Hive: போருக்குப் பின்னாலும் போரிடும் பெண்கள் | சினிமாவும் அரசியலும் 57

Hive: போருக்குப் பின்னாலும் போரிடும் பெண்கள் | சினிமாவும் அரசியலும் 57
Updated on: 
5 min read

ஒரு போரைத் தொடங்குவதற்குப் பெரிய அளவிலான திறமைகள் எதுவும் தேவையில்லை. பைத்தியக்காரனாக இருந்தால் போதுமானது. சக மனிதர்களை நேசிக்க முடியாதவனாக, வெறுப்பு நிறைந்தவனாக இருந்தால் போதுமானது. ஒர் ஆயுத வியாபாரியின் பேராசை ஒரு பெரும்போர் நிகழ்வதற்கும், ஒரு பேரழிவு நடப்பதற்கும் போதுமானதாக இருக்கிறது.

நிலமெங்கும் சிந்தப்பட்ட மானுட ரத்தத்தில் இருந்து தனக்கான லாபத்தை, தனக்கான உணவை எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள் மானுட விரோதிகளான முதலாளிகள். ஆனால், போர் என்பது இதுமட்டும்தானா? அதைத்தான் ஆழமாகப் பேசுகிறது இந்தத் திரைப்படம்.

சில திரைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் பெயர்களாலேயே பார்வையாளர்களை உள்ளிழுத்துக் கொள்ளும், இந்தத் திரைப்படமும் திரைப்படத்தின் பெயரும் அப்படித்தான். தேன்கூடு என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் தேனைப்போலவே தித்திப்பாக இருக்குமென்று நினைத்து விடாதீர்கள்.

யாராலும் எளிதில் விழுங்கிவிட முடியாத பெருங்கசப்பைக் கொண்டிருக்கிறது இந்தத் திரைப்படம். கடந்துபோக முடியாத அந்தக் கசப்பைப் பிரசவித்தது எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சந்தேகமேயில்லாமல் போர்தான்.

போரைத் தொடங்கியவர்கள் ஒரு செய்தியாளர் சந்திப்பில் போரை முடித்துக் கொள்வார்கள். அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுக் கொள்வார்கள். வானத்தை பறவைகளிடம் கொடுத்துவிட்டு, போர் விமானங்களைத் திரும்ப அழைத்துக் கொள்வார்கள். பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் அடுத்த யுத்தத்திற்குத் தயாராக வேண்டி அப்போதைக்கு மெளனிக்கச் செய்துவிடுவார்கள்.

ஆனால் போர் ஏற்படுத்திய அழிவுகளுக்கு யார் பொறுப்பேற்பது. பதில்சொல்ல முடியாத ஒரு வலியை, உண்மையிலேயே வலிக்கச் செய்யும்படி பதிவு செய்திருக்கிறார் இந்தத் திரைப்படத்தின் இயக்குநர்.

<div class="paragraphs"><p>இயக்குநர் பிளெர்டா பஷோலி</p></div>

இயக்குநர் பிளெர்டா பஷோலி

பிளெர்டா பஷோலி கொசோவோ நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர். 1983ஆம் ஆண்டு கொசோவோவின் தலைநகரான பிரிஸ்டினாவில் (Pristina) பிறந்தவர். சமூகப் பிரச்சினைகள், பெண்களின் வாழ்க்கை, பாலின ஒடுக்குமுறை, போருக்குப் பிந்தைய சமூகத்தின் நெருக்கடிகள் ஆகியவற்றை யதார்த்தமான திரைப்பட மொழியில் அணுகுபவர்.

பிரிஸ்டினா பல்கலைக்கழகத்தில் தத்துவமும் திரைப்பட இயக்கமும் பயின்றவர். தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற டிஷ் கலைப் பள்ளியில் திரைப்படப் படிப்பைத் தொடர்ந்தார். நியூயார்க்கில் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து திரைப்பட உருவாக்கம் தொடர்பான பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். 2011ஆம் ஆண்டு கொசோவோ திரும்பிய அவர், குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் உருவாக்கத் தொடங்கினார்.

2021இல் வெளியான Hive திரைப்படம் பிளெர்டா பஷோலியின் திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 2021 சன்டான்ஸ் திரைப்பட விழாவின் உலகத் திரைப்படப் போட்டிப் பிரிவில் இப்படம் மூன்று முக்கிய விருதுகளை வென்றது. சன்டான்ஸ் திரைப்பட விழாவின் வரலாற்றில் இந்த மூன்று விருதுகளையும் ஒரே திரைப்படம் வென்றது இதுவே முதல் முறை.

இதன் மூலம் சர்வதேசத் திரைப்பட உலகில் கவனிக்கப்பட வேண்டிய இயக்குநராக பஷோலி உருவெடுத்தார். மேலும், Hive கொசோவோ நாட்டின் சார்பில் 94வது ஆஸ்கர் விருதுக்கான சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆஸ்கர் இறுதிப் பரிந்துரையைப் பெறவில்லை என்றாலும், கொசோவோ திரைப்பட வரலாற்றில் இது முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.

பஷோலியின் திரைப்படங்களில் முக்கியமான சில அம்சங்கள், கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மிகைப்படுத்தாமல் இயல்பான காட்சிகளின் வழியாகச் சொல்வதுதான். பெண்களை வெறும் பாதிக்கப்பட்டவர்களாகச் சித்தரிக்காமல், தங்களது வாழ்க்கைக்காகப் போராடும் மனிதர்களாகக் காட்டுவது.

கொசோவோவின் வரலாறு, போர், சமூகக் கட்டுப்பாடுகள், பாலின ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைத் திரைப்படங்களின் வழியாகப் பேசுவது. பெரிய அரசியல் நிகழ்வுகளின் பின்னால் மறைந்திருக்கும் சாமானிய மனிதர்களின் கதைகளை முன்னிலைப்படுத்துவது.

இந்தத் திரைப்படம் கற்பனையாக எழுதப்பட்ட கதை அல்ல. கொசோவோ போரின்போது கணவரை இழந்து, பின்னர் தனது வாழ்க்கையைத் தானே கட்டியெழுப்பிய ஃபஹ்ரிஜே ஹோட்டி (Fahrije Hoti) என்கிற பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அனபோதிலும், இந்தக் கதை தனிப்பட்ட ஒரு பெண்ணின் துயரத்தையும் தாண்டி, போரில் ஆண்களை இழந்த பெண்கள் எவ்வாறு ஒன்றிணைந்து தங்களுக்கான பொருளாதார வாழ்க்கையை உருவாக்கினார்கள் என்பதையும் பதிவு செய்கிறது.

1998–1999 காலக்கட்டத்தில் நடைபெற்ற கொசோவோ போரின்போது, செர்பியப் படைகளுக்கும் கொசோவோவின் அல்பேனிய ஆயுதக் குழுக்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நிகழ்ந்தன.

குறிப்பாக, 1999 மார்ச் மாதத்தில் கொசோவோவின் க்ருஷா இ மதே (Krusha e Madhe) கிராமத்தில் பெரும் படுகொலை நடைபெற்றது. செர்பியப் படைகளால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டனர். பல பெண்கள் கணவர்களையும் மகன்களையும் இழந்தனர். பலர் காணாமல் போனவர்களாகப் பதிவு செய்யப்பட்டனர்.

ஃபஹ்ரிஜே ஹோட்டியின் கணவரும் அந்தப் போரின்போது காணாமல் போனவர்களில் ஒருவர். அவருடைய உடல் கிடைக்காததால், அவர் உயிருடன் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா என்கிற கேள்விக்குப் பல ஆண்டுகளாக விடை கிடைக்கவில்லை. அவரைப் போன்ற பெண்கள் ஒருபுறம் தங்களுடைய உறவினர்களை இழந்த துயரத்தையும், மறுபுறம் குடும்பத்தின் பொருளாதாரப் பொறுப்பையும் சுமக்க வேண்டியிருந்தது.

க்ருஷா இ மதே (Krusha e Madhe) என்கிற கிராமம் போருக்குப் பின்னர் ஒரு சோகமான அடையாளத்தைப் பெற்றது. அது கணவர்களை இழந்தவர்களின் கிராமம் (Village of Widows) என்று அழைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, 1999 போருக்குப் பின்னர் அந்தக் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கணவர்களை இழந்திருந்தனர். 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோரில் ஒருவரையாவது இழந்திருந்தனர்.

இந்தப் பெண்கள் எதிர்கொண்ட பிரச்சினை வெறுமனே கணவர்களின் இழப்பு மட்டுமல்ல. குடும்பத்தின் வருமானம் நின்றுபோனது. குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியானது. கணவர்களை இழந்த பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்கிற சமூகக் கட்டுப்பாடு இருந்தது.

தனியாக வேலைக்குச் செல்வதும், வாகனம் ஓட்டுவதும், தொழில் நடத்துவதும் சமூக அவமதிப்பாகக் கருதப்பட்டது. போரில் உயிர் பிழைத்திருந்தாலும், போருக்குப் பிந்தைய வாழ்க்கையில் இந்தப் பெண்கள் மற்றொரு வகையான ஒடுக்குமுறையை எதிர்கொண்டனர்.

ஃபஹ்ரிஜே ஹோட்டி தனது இரண்டு குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேலை தேட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். முதலில் கணவர் வைத்திருந்த தேன் கூடுகளைப் பராமரித்து, தேன் தயாரித்து விற்பனை செய்ய முயன்றார். ஆனால், அதிலிருந்து கிடைத்த வருமானம் போதுமானதாக இல்லை.

பின்னர் தனது கிராமத்தில் பெண்களுக்குத் தெரிந்த பாரம்பரிய உணவுத் தயாரிப்புத் திறனைப் பயன்படுத்தி, மிளகாயிலிருந்து தயாரிக்கப்படும் அஜ்வர் (Ajvar) என்கிற உணவுப் பொருளைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார்.

அதற்காக அவர் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு, ஓட்டுநர் உரிமமும் பெற்றார். அருகிலுள்ள நகரங்களுக்குச் சென்று கடைகளில் தனது பொருள்களை விற்பனை செய்தார். இதுதான் அந்தக் கிராமத்தின் ஆணாதிக்கச் சமூகத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஒரு விதவை வீட்டை விட்டு வெளியேறி வேலை செய்வதையும், ஆண்களின் உதவியின்றி பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரைப் பற்றி அவதூறுகள் பேசப்பட்டன. தொழிலைத் தடுக்க முயற்சிகளும் நடந்தன.

ஃபஹ்ரிஜே தனது முயற்சியைத் தனக்கான வேலையாக மட்டும் வைத்துக் கொள்ளாமல், தன்னைப் போலவே கணவர்களை இழந்து பொருளாதார நெருக்கடியில் இருந்த மற்ற பெண்களையும் ஒன்றிணைத்தார். இதன் விளைவாக Krusha என்கிற பெண்கள் தலைமையிலான உணவுத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கூட்டுறவு முயற்சி உருவானது. இந்த முயற்சி படிப்படியாக வளர்ந்தது. பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவானது.

அஜ்வர் உள்ளிட்ட பாரம்பரிய உணவுப் பொருள்கள் வணிகப் பொருள்களாக மாறின. உள்ளூர்ச் சந்தைகளைக் கடந்து கொசோவோவின் பல நகரங்களுக்கும் பொருள்கள் சென்றடைந்தன. போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது குடும்பங்களுக்கான வருமானத்தைத் தாங்களே உருவாக்கத் தொடங்கினர். பின்னர் இந்த நிறுவனம் சுமார் 50 பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அளவுக்கு வளர்ந்தது. அவர்களில் பெரும்பாலானோர் போரில் கணவரை இழந்தவர்கள்.

கொசோவோவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர், ஃபஹ்ரிஜே ஹோட்டியின் கதையைத் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் மூலம் அறிந்துகொண்டார். அந்தப் பெண்ணின் வாழ்க்கைப் போராட்டம் அவரை மிகவும் பாதித்தது. பின்னர் ஃபஹ்ரிஜேயை நேரில் சந்தித்து அவரது அனுபவங்களை அறிந்துகொண்டு திரைக்கதையை உருவாக்கினார்.

இயக்குநர் கூறியதன்படி, ஃபஹ்ரிஜேயின் கதை ஒரு தனிப்பட்ட வெற்றிக் கதை மட்டுமல்ல; கொசோவோவில் போருக்குப் பின்னர் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பிய ஏராளமான பெண்களின் குரலாகவும் இருக்கிறது.

நானும் ஒரு பெண்ணாகவும் தாயாகவும் இருப்பதால், ஃபஹ்ரிஜேயின் வாழ்க்கை என்னை மிகவும் கவர்ந்தது. வெறுமனே உயிர் பிழைப்பதற்காகப் போராடாமல், மிகப்பெரிய ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்கிற அவரது மன உறுதியும், ஒருபோதும் பின்னோக்கித் திரும்பிப் பார்க்காமல் முன்னேற வேண்டும் என்கிற அவரது துணிச்சலும் என்னை வியக்க வைத்தன. அவருடைய நேர்மறையான அணுகுமுறையும் ஆற்றலும் வியக்கத்தக்கவை. அந்த வலிமையைத் திரையில் கொண்டுவர விரும்பினேன் என்கிறார் இயக்குநர்.

இந்தத் திரைப்படத்தின் மற்றொரு முக்கியமான அம்சம், போரின் நினைவுகளை அது கையாளும் விதம். காணாமல் போன கணவரின் உடலைத் தேடும் பெண்களின் துயரம் படத்தின் பின்னணியில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.

போரில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கிடைக்காதபோது, குடும்பங்களுக்கு உறுதியான முடிவுகூடக் கிடைப்பதில்லை. தங்களின் அன்பிற்குரியவர்கள் இறந்துவிட்டார்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையும், அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்கிற அச்சமும் ஒன்றாகவே இருக்கின்றன.

ஃபஹ்ரியே தனது கணவருக்காகக் காத்திருப்பதை நிறுத்திவிடவில்லை. வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் அவளுடைய முயற்சியிலும்கூடக் கணவர் திரும்பி வரக்கூடும் என்கிற நம்பிக்கையின் நிழல் இருக்கிறது.

ஃபஹ்ரியேவின் வலிமையைத் திரையில் எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது குறித்து நடிகை யில்கா காஷியுடன் விரிவாகப் பணியாற்றியதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். யில்கா காஷியின் நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலம். பெரும்பாலான நேரத்தில் அவரது முகத்தில் வெளிப்படும் உணர்வுகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டவை.

கோபத்தை வெளிப்படுத்துவதற்குக்கூட அவருக்கு அதிகமான வசனங்கள் தேவையில்லை. அவமதிப்பை எதிர்கொள்ளும் தருணங்களிலும், குடும்பப் பொறுப்புகளால் சோர்வடையும் நேரத்திலும், தனது தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்காகப் போராடும் காட்சிகளிலும் அவரது நடிப்பு நம்பகத்தன்மையுடன் அமைந்திருக்கிறது.

ஒரு பக்கம் வாழ்வதற்கான போராட்டம், இன்னொருபக்கம் போரில் காணாமல் போன கணவனைத் தேடும் போராட்டம், எல்லாவற்றையும் விட மேலாக, சுயமாகச் சிந்தித்து, சுயமாக உழைத்து, தன்னைப் போன்ற பெண்களைத் தன்னோடு இணைத்துக்கொண்டு கூட்டுழைப்பில் முன்னேறுவதை ஒத்துக்கொள்ளவே முடியாத ஆணாதிக்கச் சமூகத்தைத் தைரியமாக எதிர்கொள்வது என இந்தப் படம் தனக்குள் நிறையச் செய்திகளை ஒளித்து வைத்திருக்கிறது.

காஷ்மீரில் காணாமல் ஆக்கப்பட்ட கணவர்களுக்காகக் காத்திருக்கும் பெண்கள் ஞாபகம் வருகிறார்கள். பாலஸ்தீனத்தில் காணாமல் ஆக்கப்பட்ட கணவர்களுக்காக காத்திருக்கும் பெண்களை நினைத்துக் கொள்கிறேன். இப்படியாக எல்லாப் போர்களிலும் என்னதான் நடக்கிறது என்று பார்த்தால், இழப்பைத் தவிர எதுவும் தெரியவில்லை.

இந்தத் தேன்கூடு, போருக்குப் பின்னால் இருக்கும் மானுட வலியை மட்டுமல்ல, அத்தனை அழிவுகளுக்குப் பின்னாலும் அசையாமல் உறுதியாக இருக்கும் மானுட நம்பிக்கையையும் சொல்லக்கூடிய திரைப்படம்

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

Hive: போருக்குப் பின்னாலும் போரிடும் பெண்கள் | சினிமாவும் அரசியலும் 57
Three Monkeys: மூன்று குரங்குகளும் முக்கியமான உண்மையும் | சினிமாவும் அரசியலும் 56

X