பதின்ம பருவத்தின் துள்ளல், பிசிறில்லாத நட்பு, தடம் மாறும் காதல், குடும்பத்தின் எதிர்பார்ப்பு என ஒரு சராசரி தமிழ் இளைஞனின் பள்ளிக் கால வாழ்க்கையை நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கும் அறிமுக இயக்குநர் கென் கருணாஸின் ‘யூத்', ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்குமா என்று பார்க்கலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூலிழையில் தேர்ச்சி பெறும் சராசரி மாணவன் பிரவீன் (கென் கருணாஸ்). மகனின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படும் தாய் சரோஜா (தேவதர்ஷினி), கண்டிப்பான தந்தை உன்னிகிருஷ்ணன் (சுராஜ் வெஞ்சாரமூடு) என ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பப் பின்னணி.
மேல்நிலைப் பள்ளியில் அடியெடுத்து வைக்கும் பிரவீனுக்குப் படிப்பை விடவும் காதலே லட்சியமாக இருக்கிறது. அடுத்தடுத்து மூன்று பெண்களுடன் அவன் கொள்ளும் காதல், அந்தப் பருவத்திற்கே உரிய முதிர்ச்சியற்ற முடிவுகள், அதனால் குடும்பத்தில் ஏற்படும் சலனங்கள் என நீள்கிறது படத்தின் திரைக்கதை.
நாயகனாக நடித்து, எழுதி இயக்கியிருக்கும் கென் கருணாஸ், நடிப்பில் டிஸ்டிங்ஷன் வாங்கிவிடுகிறார். ஒரு பதின்ம வயது இளைஞனின் உடல் மொழி, நடனம், குற்றவுணர்வில் தவிக்கும் இடங்களை யதார்த்தமாகப் பிரதிபலித்திருக்கிறார்.
அம்மாவாக வரும் தேவதர்ஷினி, பாசமும் அப்பாவித்தனமும் கலந்த நடிப்பால் மனதைத் தொடுகிறார். கண்டிப்பான தந்தையாக வரும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, தனது அனுபவ முதிர்ச்சியால் அந்த வழக்கமான கதாபாத்திரத்துக்கு ஒரு தனித்தன்மையை வழங்கியிருக்கிறார்.
மீனாட்சி தினேஷ், அனிஷ்மா அனில்குமார் என முதலிரண்டு நாயகிகளாக வருபவர்கள் கவனிக்க வைக்கிறார்கள். குறிப்பாக, கென் கருணாஸின் நண்பர்கள் குழுவும், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மணிகண்டன் குழுவும் செய்யும் பதின்ம வயதுக்குரிய லூட்டிகள், வகுப்பறை களேபரங்கள் இளம் ரசிகர்களுக்கான பட்டர் பாப்கார்ன்.
இவை ஆபாசமில்லாத நகைச்சுவை என்பது பெரிய ஆறுதல். நடிப்பைப் போலவே நடிகர்கள் தேர்விலும் தேறியிருக்கிறார் கென் கருணாஸ்.
2014-ஆம் ஆண்டு நடக்கும் கதையைச் சிதைக்காமல் காட்ட, கலை இயக்குநர் ராமு தங்கராஜ் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. அக்காலகட்டத்தின் கேட்ஜெட்கள், பொருட்களைப் பயன்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை காதலின் கொண்டாட்டத்தையும், உணர்ச்சிகளையும் செதுக்கிக் கொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் விக்கி, ஒரு நடுத்தர வர்க்க வீட்டின் அறையையும், பள்ளி வளாகத்தையும் இளமை துள்ளும் வண்ணங்களால் நிரப்பியிருக்கிறார்.
படத்தின் முதல் பாதி நத்தையாக நகர்வது பலவீனம். பதின்ம வயதுக் குறும்புகளை மட்டுமே நம்பி நீண்ட நேரம் திரைக்கதை பயணிப்பது சலிப்பைத் தருகிறது.
இரண்டாம் பாதியில் குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் வரும்போதுதான் படம் சூடுபிடிக்கிறது. திரைக்கதையில் சில அடிப்படை சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன.
குறிப்பாக, பள்ளிக் காதலைப் பிரதானமாகப் பேசும் 2கே தலைமுறையின் குணவியல்புகளைப் பேசும் படத்தில், பெண்களின் பார்வையில் காதலை அணுகாத போதாமை அப்பட்டமாகத் தெரிகிறது. இதனால் படம் சில இடங்களில் முதிர்ச்சியற்ற 'சிறுபிள்ளை விட்ட வெள்ளாமை'யாக இருக்கிறது.
படத்தில் காட்டப்படும் பள்ளிச் சூழல் இன்றைய யதார்த்தத்துக்குச் சற்றும் பொருந்தவில்லை. இவ்வளவு கூத்துகளை அனுமதிக்கும் பள்ளிகள் இருந்தால் அது நிச்சயம் உலக அதிசயமாகத்தான் இருக்க முடியும்!
பதின்வயதில் துளிர்விடும் ஆசைகளும், முதிர்ச்சியற்ற தன்மையும் ஒருவனை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதைச் சொல்லியிருக்கும் இப்படம், இறுதியாக நாயகன் குடும்பச் சூழலை உணர்ந்து கொள்வதாக முடித்திருப்பது தமிழ் கலாச்சாரப் பின்னணிக்கு வலு சேர்க்கிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் இதை ஒரு 'பூமர் ட்ரீட்மென்ட்' என்று வகைப்படுத்த வாய்ப்பிருந்தாலும், 2014-ஐ கண்முன் நிறுத்தும் கலை இயக்கம், நல்ல நடிப்பு, பதின்ம நகைச்சுவை, இரண்டாம் பாதியில் வரும் நல்ல குடும்ப தருணங்கள் ஆகியவற்றுக்காக இப்படத்தை ஒருமுறைப் பார்க்கலாம்.