Sambizanga: நீதிக்கான நீண்ட பயணம் | சினிமாவும் அரசியலும் 52

Sambizanga: நீதிக்கான நீண்ட பயணம் | சினிமாவும் அரசியலும் 52
Updated on: 
5 min read

இந்தத் திரைப்படத்தின் முதல் காட்சியில் சிறிதுநேரம் நிலைகுத்தி நின்றிருந்தேன். தெற்கு ஆப்ரிக்காவின் அங்கோலாவில் சாம்பிஸங்கா நகரத்தின் உழைக்கும் மக்கள், கல் உடைத்துக் கொண்டிருக்கும் காட்சியில் படத்தைத் தொடங்கியிருப்பார் இயக்குநர்.

அதே காலக்கட்டத்தில் முன்னும் பின்னுமாக ஐம்பது ஆண்டுகளை, கல்குவாரியில் கடுமையான உழைப்புக்கு ஒப்புக்கொடுத்த தாய், தந்தையின் வழிவந்தவன் என்கிற வகையில், நினைக்காமல் இருக்க முடியவில்லை, மலையை நகர்த்திய அந்த உழைப்பை!

இயக்குநர் சாரா மால்டோரோர் ஆப்ரிக்க அரசியல் சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவர். 1929இல் பிரான்ஸில் பிறந்த சாரா,ஆப்ரிக்காவின் காலனிய எதிர்ப்பு மற்றும் விடுதலைப் போராட்டங்களுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தவர்.

ஆப்ரிக்க மக்களின் விடுதலை, இனவெறி எதிர்ப்பு, பெண்களின் நிலை, தொழிலாளர்களின் வாழ்க்கை ஆகிய எல்லாமும் அவருடைய திரைப்படங்களில் முக்கியமான கருப்பொருள்களாக அமைந்தன. அந்த வகையில் அங்கோலாவின் விடுதலைப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்தத் திரைப்படம் அவரது மிக முக்கியமான படைப்பாகும்.

1972இல் வெளியான இந்தத் திரைப்படம், போர்த்துக்கீசிய காலனிய ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டத்தையும், பெண்களின் அரசியல் பங்களிப்பையும் வலிமையாகப் பதிவுசெய்தது. தொழில்முறை நடிகர்களுக்குப் பதிலாக உண்மையாகவே விடுதலை இயக்கங்களுடன் தொடர்புடையவர்களை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

மேலும், மிக முக்கியமாக ஆப்ரிக்காவில் முழுநீளத் திரைப்படத்தை இயக்கிய முதல் பெண் இயக்குநர் சாரா மால்டோரோர். அவரது சினிமா வெறும் அரசியல் பிரச்சாரமாக இல்லாமல், மனித உணர்வுகள், அன்றாட வாழ்க்கை, பெண்களின் அனுபவம், கவிதைநயம் ஆகியவற்றையும் அரசியலுடன் இணைத்தது. இதனால் மால்டோரோர் உலக அரசியல் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்றார்.

சாரா மால்டோரோர் இயக்கிய இந்தத் திரைப்படம், அங்கோலாவின் காலனிய எதிர்ப்பு விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்ட திரைப்படமாகும். இதற்கான திரைக்கதை மால்டோரோர், அங்கோலா அரசியல் சிந்தனையாளரும் MPLA தலைவருமான மரியோ பிண்டோ டி அண்ட்ராடெ, மவ்ரிஸ் போன்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

மேலும், ஜோஸ் லுவாண்டினோ வியெரா எழுதிய டோமிங்கோஸ் சேவியரின் நிஜ வாழ்க்கை என்கிற பெயரில் 1961இல் வெளியான குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.

போர்த்துக்கீசியக் காலனிய ஆட்சியின் கீழ் இருந்த அங்கோலாவின் அரசியல் சூழலே நாவலின் பின்னணியாகும். அங்கோலா மக்களின் அரசியல் உரிமைகளும் அடிப்படைச் சுதந்திரங்களும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

காலனிய அரசின் காவல்துறை, சிறை, கண்காணிப்பு, சித்திரவதை போன்றவற்றின் மூலம் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தியது. 1961இல் அங்கோலாவில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த முக்கியமான காலகட்டமாகும். இந்த வரலாற்று நெருக்கடியின் மத்தியில்தான் வியெரா தனது படைப்பை உருவாக்கினார்.

போர்த்துக்கீசிய மொழியில் எழுதியிருந்தாலும் அவரது எழுத்தின் உலகம் அங்கோலா மக்களின் வாழ்க்கையிலிருந்து உருவானது. அங்கோலாவின் உள்ளூர்ப் பேச்சுமொழி, சொற்கள், மக்களின் வாழ்வியல் அனுபவங்களைப் போர்த்துகீசிய இலக்கிய மொழிக்குள் கொண்டு வந்தவர் வியெரா. காலனிய ஆட்சிக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளில் தொடர்புடையதாகக் கருதப்பட்டதால் வியெரா கைது செய்யப்பட்டார். அவர் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறை அனுபவமும் காலனிய அடக்குமுறையும் அவரது எழுத்தின் அரசியல் உணர்வை மேலும் ஆழப்படுத்தின. அந்த ஆழத்தைத் திரைப்படத்தில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் மால்டோரோர்.

இயக்குநர் மால்டோரோரின் கணவர் மரியோ பிண்டோ டி அண்ட்ராடெ, அப்போது அங்கோலாவின் விடுதலை இயக்கமான MPLAவுடன் நெருங்கிய தொடர்புடைய முக்கிய அரசியல் தலைவராக இருந்தார். எனவே சாம்பிஸங்கா அவருக்கு வெறும் திரைப்படமாக அல்லாமல், அங்கோலா மக்களின் விடுதலைப் போராட்டத்துடன் நெருக்கமாக இணைந்த அரசியல் மற்றும் கலைப் படைப்பாக இருந்தது. திரைப்படத்தை அங்கோலாவில் படமாக்க முடியாத சூழலில், அண்டை நாடான காங்கோவில் ஏழு வாரங்களில் படமாக்கினார்.

இந்தத் திரைப்படம் போர்த்துக்கீசியக் காலனிய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற அங்கோலாவின் விடுதலைப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டது. ஆனால், வழக்கமான அரசியல் திரைப்படங்களைப் போல போர்க்களத்திலிருந்து தனது கதையைத் தொடங்குவதில்லை. புரட்சித் தலைவர்களை முன்னிறுத்துவதில்லை. அரசியல் முழக்கங்களால் திரையை நிரப்புவதில்லை. ஆனாலும்கூட ஒரு சக்திவாய்ந்த அரசியல் திரைப்படமாக மனதில் நிலைகுத்தி நின்றுவிடுகிறது இந்தத் திரைப்படம்.

அங்கோலாவின் சாம்பிஸங்கா நகரின் உழைக்கும் மக்கள் கல் உடைக்கும் காட்சியோடு தொடங்குகிறது திரைப்படம். கடுமையான உழைப்பாளியான டோமிங்கோஸ், அங்கோலாவின் விடுதலை இயக்கங்களோடு தொடர்பு இருப்பதாகக் கருதி, சந்தேகத்தின் பெயரில் காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறான்.

அவனுடைய மனைவி மரியா கைக்குழந்தையோடு அவனைத் தேடித் திரிகிறாள். அதிகாரத்தின் வாசலில் கணவனுக்காகக் காத்துக் கிடக்கிறாள். கைது செய்யப்பட்ட கணவனைத் தேடி அலையும் மரியாவின் பயணம் மெல்ல அங்கோலாவின் வரலாறாக விரிவடைகிறது.

அங்கோலா பல நூற்றாண்டுகளாகப் போர்த்துக்கீசியக் காலனிய ஆட்சியின் கீழ் இருந்தது. ஆப்ரிக்காவின் இயற்கை வளங்களும் உழைப்பும் காலனிய அதிகாரத்தின் பொருளாதார நலன்களுக்காகச் சுரண்டப்பட்டன. இந்தச் சுரண்டலுக்கு எதிராக இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல்வேறு விடுதலை இயக்கங்கள் உருவாயின. அவற்றில் முக்கியமான ஒன்றாக இருந்தது MPLA.

1961இல் தொடங்கிய ஆயுதப் போராட்டம், பின்னர் நீண்ட விடுதலைப் போருக்கு வழிவகுத்தது. இந்தப் பெரும் அரசியல் வரலாற்றின் மையத்தில் இயக்குநர் நிறுத்துவது டொமிங்கோஸ் சேவியர் என்கிற ஒரு சாதாரண மனிதனை.

ஓர் அரசியல் அமைப்பு மக்களின் வாழ்க்கையை எவ்வாறு ஆக்கிரமிக்கிறது என்பதை விளக்குவதற்கு இயக்குநர் பெரிய அரசியல் உரைகளைப் பயன்படுத்தாமல், ஒரு பெண் தனது கணவனைத் தேடி அலைவதை மட்டுமே காட்டுகிறார். அந்த அலைச்சலின் வழியாக, அதிகாரம் என்றால் என்னவென்பதை, காவல்துறையின் சீருடையில் பார்க்கிறாள் மரியா. எவ்வளவு முயன்று பார்த்தும் டொமிங்கோஸ் எங்கே இருக்கிறான் என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலையில் தவித்துப் போகிறாள் மரியா.

காலனிய ஆட்சி என்பது ஒரு நாட்டின் அரசியல் அதிகாரத்தை மட்டும் கைப்பற்றுவது அல்ல. அது மக்களின் அன்றாட வாழ்க்கையையே கட்டுப்படுத்துவது. யார் பேச வேண்டும், யார் மௌனமாக இருக்க வேண்டும், யார் வேலை செய்ய வேண்டும், யார் கைது செய்யப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம். இந்தத் திரைப்படம் அந்த அதிகார இயந்திரத்தை மிக அருகிலிருந்து நமக்குக் காட்டுகிறது.

மறுபுறம், சிறைக்குள் டொமிங்கோஸ் விசாரணைக்கு உள்ளாகிறான். விடுதலை இயக்கத்தில் இருப்பவர்களின் பெயர்களைக் கேட்கிறார்கள். மிரட்டுகிறார்கள். சித்திரவதைச் செய்கிறார்கள். அவனிடம் இருந்து தகவல்களைப் பெற முயற்சிக்கிறார்கள். ஆனால் அவன் பேச மறுக்கிறான். சித்ரவதைகளின் மூலமாக அவனுடைய உடலை அதிகாரம் கட்டுப்படுத்த முடிகிறது. அவனுடைய சிந்தனையை அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை!

பொதுவாகப் புரட்சியின் வரலாற்றை எழுதும்போது பெண்கள் பெரும்பாலும் பின்னணிக்குத் தள்ளப்படுவது வழக்கம். ஆண்கள் போராடுகிறார்கள்; பெண்கள் காத்திருக்கிறார்கள் என்கிற பழைய வரலாற்றுப் பார்வை பல இடங்களில் தொடர்கிறது. சாம்பிஸங்கா அந்தப் பார்வையை நிராகரிக்கிறது. மரியா காத்திருக்கவில்லை. அவள் நடக்கிறாள். தேடுகிறாள். கேட்கிறாள். அதிகாரத்தின் தடைகளைத் தாண்டுகிறாள்.

கணவனைப் பற்றிய அவளின் தனிப்பட்ட அக்கறை, சமூகத்தின் மீதான அக்கறையாக மாறுகிறது. தனது வீட்டில் நடந்த அநீதியைப் புரிந்துகொள்ளத் தொடங்கியவள், அது தனது வீட்டின் பிரச்சினை மட்டும் அல்ல என்பதை உணர்கிறாள். இதுதான் அரசியல் விழிப்புணர்வின் ஆரம்பம்.

ஒரு பெண்ணின் தனிப்பட்ட அனுபவம் சமூக உணர்வாக மாறுகிறது. தனக்கான துயரம், பொதுவான துயரத்தின் ஒரு பகுதியாக இருப்பதை அவள் புரிந்துகொள்ளத் தொடங்குகிறாள். அந்தப் புரிதல்தான் எதிர்ப்பின் முதல் விதை.

திரைப்படத்தின் தலைப்பான சாம்பிஸங்காவும் சாதாரணமான இடப்பெயர் அல்ல. லுவாண்டாவின் அந்தப் பகுதி அங்கோலாவின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. 1961ஆம் ஆண்டின் காலனிய எதிர்ப்பு எழுச்சிகளுடன் தொடர்புடைய அந்த நிலப்பரப்பு, பின்னர் அங்கோலாவின் விடுதலை வரலாற்றின் நினைவிடமாக மாறியது. சாரா மால்டோரோவின் இயக்கத்தில் இன்னொரு முக்கியமான அம்சம் — அவர் புரட்சியை அழகுபடுத்துவதில்லை.

புரட்சியாளர்களை வீரர்களாக மட்டுமே காட்டுவதில்லை. காலனிய எதிர்ப்பை சினிமா காட்சிப்படுத்தும் போது உருவாகக்கூடிய சாகச உணர்வைத் தவிர்த்து. அதற்குப் பதிலாக, வறுமை, பயம், காத்திருப்பு, சந்தேகம், சோர்வு, அன்றாட உழைப்பு ஆகியவற்றை முன்வைக்கிறார். இதனால் சாம்பிஸங்கா ஒரு ‘புரட்சித் திரைப்படம்’ என்பதைவிட, புரட்சி உருவாகும் சமூகத்தின் திரைப்படமாக மாறுகிறது.

டொமிங்கோஸ் இறுதியில் சிறையில் சித்திரவதைக்குள்ளாகி உயிரிழக்கிறான். ஆனால், அவனுடைய மரணம் திரைப்படத்தின் முடிவாகத் தோன்றவில்லை. அது ஒரு தொடக்கமாகத் தோன்றுகிறது.

ஏனெனில் ஒரு மனிதனைக் கொன்றுவிடுவதன் மூலம் ஓர் அரசியல் சிந்தனையை அழித்துவிட முடியாது. மரியாவின் பயணம் அதற்குச் சாட்சியாக நிற்கிறது. அவள் தனது கணவனைத் தேடிச் சென்றாள். அந்தத் தேடலில் அவள் கண்டறிந்தது தன்னைச் சுற்றியிருந்த உலகின் அரசியல் உண்மைகளை.

இதனால்தான் சாம்பிஸன்ங்காவை ஒரு காதல் அல்லது குடும்பத் துயரத்தின் திரைப்படமாகப் பார்க்க முடியாது. இது ஒரு பெண்ணின் அரசியல் விழிப்புணர்வின் திரைப்படம். அதே நேரத்தில், காலனியத்துவத்துக்கு எதிரான மக்கள் எழுச்சியின் திரைப்படம். மேலும், ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தொழிலாளர்களும் பெண்களும் வகித்த பங்கின் திரைப்படம்.

“நான் ஒரு அரசியல் பிரச்சாரப் படத்தை உருவாக்க விரும்பவில்லை. மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களின் உணர்வுகளையும் குறிப்பாக ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து விடுதலைப் போராட்டத்தைச் சொல்ல விரும்பினேன். சாம்பிஸங்கா என்பது ‘ஒரு புரட்சியைப் பற்றிய படம்’ என்பதைக் கடந்து, ‘புரட்சியை உருவாக்கும் மனிதர்களைப் பற்றிய படம்’ என்பதே அதன் தனிச்சிறப்பு என்று சொல்லும் இயக்குநரின் வார்த்தைகளை எந்த விதத்திலும் நிராகரிக்க முடியாது.

இப்படியாகத் திரைப்பட இயக்குநர்கள் எவ்வளவு சமூகப் பொறுப்புள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது, கொஞ்சம்கூடச் சமூகத்தின் மீதான அக்கறையோ பொறுப்போ இல்லாதவர்களைக் கோபம் பெருக்கடுக்க நினைக்காமல் இருக்க முடியவில்லை.

கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்

தொடர்புக்கு: writer.josephraja@gmail.com

Sambizanga: நீதிக்கான நீண்ட பயணம் | சினிமாவும் அரசியலும் 52
The Light Thief: மக்களுக்காக மின்சாரத்தைத் திருடும் நாயகன் | சினிமாவும் அரசியலும் 51

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in