கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான யோவான் எழுதிய பகுதி இப்படியாகத் தொடங்கும், ‘ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது’ என்று.
வார்த்தையின் முக்கியத்துவத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்படிச் சொல்லியிருக்கிறார்கள் முன்னோர்கள். ஆனால், அந்த வார்த்தைகளை நாம் நல்லவிதமாகப் பயன்படுத்துகிறோமா என்று கேட்டால், என்ன பதில் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
அன்பின் வார்த்தைகள் மனித இதயங்களின் ஓரத்தில் உபயோகமில்லாமல் ஒதுங்கிக் கிடக்க, பெரும்பாலான மனிதர்கள் ஒருவருக்கு இன்னொருவர் அவமதிக்கும் வார்த்தைகளைத்தான் தேடித்தேடிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தூய அன்பினால் ஒன்றுகலந்த காதல் இதயங்கள், தேவையில்லாமல் வெளிப்படுத்தப்பட்ட சில வார்த்தைகளால் நொறுங்கி விலகிப் போனதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். எத்தனை நட்புகளை, எத்தனை உறவுகளைத் தேவையில்லாமல் சொல்லப்பட்ட வார்த்தைகள் வாழ்நாள் முழுவதும் சேரவிடாமல் செய்திருக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
தனிமனிதர்களுக்கு இடையில் மட்டுமா பிளவுகளை ஏற்படுத்துகின்றன வார்த்தைகள்? எத்தனையோ போர்களுக்குக் காரணமாக இருந்து, எத்தனையோ அப்பாவி மனிதர்களின் மரணங்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன வெறுப்பு நிறைந்த இதயத்திலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள்.
அவசியமில்லாமல் ஒரு மனிதனிடம் இன்னொரு மனிதனால் சொல்லப்பட்ட வார்த்தைகள், சம்பவ இடத்தில் இருந்த சம்பந்தப்பட்ட இரண்டு மனிதர்களையும் தாண்டி தேசத்தின் அரசியல் மற்றும் மத மோதல்களைத் தூண்டுமளவுக்கு மாறுகிறது என்பதை உங்களால் நம்ப முடியுமா? இந்த லெபனான் திரைப்படம் உங்களை நம்ப வைக்கும்.
1963இல் லெபனானில் பிறந்த ஜியாத் துவைரி இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். லெபனான் உள்நாட்டுப் போரின் பின்னணியில் வளர்ந்ததால் இயல்பாகவே அவரது திரைப்படங்களில் போர், மத அடையாளம், அரசியல் மோதல்கள் மற்றும் வரலாற்றுக் காயங்கள் தொடர்ந்து வெளிப்படுகின்றன.
அமெரிக்காவில் திரைப்படக் கல்வி பயின்ற ஜியாத் துவைரி, புகழ்பெற்ற இயக்குநர் குவென்டின் டாரண்டினோவின் திரைப்படங்களில் ஒளிப்பதிவுத் துறையில் உதவியாளராகவும் பணியாற்றிய பின்னர் இயக்குநராக மாறி, மத்திய கிழக்கின் அரசியல் மற்றும் சமூகச் சிக்கல்களைத் தனித்துவமான திரைமொழியில் வெளிப்படுத்தினார்.
இந்தத் திரைப்படத்தின் கதை உருவாவதற்கு இயக்குநரின் சொந்த அனுபவமும் காரணமாக இருந்திருக்கிறது. பெய்ரூட்டில் ஒரு கட்டுமானத் தொழிலாளியுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதமே, பெரும் அரசியல் மோதலாக விரிவடையும் கதைக்கான தொடக்கமாக அமைந்தது என்று நேர்காணலில் தெரிவித்துள்ளார் ஜியாத் துவைரி.
ஒரு தரப்பை முழுமையாகக் குற்றவாளியாகச் சித்தரிப்பதற்குப் பதிலாக, இரு தரப்பினரின் வரலாற்று நினைவுகள், அச்சங்கள், துயரங்கள் மற்றும் அரசியல் நம்பிக்கைகளைக் கச்சிதமாக வெளிப்படுத்துவது இயக்குநரின் சிறப்பு.
இந்தத் திரைப்படத்தை இன்னும் நெருங்கிப் பார்க்கச் செய்தது இன்னொரு முக்கியமான அம்சம். ஜியாத் துவைரி இடதுசாரி சிந்தனையாளர். கூடுதலாக பாலஸ்தீன ஆதரவு அரசியல் பின்னணியில் வளர்ந்தவர். அவரது இணைத் திரைக்கதை எழுத்தாளர் ஜோயல் தூமா, கிறிஸ்துவ வலதுசாரிப் பின்னணியைச் சேர்ந்தவர்.
இருவரும் தங்களுக்குப் பழக்கமான அரசியல் தரப்புக்கு மாறாக, எதிர்த் தரப்பின் பார்வையிலிருந்து காட்சிகளை எழுத முடிவுசெய்து, எழுதத் தொடங்குகிறார்கள். இதன் மூலம் தங்களுக்குள் இருந்த முன்முடிவுகளை ஆராய்ந்து, மற்ற தரப்பினரின் அனுபவங்களையும் புரிந்துகொள்ள முயன்றதாகத் தெரிவித்துள்ளார் ஜியாத் துவைரி.
2017ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம், வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சர்வதேச அளவில் கவனம் பெற்றது. சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுப் பிரிவில் 2018ஆம் ஆண்டு இறுதிப் பட்டியலை எட்டியதுடன், லெபனான் திரைப்படம் ஒன்று அந்தப் பிரிவில் இறுதிப் பரிந்துரையைப் பெற்ற முதல் நிகழ்வாகவும் அமைந்தது. நடிகர்கள் அடெல் கரம், கமெல் எல் பாஷா ஆகியோரின் இயல்பான நடிப்பும், ஒரு சட்டப் பிரச்சினையை அரசியல் விவாதமாக மாற்றும் திரைக்கதையும் படத்தின் முக்கியமான அங்கமாக இருந்தன.
லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் கதை தொடங்குகிறது. டோனி ஹன்னா ஒரு கிறிஸ்துவர். அரசியல்ரீதியாக வலதுசாரிச் சிந்தனை கொண்டவர். தனது மத அடையாளத்தையும் சமூகப் பெருமிதத்தையும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டிருப்பவர். அவரது வீட்டுக்கு அருகில் நடைபெறும் கட்டுமானப் பணிகளின்போது, பாலஸ்தீன அகதியான யாசர் சலாமேவுக்கும் டோனிக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
யாசர் கட்டுமானத் தொழிலாளர்களின் மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார். டோனியின் பால்கனியிலிருந்து விழும் தண்ணீர் தொந்தரவாக இருப்பதால் அதைச் சரிசெய்யச் சொல்கிறார் யாசர். முடியாது என்கிறான் டோனி. சரிசெய்கிறார் யாசர். கோபத்தில் அதை உடைத்தெறிகிறான் டோனி.
பிரச்சினையைத் தொடர்ந்து சமாதானம் பேச முயற்சிக்கையில் யாசரைப் பார்த்து ஆழமாகக் காயப்படுத்தும் சில வார்த்தைகளைப் பேசிவிடுகிறான் டோனி. தாங்க முடியாத கோபத்தில் அவனை அடித்துவிடுகிறார் யாசர்.
இந்தச் சிறிய மோதலுக்குள் சிக்கியிருக்கும் இரண்டு மனிதர்களுக்குப் பின்னிருக்கும் வரலாறு, அவர்களின் உடனடி கோபத்தைவிடப் பெரியது. டோனி யாசரை நோக்கி உதிர்க்கும் வார்த்தைகள் தனிப்பட்ட அவமதிப்பாக மட்டும் நின்றுவிடுவதில்லை. அவை பாலஸ்தீன மக்களின் வரலாற்று அனுபவங்களையும் இடப்பெயர்வின் துயரங்களையும் தொடுகின்றன. யாசரின் பதிலடியையும் ஒரு தனிமனிதனின் ஆத்திரமாக மட்டும் புரிந்துகொள்ளப்பட முடியாது. இவ்வாறு இரண்டு மனிதர்களுக்கு இடையிலான பிரச்சினை, நீதிமன்றம், ஊடகம், அரசியல் கட்சிகள் எனப் பல தளங்களுக்குப் பரவுகிறது.
டோனி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று யாசரின் வழக்கறிஞர் வலியுறுத்துகிறார். ஆனால், டோனி மறுக்கிறார். நீதிமன்றம் இத்திரைப்படத்தில் வெறும் சட்ட அமைப்பின் அடையாளமாக மட்டும் இல்லை. அது ஒரு நாட்டின் நினைவுகளும் மறைக்கப்பட்ட உண்மைகளும் ஒன்றை மற்றொன்று எதிர்கொள்ளும் மேடையாக மாறுகிறது. வழக்கறிஞர்கள் முன்வைக்கும் வாதங்கள், சாட்சிகள் கூறும் தகவல்கள், இருவரின் கடந்தகால வாழ்க்கை குறித்த வெளிப்பாடுகள் என ஒவ்வொரு கட்டமும் கதையின் பொருளை விரிவாக்குகின்றன.
முதலில் யார் யாரை அவமதித்தார்கள் என்கிற கேள்வியாகத் தொடங்கும் விசாரணை, இறுதியில் யாருடைய துயரம் அங்கீகரிக்கப்படுகிறது, யாருடைய வரலாறு கேட்கப்படுகிறது என்கிற கேள்வியாக மாறுகிறது.
லெபனானின் வரலாற்றைப் புரிந்துகொள்ளாமல் இந்தப் படத்தின் அரசியல் அடுக்குகளை முழுமையாகப் புரிந்துகொள்வது கடினம். பல்வேறு மதச் சமூகங்கள் வாழும் நாடான லெபனான், நீண்டகால உள்நாட்டுப் போரின் காயங்களைச் சுமந்திருக்கிறது.
1975 முதல் 1990 வரை நீடித்த உள்நாட்டுப் போர், மத அடையாளங்கள், அரசியல் அதிகாரப் போட்டிகள், பிராந்தியத் தலையீடுகள் ஆகியவற்றின் சிக்கலான கலவையாக இருந்தது. பாலஸ்தீன அகதிகளின் இருப்பும் அந்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றது. இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வுரிமை, உள்ளூர் மக்களின் அச்சங்கள், ஆயுதக் குழுக்களின் அரசியல், வெளிநாட்டு ஆதிக்கம் எனப் பல முரண்பாடுகள் ஒன்றோடு மற்றொன்று பின்னிப் பிணைந்திருந்தன.
இந்தத் திரைப்படம் ஒருவரை முழுமையான வில்லனாகவும் மற்றொருவரை குற்றமற்ற பாதிக்கப்பட்டவராகவும் சித்தரிப்பதில்லை. டோனியின் பிடிவாதத்தையும் யாசரின் தவறையும் சரிசமமாக வெளிப்படுத்துகிறது. ஆனால் இருவரின் செயல்களையும் அவர்கள் வாழும் வரலாற்றுச் சூழலிலிருந்து பார்க்கச் சொல்கிறது. மனிதர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளுக்குப் பொறுப்பானவர்கள்; அதேவேளையில், அவர்களின் சிந்தனைகளையும் அச்சங்களையும் உருவாக்குவதில் மானுட சமூகமும் மானுட வரலாறும் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதைப் படம் நுட்பமாக உணர்த்துகிறது.
திரைப்படத்தின் மற்றொரு முக்கியமான அம்சம், ஊடகங்களின் பங்கு. ஒரு சாதாரணச் சம்பவம் செய்தியாக மாறியதும், அதன் இயல்பு மாறிவிடுகிறது. தனிப்பட்ட பிரச்சினையில் யாருக்கும் அதிக அக்கறை இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அது மத அடையாளத்தோடும், தேசிய உணர்வோடும் இணைக்கப்பட்டவுடன், பலரும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தொடங்குகிறார்கள். டோனியும் யாசரும் இனி இரண்டு தனிமனிதர்கள் மட்டுமல்ல; தத்தமது சமூகங்களின் பிரதிநிதிகளாக மாற்றப்படுகிறார்கள். அவர்களுடைய உணர்வுகளையும் விருப்பங்களையும் தாண்டி, மற்றவர்கள் அவர்களுக்காகப் பேசத் தொடங்குகிறார்கள்.
இவ்வாறு ஒரு மனிதனின் தனிப்பட்ட காயம் பொதுவெளியில் அரசியல் ஆயுதமாக மாற்றப்படுவது லெபனானில் மட்டுமல்ல, உலகமெங்கும் நிகழக்கூடிய ஒன்றுதான்.
மதம், இனம், மொழி, சாதி ஆகிய அடையாளங்கள் அரசியல் அதிகாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் சமூகங்களில், ஒரு சிறிய சம்பவத்தைக்கூடப் பெரும் மோதலாக மாற்றுவது எளிது. அந்த மோதலில் உண்மையைவிட உணர்ச்சிகளும், புரிதலைவிட வெறுப்பும் விரைவாகப் பரவுகின்றன.
அந்த மானுட வெறுப்பு எப்படி வேகமாகப் பரவுகிறது என்பதை நிதானமாக எடுத்துச் சொல்கிறது இந்தத் திரைப்படம்.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது இந்தியச் சமூகத்தின் முரண்பாடுகளையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. சாதி அடிப்படையிலான அவமதிப்புகள், மத அடையாளத்தின் பெயரால் நிகழும் வன்முறைகள், மொழி மற்றும் இன அடிப்படையிலான பாகுபாடுகள் எனப் பல பிரச்சினைகளில், ஒரு தனிமனிதருக்கு இழைக்கப்படும் அநீதி சமூகத்தின் ஆழமான அதிகார உறவுகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
அவமதிக்கப்பட்டவரிடம் பொறுமையைக் கோருவதும், அவமதித்தவரின் அதிகாரத்தைப் பற்றி மௌனம் காப்பதும் சமத்துவத்தை உருவாக்காது. அதேநேரத்தில், நீதியைத் தேடும் போராட்டம் புதிய வெறுப்பின் தொடக்கமாக மாறிவிடாமல் தடுப்பதும் அவசியம். இந்த இரு நிலைகளுக்கும் இடையே இருக்கும் சிக்கலான உறவையே நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது இந்தத் திரைப்படம்.
நீதிமன்றத்தில் யார் வென்றார்கள் என்பது மட்டும் இங்கே முக்கியமல்ல. ஒருவர் மற்றொருவரை ஏன் வெறுக்கிறார், அந்த வெறுப்பு எங்கிருந்து வருகிறது, அதைத் தொடர்ந்து வளர்ப்பதால் யாருக்கு ஆதாயம் கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். மனிதர்கள் ஒருவரை இன்னொருவர் எப்படிப் பார்க்கிறார்கள், எப்படிப் பேசுகிறார்கள், எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதை நினைவூட்டுகிறது இந்தத் திரைப்படம். வெறுப்பின் கடந்தகால வலிகளையும் வேதனைகளையும் மாற்ற முடியாமல் போகலாம்;
ஆனால் அந்த வலிகளையும் வேதனைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தாமல் இருப்பதற்கான பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அன்பின் வார்த்தைகள் அளவற்றதாக இருக்கும்போது ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் வெறுப்பின் வார்த்தைகளை?
பார்க்க வேண்டிய திரைப்படம். இந்தத் தொடரில் எழுத வேண்டிய திரைப்படம் என்று அன்பின் வார்த்தைகளால் வலியுறுத்திச் சொன்ன தோழர் அழகிரி உதயன் அவர்களுக்கு நன்றி சொல்லவும், அந்த வலியுறுத்தலை உங்களிடமும் உரிமையோடு கடத்துவதற்கும் கடமைப்பட்டிருக்கிறேன். சில காட்சிகள் கண்களைக் கலங்கச் செய்துவிடும், சில காட்சிகள் இதயத்தை உலுக்கிவிடும்.
கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com