாடுகளுக்குப் பயணம் செய்து, டார்வின் கண்டறிந்த அதே உண்மையைக் கண்டறிந்தார்.
குறிப்பாக இயற்கைத் தேர்வு நடைபெறச் சுற்றுச்சூழல் முக்கியமான காரணியாக இருக்கிறது என்றார். இன்றைக்கு இந்தப் பரிணாமக் கொள்கை, கோட்பாட்டு அளவைக் கடந்து மருத்துவம், உணவு உற்பத்தி, வன உயிர்ப் பாதுகாப்பு உள்ளிட்ட அன்றாட விஷயங்களிலும் பயன்பட்டு வருகிறது.
(திருப்புமுனையைக் காண்போம்)
- tnmaran25@gmail.com