ஒரு குடும்பத்தில் தந்தையும் தாயும் பழமைவாதிகளாகவும், அரசின் சகல நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் இருக்கும் போது, அவர்களின் குழந்தைகள் புதுமையை விரும்புகிறவர்களாகவும், மாற்றத்திற்காகப் போராடுகிறவர்களாகவும் இருக்கும்போது அந்தக் குடும்பத்தின் சமநிலை என்னவாகும்?
அவர்களுடைய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு உரையாடலும் எதை நோக்கியதாக இருக்கும்? ஈரானிய இயக்குநர் முகமது ரசூலூஃப் (Mohammad Rasoulof) இயக்கிய The Seed of the Sacred Fig திரைப்படத்தைப் பார்த்து முடிக்கும்போது இப்படியான கேள்விகளைத் தவிர்க்க முடியாது.
2024ஆம் ஆண்டு வெளியான இப்படம், ஈரானின் அரசியல் ஒடுக்குமுறை, பெண்களின் சுதந்திரம், மதத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படும் அதிகாரம், தலைமுறைகளுக்கு இடையிலான அரசியல் முரண்பாடு ஆகியவற்றை ஒரு குடும்பத்தினுடைய சிதைவின் வழியாகப் பேசுகிறது. ஒரு நாட்டின் அரசியல் நெருக்கடி அதன் தெருக்களில் மட்டுமல்ல, வீடுகளின் நான்கு சுவர்களுக்குள்ளும் எத்தகைய மாற்றங்களை உருவாக்குகிறது என்பதை இந்தத் திரைப்படம் நுட்பமாக வெளிப்படுத்துகிறது.
2022 செப்டம்பர் மாதம், ஹிஜாப் தொடர்பான விதிமுறைகளை மீறியதாகக் கூறி ஈரானின் அறநெறிக் காவல்துறையால் கைது செய்யப்பட்ட 22 வயது இளம் பெண் மாஷா அமினி, காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஈரான் முழுவதும் பெரும் மக்கள் போராட்டங்களை உருவாக்கியது.
பெண்களின் உடை மீதான அரசின் கட்டுப்பாட்டுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், அரசியல் ஒடுக்குமுறைக்கும் அடிப்படைவாத அதிகார அமைப்புக்கும் எதிரான மாபெரும் மக்கள் எழுச்சியாக விரிவடைந்தது.
'பெண், வாழ்க்கை, சுதந்திரம்' (Woman, Life, Freedom) என்கிற முழக்கங்கள் ஈரானின் தெருக்களைக் கடந்து உலகம் முழுவதும் எதிரொலித்தது. பெண்கள் தலைமுடியை வெட்டி, ஹிஜாப்களை எரித்து, அரசின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராகத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இந்த அரசியல் பின்னணியில்தான் ரசூலூஃப் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். தெருக்களில் நடைபெறும் போராட்டங்களை மட்டும் காட்சிப்படுத்தாமல், அந்தப் போராட்டங்கள் ஒரு குடும்பத்தின் மீது எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், குடும்ப உறவுகளை, உறவுகளின் நம்பிக்கைகளை எவ்வாறு மாற்றுகின்றன என்பதையே அவர் தனது திரைப்படத்தின் மையமாக்குகிறார்.
இந்தத் திரைப்படத்தில், கதையின் மையமாக இமான் என்கிற நீதித்துறை விசாரணை அதிகாரி இருக்கிறார். நீண்டகாலமாக ஈரானின் நீதித்துறை அமைப்பில் பணியாற்றும் அவர், பதவி உயர்வுக்காகக் காத்திருக்கிறார். அரசின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதும், குடும்பத்துக்கு வசதியான எதிர்காலத்தை உருவாக்குவதும் அவருடைய லட்சியமாக இருக்கின்றன.
அவருடைய மனைவி நஜ்மே. ரேசா, சனா என்கிற இரண்டு மகள்கள். வெளிப்பார்வைக்கு இது ஒரு சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பம். ஆனால் இமானுக்குக் கிடைக்கும் புதிய பொறுப்பு அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலைமையையும் வாழ்க்கையையும் மொத்தமாக மாற்றிவிடுகிறது.
ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்குகளில் இமான் ஈடுபடுத்தப்படுகிறார். அவருக்கு அரசாங்கத்தால் ஒரு துப்பாக்கியும் வழங்கப்படுகிறது. இமானுக்கு அரசு என்பது ஒழுங்கையும் பாதுகாப்பையும் வழங்கும் அமைப்பு.
அரசின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலமே தனது குடும்பத்துக்குப் பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்க முடியும் என்று நம்புகிறார். ஆனால், அவடின் மகள்கள் வேறொரு ஈரானைப் பார்க்கிறார்கள். தெருக்களில் போராடும் பெண்களின் குரல்களையும், காவல்துறையின் வன்முறையையும், சமூக ஊடகங்களில் பரவும் போராட்டக் காணொளிகளையும் அவர்கள் காண்கிறார்கள்.
ஒரே வீட்டில் வாழும் தந்தையும் மகள்களும் இரண்டு வெவ்வேறு அரசியல் உலகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். தந்தை அரசால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஆதரவாகப் பேசுகிறார். மகள்களோ மனசாட்சியிலிருந்து வெளிப்படும் நீதியின் பெயரால் கேள்வி எழுப்புகிறார்கள்.
இது வெறுமனே தலைமுறைகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடு அல்ல. அரசு, மதம், தனிமனித சுதந்திரம், பெண்களின் உரிமை ஆகியவற்றைப் பற்றிய அடிப்படையான அரசியல் முரண்பாடும் ஆகும்.
அரசின் அதிகாரம் ஒருவருக்குப் பதவியையும் சமூக அங்கீகாரத்தையும் வழங்குகிறது. அதே அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அவர் தனது மனசாட்சியையும், தனிப்பட்ட உறவுகளையும் பலிகொடுக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இமானின் வாழ்க்கையில் இதுதான் நிகழ்கிறது. அரசின் மீது அவர் வைத்திருக்கும் விசுவாசம், மனைவி மற்றும் மகள்கள் மீதான நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்குகிறது.
படத்தின் முக்கியமான திருப்பமாக இமானின் துப்பாக்கி காணாமல் போகிறது. அந்தத் துப்பாக்கி வெறும் ஆயுதம் மட்டுமல்ல; அது அரசால் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடையாளம். துப்பாக்கி காணாமல் போனதும், அவர் முதலில் சந்தேகிப்பது வெளியுலகத்தினரை அல்ல, தனது மனைவியையும் மகள்களையும்தான்.
வெளியில் அரசுக்கு எதிரானவர்களை விசாரித்துக் கொண்டிருந்த அதிகாரி, இப்போது தனது வீட்டுக்குள்ளேயே விசாரணையைத் தொடங்குகிறார். குடும்ப உறுப்பினர்களைக் கண்காணிக்கிறார். சந்தேகிக்கிறார். அவர்களிடம் விசாரணை நடத்துகிறார்.
அரசியல் ஒடுக்குமுறை எவ்வாறு மனிதர்களின் மனநிலையை மாற்றுகிறது என்பதற்கான மிக முக்கியமான எடுத்துக்காட்டு இது. அதிகாரம் ஒருவருக்கு அச்சத்தை உருவாக்குவதோடு நின்றுவிடுவதில்லை; அந்த அச்சத்தைத் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் மீதும் செலுத்தத் தொடங்குகிறார் இமான். ஒரு குடும்பத்தின் பாதுகாப்புக்காகப் போராடுவதாக நம்பும் தந்தையே, அந்தக் குடும்பத்தின் அச்சத்திற்குக் காரணமாக மாறுகிறார்.
இந்தத் திரைப்படத்தின் தலைப்பிலேயே ஒரு முக்கியமான அரசியல் குறியீடு பொதிந்திருக்கிறது. புனித அத்தி மரம் (Strangler Fig) என்று அழைக்கப்படும் மரவகை, மற்றொரு மரத்தின் மீது வளர்ந்து, அதன் உடலைச் சுற்றிப் படர்ந்து, காலப்போக்கில் அந்த மரத்தையே நெரித்து அழிக்கும் தன்மை கொண்டது.
இயற்கையான இந்த உருவகத்தை ஈரானின் மத அடிப்படையிலான அதிகார அமைப்புடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. மக்களின் மத நம்பிக்கைகளையும் ஆன்மிக அடையாளங்களையும் ஆதாரமாகக் கொண்டு உருவான ஓர் ஆட்சி, காலப்போக்கில் அதே மக்களின் சுதந்திரத்தையும் வாழ்வுரிமையையும் கட்டுப்படுத்தும் அமைப்பாக மாறும்போது ஏற்படும் முரண்பாட்டைத் தலைப்பு நினைவூட்டுகிறது.
மதம் என்பது மனிதனின் ஆன்மிகத் தேடலாக இருக்க வேண்டியது. ஆனால் அது அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான கருவியாக மாறும்போது, அதன் பெயரால் நிகழும் ஒடுக்குமுறையைப் படம் கேள்விக்குள்ளாக்குகிறது.
இப்படத்தில் நஜ்மேவின் பாத்திரமும் முக்கியமானது. கணவரின் பதவி உயர்வு குடும்பத்துக்கு வசதியான வாழ்க்கையைத் தரும் என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், அவரது வேலையால் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படுமோ என்கிற அச்சமும் அவருக்குள் இருக்கிறது. கணவரின் அதிகாரத்துக்கும் மகள்களின் எதிர்ப்புக்கும் இடையில் குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்க அவர் முயற்சிக்கிறார். ஆனால் அந்த முயற்சியே அவரை மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளுகிறது.
இங்கே இயக்குநர் ஒரு முக்கியமான சமூக உண்மையைப் பேசுகிறார். அரசியல் அதிகாரம் பெண்களின் உடலையும், உடையையும் கட்டுப்படுத்துவதோடு முடிந்துவிடுவதில்லை. குடும்ப அமைப்புக்குள்ளும் ஆணாதிக்க அதிகாரத்தின் வழியாகத் தனது செல்வாக்கைச் செலுத்துகிறது. தெருவில் போராடும் பெண்களுக்கும் வீட்டுக்குள் தங்களது சுதந்திரத்தைக் காப்பாற்றப் போராடும் பெண்களுக்கும் இடையில் ஓர் அரசியல் தொடர்பு இருக்கிறது என்பதைப் படம் உணர்த்துகிறது.
படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, ஈரானில் உண்மையாக நடைபெற்ற போராட்டங்களின்போது பதிவு செய்யப்பட்ட காணொளிகளைப் பயன்படுத்தியிருப்பது. காவல்துறையினரால் தாக்கப்படும் பெண்கள், போராட்டங்களில் ஈடுபடும் இளைஞர்கள், அரசின் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் பொதுமக்கள் என நம்மைப் பதட்டத்திற்குள்ளாக்கும் உண்மையான காட்சிகள் திரைப்படத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன.
இதன் மூலம் இயக்குநர் புனைவுக்கும் ஆவணத்துக்கும் இடையில் ஒரு பாலத்தை உருவாக்குகிறார். வீட்டுக்குள் நடக்கும் உரையாடல்களும் வெளியுலகில் நடக்கும் அரசியல் வன்முறையும் ஒன்றோடு மற்றொன்று இணைகின்றன. நீங்களும்கூட, ஒரு குடும்பத்தின் கதையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்விலிருந்து வெளியேறி, அந்தக் குடும்பம் வாழும் நாட்டின் அரசியல் எதார்த்தத்திற்குள் நுழையத் தொடங்குவீர்கள்.
முகமது ரசூலூஃப் ஈரானின் அரசியல் ஒடுக்குமுறையைத் தொடர்ந்து தனது திரைப்படங்கள் வழியாக விமர்சித்து வந்தவர். இதன் காரணமாக அவர் பலமுறை கைது செய்யப்பட்டார். சிறைத்தண்டனைகளையும் திரைப்படம் இயக்குவதற்கான தடைகளையும் எதிர்கொண்டார். There Is No Evil (2020), A Man of Integrity (2017), Goodbye (2011) போன்ற அவரது படைப்புகள் ஈரானின் அரசியல் அதிகாரம், மரண தண்டனை, தனிமனித மனசாட்சி, அரசு இயந்திரத்தின் ஒடுக்குமுறை ஆகியவற்றை மையப்படுத்தியவை.
The Seed of the Sacred Fig திரைப்படத்தை உருவாக்கியதற்காகவும் அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக ஈரானை விட்டு வெளியேறிய அவர், ஐரோப்பாவை அடைந்தார். படத்தின் படப்பிடிப்பு ரகசியமாக நடைபெற்றது. பல நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் கடுமையான ஆபத்துகளுக்கு மத்தியில் பணியாற்றினர். படப்பிடிப்பின் இறுதிக்கட்டப் பணிகளையும் ஈரானுக்கு வெளியே முடிக்க வேண்டியிருந்தது.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற கான் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், சிறப்பு நடுவர் விருதையும், சர்வதேச திரைப்பட விமர்சகர்கள் கூட்டமைப்பின் FIPRESCI விருதையும் பெற்றது. ஆஸ்கர் விருதுக்கான சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவுக்கும் அனுப்பப்பட்டது.
மிசாக் ஸாரே, சோஹெய்லா கோலெஸ்தானி, மஹ்சா ரோஸ்தாமி, செத்தாரே மாலெகி ஆகியோரின் நடிப்பு படத்தின் உளவியல் பதற்றத்தைக் கூடுதல் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்துகிறது.
விருது விழாவில் இயக்குநர் முகமது ரசூலூஃப்
குறிப்பாக, தந்தையின் அதிகாரத்துக்கும் மகள்களின் எதிர்ப்புக்கும் இடையிலான மோதல், உரையாடல்களைத் தாண்டி அவர்களின் பார்வையிலும் உடல்மொழியிலும் வெளிப்படுகிறது. இப்படியாக, ஒரு நாட்டின் அரசியல் அதிகாரம் அதன் குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் எவ்வளவு ஆழமாக நுழைய முடியும் என்பதை The Seed of the Sacred Fig மிக நுட்பமாகப் பேசுகிறது.
ஒரு தந்தை குடும்பத்தின் பாதுகாவலராக இருக்க வேண்டியவர். ஆனால் அவர் அரசின் அதிகாரத்தையும் தனது வீட்டிற்குள் கொண்டு வரும்போது, வீட்டின் பாதுகாப்பே, அச்சமாக மாறுகிறது. மதம் என்கிற அடையாளம், அதிகாரத்தின் கருவியாக மாறும்போது, அதன் உண்மையான பொருள் கேள்விக்குள்ளாகிறது.
பெண்களின் உடல், உடை, குரல், விருப்பம் ஆகியவற்றின் மீது அதிகாரம் செலுத்தும் அமைப்புக்கு எதிராக எழும் இளைய தலைமுறையின் குரல், இந்தப் படத்தில் ஒரு குடும்பத்தின் எதிர்ப்பாகத் தொடங்கி, ஒரு சமூகத்தின் விடுதலைக்கான விருப்பமாக விரிவடைகிறது.
ஈரானின் கதையாகத் தொடங்கும் இந்தத் திரைப்படம், அடிப்படைவாதத்தின் பெயரால் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உலகின் எந்த நாட்டுக்கும் பொருந்தக்கூடிய ஓர் அரசியல் கேள்வியை நம்முன் வைக்கிறது.
அரசின் அதிகாரம் குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அத்துமீறி நுழையும்போது, குடும்பத்தின் பெயரால் பெண்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும்போது, மதம் மற்றும் தேசியம் போன்ற அடையாளங்கள் கேள்வி கேட்பவர்களை மௌனமாக்கவும், அச்சுறுத்தவும் பயன்படுத்தப்படும்போது, ஜனநாயகத்தின் உண்மையான பொருள் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
ஒரு மரம் இன்னொரு மரத்தைச் சுற்றிப் படர்ந்து அழிப்பதைப் போல, அதிகாரம் தான் தழைக்க வேண்டிய சமூகத்தையே நெரித்துவிடக்கூடும் என்பதை இந்தத் திரைப்படத்தின் வழியாகப் புரிந்துகொள்ளலாம்.
ஈரானின் தெருக்களில் வெடிக்கும் போராட்டத்தையும், அரசியலை வீட்டிற்குள் கொண்டுவரும் அதிகாரத்தையும், ஒரே திரைமொழியில் இணைக்கும் The Seed of the Sacred Fig, நம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய நல்ல திரைப்படம்.
கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com