இளமை புதுமை

வந்தாச்சு சுருட்டை முடிக்கும் ஒரு ‘ஹெல்ப்லைன்’

ராகா

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறிவருவதே ஃபேஷன். ஒரு காலத்தில் முடியை நேராக்குவதுதான் (Straightening) டிரெண்ட். ஆனால், அந்தப் பார்வை தற்போது மெல்ல மாறி வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் சுருட்டை முடிதான் (Curly Hair) லேட்டஸ்ட் டிரெண்ட்!

சுருட்டைச் சமூகம் ‘நூடுல்ஸ் மண்டை’, ‘ஸ்பிரிங் முடி’ என்றெல்லாம் கேலிக்கு உள்ளான சுருட்டைச் சமூகம் இப்போது விழித்துக்கொண்டுள்ளது. தங்களின் இயல்பான முடியைக் குறையாக நினைக்காமல், அதை ரசிக்கவும் சரியாகப் பராமரிக்கவும் தொடங்கியுள்ளனர்.

இந்த அக்கறை பல படி மேலே சென்று, சுருட்டை முடி வைத்திருப்போருக்கு எனச் சங்கம் அமைப்பதில் தொடங்கி, தற்போது பிரத்யேக ‘ஹெல்ப்லைன்’ எண்ணை அறிமுகப்படுத்துவது வரை வந்து நிற்கிறது.

இளம் தொழில்முனைவோரான இஷா மஹாபல், ருத்விகா சரேகோவான்கர் ஆகியோர் இணைந்து 2024இல் ‘தி கர்ல் கோ’ (The Curl Co) எனும் சுருட்டை முடியைப் பராமரிக்கும் பிரத்யேக அழகுச் சாதனப் பொருளை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினர்.

சுருட்டை முடி கொண்டவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதமாக ‘கர்ல் கல்சர்’ (Curl Culture) எனும் நிகழ்ச்சியையும் முன்னெடுத்துவருகின்றனர். சுருட்டை முடி கொண்டவர்கள் ஓரிடத்தில் கூடி, தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதுடன், ஒருவருக்கு இன்னொருவர் ஆதரவளித்துக்

கொள்வதுதான் இந்தச் சந்திப்புகளின் முக்கிய நோக்கமாம்! சென்னையைத் தொடர்ந்து கொச்சி, பெங்களூரு, மும்பை, டெல்லி என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இது புதுசு: ஒவ்வொருவரின் கூந்தலும் ஒவ்வொரு ரகம். இணையத்தில் கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற காணொளிகளைப் பார்த்து, தகவல்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்குப் பதிலாக, தங்கள் கூந்தல் தொடர்பான சந்தேகங்களை நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் புதிய வசதியை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, ஒரு குறிப்பிட்ட ‘ஹெல்ப்லைன்’ எண்ணுக்குத் தொடர்புகொண்டு, எந்தக் கட்டணமும் இன்றி சுருட்டை முடி தொடர்பான சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெறலாம். இதையெல்லாம் பார்க்கும் போது, ‘ஜப்பான்காரன் என்னென்னமோ கண்டுபிடிக்கிறான், ஆனா நாம...’ என்று வியக்கத் தோன்றுகிறதல்லவா?

‘கர்ல் ஹெல்ப்பைன்’ இன்ஸ்டகிராம் பக்கம்: instagram.com/thecurlhelpline/

பவுல் கட் தெரியுமா? -

சுருட்டை முடி ஒரு பக்கம் இருக்கட்டும். வித்தியாசமான சிகையலங்காரம் எப்போதுமே பேசுபொருளாக இருந்திருக்கிறது. ‘பவுல் கட்’ என்கிற கிண்ண வெட்டு சிகையலங்காரம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அதாவது, தலையில் ஒரு கிண்ணத்தை கவிழ்த்து எஞ்சிய பகுதியில் நீண்டிருக்கும் முடியை வெட்டித் தள்ளுவதுதான், கிண்ண வெட்டுச் சிகையங்காரம். நேரான முடி அமைப்புக் கொண்டவர்களிடையே இந்தச் சிகை அலங்காரம் 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும் அமெரிக்காவில் பிரபலமாக இருந்தது.

SCROLL FOR NEXT