இளமை புதுமை

கூஃபி ஜென்: யாரென்று தெரிகிறதா ?

கார்த்திகா ராஜேந்திரன்

இன்ஸ்டகிராம், யூடியூப் தளங்களில் ‘கூஃபி ஜென் செஸ்’ என்கிற அலைவரிசையில் இருந்து வெளியாகும் காணொளிகள் எல்லாமே வைரல் ரகம். ‘கூஃபி ஜென்’ என்றே அறியப்படும் இவருடைய இயற்பெயர் சுதர்ஷன் அசோக். சாமானியரோடும் செஸ் ஆர்வலர்களோடும் ‘ஒன் டு ஒன்’ செஸ் விளையாடி நகைச்சுவையாகக் காணொளிகளைப் பதிவிடும் சுதர்ஷனின் சொந்த ஊர் திருவாரூர்.

2025 அக்டோபர் முதல் செஸ் தொடர்பான காணொளிகளைப் பதிவுசெய்து வருகிறார் சுதர்ஷன். 2கே கிட்டான இவரைச் சுமார் 17 லட்சம் பேர் இன்ஸ்டகிராமில் பின்தொடர்கின்றனர்.

தான் பங்கேற்கும் செஸ் போட்டிகளின் ஆட்ட நுணுக்கங்கள், முடிவுகள் ஆகியவற்றைச் சுவாரசியமாக விளக்குவதில் இவர் கில்லாடி. செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் இவரைத் தன் வீட்டுக்கு அழைத்து, செஸ் விளையாடி, தொடர்ந்து செஸ் விளையாடும்படி ஊக்கப்படுத்தியுள்ளார். ஆனால், இவர் ஒரு செஸ் வீரரா, கன்டென்ட் கிரியேட்டரா என்று கேட்கும் அளவுக்கு மாறிவிட்டார்.

செஸ் ஆர்வம்

“சிறு வயது முதலே செஸ்ஸில் ஆர்வம் வந்துவிட்டது. இப்போது கோவையில் முதுகலைப் பட்டம் படித்துவருகிறேன். நண்பர் ஸ்ரீவிக்னேஷின் ஐடியாவால் இன்ஸ்டகிராம் பக்கத்தைத் தொடங்கி, அதில் செஸ் காணொளிகளைப் பதிவிட்டு வருகிறேன். சுயமாகவே எடிட்டிங் கற்றுக்கொண்டேன்.

பெற்றோரும் ஊக்கப்படுத்தியதால் படித்துக்கொண்டே, கன்டென்ட் கிரியேஷனிலும் கவனம் செலுத்துகிறேன். பெரும்பாலும் ஆன்லைன் போட்டிகளில் பங்கேற்பது என் வழக்கம். போட்டியில் தோற்பவர் ‘டான்ஸ் சேலஞ்ச்’ ஒன்றை ஏற்க வேண்டுமென்கிற விதிமுறையோடு பலரோடு விளையாடினேன்.

அந்த டான்ஸ் சேலஞ்ச் தொடருக்கு வரவேற்பு கிடைக்கவே, பலர் ‘வாலன்டிய’ராகப் போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டினர். ஒரு கட்டத்தில் விஸ்வநாதன் ஆனந்த்தின் அழைப்பு வந்தது. அதுவரை நடைபெற்ற போட்டிகளில் நான் வெல்வதும், எதிரே இருப்பவர் டான்ஸ் ஆடுவதும்தான் வழக்கம். ஆனால், விஷி சாரோடு விளையாடிய போட்டியில் நான் தோல்வியடைந்ததால், நான் டான்ஸ் சேலஞ்சை ஏற்றேன். அந்த வீடியோ செம வைரலானது.

நானும் ஒரு செஸ் வீரர்தான். உள்ளூரில் நடைபெறும் சில தொடர்களில் பங்கேற்றுள்ளேன். தொடர்ச்சியாகத் தொழில்முறை செஸ் விளையாட வேண்டும் என்பது என் கனவு. செஸ் போட்டிகளில் பங்கேற்க அதிக செலவாகும்.

அதனால் தற்போது சின்ன பிரேக் எடுத்திருக்கிறேன். என்றாலும், ஏதாவது ஒரு வகையில் செஸ் விளையாட்டைச் சுற்றி இயங்குவதில் உறுதியாக இருக்கிறேன். இந்த கன்டென்ட் கிரியேட்டர் பயணத்தின் வழியே அது சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை உள்ளது” என்கிறார் சுதர்ஷன்.

சர்வதேச அளவில்

செஸ் விளையாட்டுத் தொடர்பான செய்திகள், வீரர் வீராங்கனைகளின் நேர்காணல்கள் ஆகியவற்றை வெளியிடும் முக்கியமான தளம் ‘செஸ்.காம்’. உலக அளவில் பிரபலமான இத்தளத்தின் இந்திய அணியின் கன்டென்ட் கிரியேட்டராக கைகோத்திருக்கிறார் சுதர்ஷன். தமிழ் கிரியேட்டர் ஒருவர் செஸ்.காம் தளத்தோடு கைகோப்பது இதுவே முதல் முறை.

“ஆரோக்கியமான உடலுக்கு ஃபிட்னெஸ் எப்படி முக்கியமோ, அதுபோல மூளையை ஆக்டிவாக வைத்திருக்க செஸ் காரணம் என்று நினைக்கிறேன். செஸ் விளையாட்டு சிந்தனைத் திறன், கவனக்குவிப்புத் திறனை மேம்படுத்தும்.

ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் செஸ் விளையாடலாம். இணையத்தில் பல செஸ் தளங்கள் இருக்கின்றன. செஸ்.காம் போன்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்து சர்வதேச அளவில் பலர் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பது அனுபவத்தை அதிகரிக்கும். அந்த அனுபவம்தான் ஒரு நல்ல செஸ் வீரராக உருவாக்கும். என்னுடைய காணொளிகளைப் பார்த்து பலர் செஸ் விளையாடத் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதைக் கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. செஸ் விளையாட்டைப் பரவலாக்குவதே என்னுடைய முக்கிய இலக்கு” என்கிறார் சுதர்ஷன்.

கூஃபி ஜென் செஸ் இன்ஸ்டகிராம் பக்கம்: instagram.com/goofygenchess/

SCROLL FOR NEXT