

“அதெப்படிமா, உனக்குத் தெரியாம இருக்கும்?” “சத்தியமா தெரியாது அங்கிள். அவ எங்கிட்ட எதுவுமே சொல்லல.” விஷயம் இதுதான். ஒரு விடுதி அறையில் ஒன்றாகத் தங்கியிருந்த இரண்டு பெண்களில், ஒரு பெண் காதலனுடன் தலைமறைவாகி விட்டார். இன்னொரு பெண்ணிடம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
“அவ கூடவே இருக்குற... உனக்கு எப்படித் தெரியாம இருக்கும்?” இப்படியான அனுபவங்கள் எல்லாருக்குமானவை. ஒன்றாகச் சுற்றிக்கொண்டிருப்போம். திடீரென ஒரு நண்பன் ஏதோ ஒரு பிரச்சினையில் மாட்டி தலைமறைவாகி விடுவான் அல்லது கையும் களவுமாகப் பிடிபடுவான்.
“கூடவே இருக்கியே செவ்வாழ. உனக்குத் தெரியாதுனா நம்புற மாதிரி இல்லியே.” “நிஜமாவே தெரியாது சார்.” “இவனுகள கொத்தா வண்டில ஏத்துங்க. இங்க அடிச்சா அங்க வலிக்கும்.”
இதுதான் பிரச்சினை. கூடவே இருப்பவர்கள் இப்படி ஒரு சதி அல்லது சாகசச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரியாதபோது அந்தத் தவறுக்குச் சம்பந்தமே இல்லாமல் நாம் பலிபீடம் செல்ல வேண்டியுள்ளது. ஒருவேளை, நம்மிடம் சொல்லிவிட்டே எல்லாம் செய்திருந்தாலும்கூட, விசாரணை உறுதி.
“முதல்லயே ஏன் எங்ககிட்ட சொல்லல?” தெரிந்தாலும் பிரச்சினை. தெரியாவிட்டாலும் பிரச்சினை. ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டவன்கூடக் காயமின்றிப் பரிசுடன் தப்பித்துச் செல்ல, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன் ஆம்புலன்ஸில் செல்ல வேண்டியுள்ளது. நாம் சொந்தத் தவறுக்காக மாட்டிக்கொண்டால்கூட அதில் ஒரு நியாயம் இருக்கும். இது கண்டிப்பாக ஓர் ‘எனக்கும் மட்டும் ஏன்?’ கணம்தான்.
நம்மில் சொந்த நலனுக்காக அடி வாங்கியவர்கள் குறைவே. நமக்காகக்கூட இந்த அளவு அடி வாங்கியிருக்க மாட்டோம் என்னும் அளவுக்கு மற்றவர்களுக்காக அடி வாங்கியிருப்போம். இதன் மூலம் கிடைக்கப்பெறும் நீதி, ‘சேர்க்கை சரி இல்லையென்றால் கூட்டுச்சதி; குற்றத்துக்கு உடந்தை என்கிற பிரிவுகளின்கீழ் நீயும் சேர்க்கப்படுவாய்’ என்பதோ, ‘தனித்து வாழ், இனித்து வாழ்’ என்பதோ அல்ல.