கரோனாவுக்குப் பிறகு ‘ஃபிட்னெஸ்’ பக்கம் பலருடைய கவனம் திரும்பிவிட்டது. அண்மைக் காலமாக ‘ஜிம்’, ‘புரோட்டீன்’, ‘ஊட்டச்சத்து’ போன்ற விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன. உடற்பயிற்சிக்குத் தேவையான எந்தக் கருவியும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் ‘காலிஸ்தெனிக்ஸ்’ (Calisthenics) பயிற்சி தொடர்பாகச் சுவாரசியமாகப் பதிவுசெய்கிறார் தமிழ் யூடியூபரான கிஷோர்.
அதென்ன ‘காலிஸ்தெனிக்ஸ்’?
பொதுவாக ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்ய ‘டம்பெல்’ போன்ற ’வெயிட்ஸ்’ தேவைப்படும். ஆனால், ‘காலிஸ்தெனிக்’ஸைப் பொறுத்தவரை ஒருவரின் உடல்தான் அந்த ‘வெயிட்’. பிரபலமான ‘புஷ் அப்ஸ்’, ‘புல் அப்ஸ்’, ‘ஸ்குவாட்’ போன்ற பயிற்சிகள் எல்லாம் ‘காலிஸ்தெனிக்ஸ்’ ரகம்தான்.
சென்னையைச் சேர்ந்த கிஷோர், 2024 முதல் ‘காலிஸ்தெனிக்ஸ்’, ‘ஃபிட்னெஸ்’ தொடர்பான காணொளிகளைச் சமூக வலைத்தளங்களில் பதிவுசெய்து வருகிறார். உடற்பயிற்சி தொடர்பாக 30 நாள்கள், 100 நாள்கள் சவால்களை ஏற்று, அதை விளக்கிக் காணொளிகளாகப் பதிவிடுகிறார்.
தன்னுடைய கருத்துகளைத் தமிழில் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் கில்லியான இவரது ‘கண்டெண்ட்’டைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை பல லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ஏன் ‘காலிஸ்தெனிக்ஸ்’ என்கிற கேள்வியை கிஷோரிடம் முன்வைத்தோம். “என்னுடைய 23ஆவது வயதுவரை கிரிக்கெட், கால்பந்து தவிர வேற எந்தவித விளையாட்டிலும் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொண்டதில்லை. விளையாட்டு என்றில்லை, எந்தவொரு விஷயத்திலும் முழு ஈடுபாடோடு இல்லாமல் இருந்தபோது, எனக்கான விஷயமாக ‘செட்’ ஆனதுதான் ‘காலிஸ்தெனிக்ஸ்’.
நண்பர் ஒருவரின் அறிமுகத்தால் இத்துறையைப் பற்றித் தெரியவர ‘காலிஸ்தெனிக்ஸ்’ உடற்பயிற்சியில் முழுக் கவனம் செலுத்தத் தொடங்கினேன். உடலைச் சரியாகக் கவனித்துக்கொள்ளத் தொடங்கியபோதுதான் புரிந்தது, உடல் குணமானால் மனமும் குணமாகும் என்று.
கட்டுக்கோப்பான உடற்பயிற்சி, சரியான உணவு என ஒரு பழக்கத்துக்குள் வரும்போது மனதும் லேசாகிறது. இப்பயிற்சி சென்னையைவிட பெங்களூருவில் ‘அட்வான்ஸ்’டாக இருந்ததைத் தெரிந்துகொண்டு பெங்களூருவுக்கு ஷிஃப்ட் ஆகி, இப்போது பயிற்சி எடுத்துவருகிறேன். அதோடு என்னுடைய போட்டோகிராபி வேலைகளையும் தொடர்கிறேன்” என்கிறார் கிஷோர்.
பிரபல சொல்லாடல்:
இதுவரை 600க்கும் அதிகமான காணொளிகளைத் தனது ‘கிஸ்தெனிக்ஸ்’ யூடியூப் அலைவரிசையில் பதிவேற்றியுள்ளார் கிஷோர். ’புரோட்டீன்’ என்பதற்கு ‘புரதம்’ ‘ஃபிஷ் மருந்து’ என்பதற்கு ‘மீன் மாத்திரை’ என வழக்கமாகத் தொடங்கி, ‘செடி நண்பர்கள்’, ‘மீன் நண்பர்கள்’ எனப் பெரும்பாலும் தமிழ் மொழியில் ‘கண்டெண்ட்’ பதிவிடும் அவர், ஒவ்வொரு காணொளியின் முடிவிலும் ‘கடினமா இருங்க’ என்று, அதாவது உடல் உழைப்பு அவசியம் என்பதை அழுத்திச் சொல்கிறார்.
இவர் சொல்லும் இந்தக் ‘கடினமா இருங்க’ என்கிற வாசகம் தமிழ் யூடியூப் வட்டத்தில் பிரபலம் ஆகிவிட்டது! ‘கண்டெண்ட்’டுக்கான ஐடியா, படப்பிடிப்பு, எடிட்டிங் என அனைத்து வேலைகளுக்கும் “ஒருவர்தான் பொறுப்பு, அது நான்தான்” என்கிறார் கிஷோர். ‘ஃபிட்னெஸ்’ மீது கொண்ட ஆர்வத்தால் பலரும் பல விஷயங்களைப் புதிதாகச் செய்ய முயற்சி செய்கின்றனர்.
ஆனால், எந்தவொரு பயிற்சியையும் துறை நிபுணரின் வழிகாட்டுதலோடு முறையாகத் தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும் எனவும் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் இருக்கவே இருக்காதீர்கள் என ‘அட்வைஸ்’ சொல்லவும் தவறுவதில்லை. அதனால், நீங்களும் ‘கடினமா இருங்க!’
கிஸ்தெனிக்ஸ் யூடியூப் அலைவரிசை: youtube.com/@kisthenics