‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில் சாப்ளின்
ஒரு கலைஞன் எப்போது உன்னதமான கலைஞனாக மாறுகிறான் என்றால், தன்னுடைய காலத்தில், கண்களுக்கு முன்னால் நடந்துகொண்டிருக்கும் மானுட அவலங்களுக்கு எதிராகத் தன்னுடைய கலையைப் பயன்படுத்தும்போதுதான். அப்படியொரு மானுட அவலம் ஹிட்லர் எனும் சர்வாதிகாரியால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தபோது, அந்தச் சர்வாதிகாரிக்கு எதிராக ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்கிற மகத்தான படைப்பை எடுத்து வைக்கிறார் சாப்ளின்.
ஒரு மானுட அவலத்தைக் கணப்பொழுதுகூடப் பார்க்கச் சகிக்காமல் ஒருவனுடைய இதயம் துடியாய்த் துடிக்கிறது என்றால், அந்த இதயம் ஒரு கலைஞனுடைய இதயம் என்று புரிந்துகொள்ள வேண்டும். சாப்ளினின் இதயம் அப்படிப்பட்டதுதான். இந்த உலகம் இத்தனை காலம் கழித்தும் சாப்ளினைச் சும்மா ஒன்றும் கொண்டாடவில்லை!
ஆம், தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அந்தத் திரைப்படத்தை உருவாக்கிய சாப்ளினைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இரண்டாம் உலகப்போரையும், அந்தப் போருக்குக் காரணமாக இருந்த சர்வாதிகாரி ஹிட்லரையும், கொடிய விஷக் கருத்துகள் கொண்ட அவருடைய நாஜி கட்சியையும் புரிந்துகொள்ள வேண்டும்.
மனித உயிர்களைக் காவுகொண்ட இரண்டாம் உலகப் போர், 1939-இல் தொடங்கி 1945இல் முடிந்தது. இந்தக் கொடுமையான காலகட்டத்திற்கு நடுவில் 1940-இல் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்தை வெளியிட்டார் சாப்ளின். அதுவும் யாரைக் கண்டு இந்த உலகம் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறதோ, அவரையே எதிர்த்துத் திரைப்படம் எடுத்தார்.
‘தி கிரேட் டிக்டேட்டர்’ உருவாகிக் கொண்டிருந்த காலத்திலேயே சாப்ளினோடு இருந்தவர்கள் கண்டித்தார்கள். படத்தை வெளியிடுவது கடினமாக இருக்கும் என்றார்கள். தணிக்கையைத் தாண்டி வருவது சாத்தியமேயில்லை என்கிறார்கள். ஆனால், அன்று மட்டுமல்ல என்றுமே, ஒரு நல்ல கலைஞன் தனக்குச் சரியெனப்பட்டதை யார் சொன்னாலும், எப்படிச் சொன்னாலும் ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டான். எல்லாரும் எதிர்பார்த்தது போலவே திரைப்படம் பிரச்சினைகளைச் சந்தித்தது.
இன்னொரு பக்கம் சாப்ளின் எதிர்பார்த்தது போல மக்கள் திரைப்படத்தைக் கொண்டாடித் தீர்த்தார்கள். ஜெர்மனியில் திரைப்படம் தடைசெய்யப்பட்டது. ஜெர்மனி ஆக்கிரமித்து வைத்திருக்கும் நாடுகளிலும் திரைப்படம் தடைசெய்யப்பட்டது. சாப்ளின் எதற்கும் கலங்கவில்லை. தி கிரேட் டிக்டேட்டரின் உயரம் என்னவென்று அவருக்கு நன்றாகப் புரிந்துவிட்டது.
உலக சினிமா வரலாற்றில் தி கிரேட் டிக்டேட்டரின் இடமென்பது நீங்கள் எந்த உயரத்தை நிர்ணயித்தாலும், அந்த உயரத்திற்கும் உயரமானதுதான். இன்றுவரையிலும் பாசிசத்திற்கு எதிரான மிக முக்கியமான திரைப்படமென்றால் அது கிரேட் டிக்டேட்டர்தான். மிகச்சிறந்த அரசியல் நையாண்டி திரைப்படம் என்றால், அது கிரேட் டிக்டேட்டர்தான்.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மனித உரிமை நிகழ்வுகளிலும் ஐக்கிய நாடுகள் சபையின் கருத்தரங்குகளிலும் போருக்கு எதிரான பிரகடனமாக, அமைதியையும் அன்பையும் வலியுறுத்தும் திரைப்படமாக சாப்ளினின் தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படம் இன்றுவரையிலும் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் திரையிடப்படும்.
ஏன் தி கிரேட் டிக்டேட்டர் இப்படிச் சாகாவரம் பெற்றிருக்கிறது என்கிற கேள்வி எழுகிறதா? பைபிள் கதைகளில் தாவீதின் கதை உங்களை வெகுவாகக் கவர்ந்துவிடும். ஏனென்றால் ஆஜானுபாகுவான கோலியாத்தை எதிர்க்கக் கையில் கூழாங்கல்லோடும், இதயத்தில் துணிவோடும் துணிந்து நின்றார் தாவீது. மிகப்பெரிய ரோம சாம்ராஜ்ஜியத்தை, கொஞ்சம் அடிமைகளைத் திரட்டி அடிவயிற்றைக் கலங்கச் செய்தார் ஸ்பார்ட்டகஸ்.
அதுபோல உலகமே பார்த்துப் பயந்து கொண்டிருந்த ஹிட்லரை எதிர்த்து, யூதர்கள் தாழ்ந்த இனமென்று சொல்லி, மரண முகாம்களில் விஷவாயு செலுத்தி, இன்னும் பலவகைகளில் பல லட்சம் யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லரை எதிர்த்து, மாற்றுத்திறனாளிகள் தேசத்திற்குப் பயனற்றவர்கள் என்று சொல்லி மாற்றுத்திறனாளிகளைக் கொன்று குவித்த ஹிட்லரை எதிர்த்து, போலந்தின் மீது போர் தொடுத்தது மட்டுமல்லாமல் பல லட்சம் போலந்து மக்களைக் கொன்றுகுவித்த ஹிட்லரை எதிர்த்து, வாழத் தகுதியில்லாதவர்கள் என்று சொல்லி ரோமா என்றழைக்கப்படும் ஜிப்ஸி இன மக்களைக் கொன்றுபோட்ட ஹிட்லரை எதிர்த்து, தன்னுடைய கேமராவோடு வந்துநின்றார் சாப்ளின்.
படமெடுப்பதே சவாலான செயலாக இருக்கும்போது, அவனை ஒரு பைத்தியக்காரனைப் போலச் சித்தரித்து, அவனை ஒரு முட்டாளாகச் சித்தரித்து திரைப்படமெடுப்பதற்கு எவ்வளவு மனவலிமை இருந்திருக்க வேண்டும்! ‘அதிகாரம் சக மனிதர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும்போது கலை அதற்கு எதிராகப் பேச வேண்டும்’ என்று உரக்கச் சொன்னதால்தான் தி கிரேட் டிக்டேட்டர் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
யூதராக, சாதாரண முடிதிருத்தும் தொழில் செய்கிறவராக நடித்திருக்கும் சாப்ளின், ஒருபக்கம் நாஜிகளுடைய ஆட்சியின் கீழ் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் யூதர்களின் அவல வாழ்க்கையைத் தன்னுடைய வழக்கமான பாணியில் வெளிப்படுத்தினார். அவருடைய காதலியான ஹென்னாவும், அங்கு ஒரு சிறு கூட்டமாக நிம்மதியான வாழ்க்கைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் யூதர்களின் பதற்றம் நிறைந்த கண்களும் திரைப்படம் பார்த்து முடித்த பின்பும் நம்மைக் கலங்கச் செய்துகொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் ஹிட்லராக நடித்திருக்கும் சாப்ளின் உண்மையிலேயே இப்படிச் செய்ததற்குப் பதிலாக அவனை நடுரோட்டில் நிறுத்தி கைவலிக்க கைவலிக்க சவுக்கால் அடித்திருக்கலாம். பூமிப்பந்தைத் தூக்கிப் போட்டு விளையாடும் காட்சியாகட்டும், பைத்தியக்காரனைப் போல அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்கும் காட்சிகளாகட்டும், சாப்ளின் மேதை என்பதை எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும்.
‘ஹிட்லரும் நானும் ஒரேமாதிரி மீசை வைத்திருந்தோம். மக்கள் என்னை ஹிட்லரின் நகல் போலவே பார்க்கத் தொடங்கினார்கள். ஆனால், நானோ அந்த தோற்றத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த முடிவுசெய்தேன்.’ ‘அனைவரும் பயந்தார்கள், ஹிட்லரைக் கேலி செய்ய, விமர்சிக்க யாரும் முன்வரவில்லை. ஆனால், அதைத்தான் நான் செய்ய விரும்பினேன்’ என்று தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படம் பற்றித் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் சாப்ளின் ஒரு வருத்தத்தையும் பதிவு செய்தார்,
‘இந்தத் திரைப்பட வேலைகளைத் தொடங்கிய போது நாஜிகள் செய்த முழுமையான கொடூரங்களை நான் அறிந்திருக்கவில்லை, ஒருவேளை தெரிந்திருந்தால் இப்படிப்பட்ட அரசியல் நையாண்டி பாணியில் உருவாக்கியிருக்க மாட்டேன்’ என்பதுதான் அந்த வருத்தம்.
இன்னும் இந்தத் திரைப்படத்தைக் குறித்த முக்கியமான செய்தி, சாப்ளினின் மகத்தான மெளனப் படங்களிலிருந்து பேசத் தொடங்கிய முதல்படம் தி கிரேட் டிக்டேட்டர்தான். முதல் பேச்சை நாம் கன்னிப் பேச்சென்று சொல்வோம். சாப்ளினின் முதல் பேச்சை அப்படிச் சொல்ல முடியாது. ஹிட்லரின் அதிகார நாற்காலிக்கு அடியில் வைக்கப்பட்ட கன்னிவெடி. திரைப்படத்தின் இறுதியில், ’என்னை மன்னித்து விடுங்கள், நான் பேரரசனாக விரும்பவில்லை’ என்று தொடங்கும் அற்புதமான உரை, சாப்ளின் உன்னதமான, உண்மையான கலைஞன் என்று உணர்த்தக்கூடியது.
இந்த எண்பது வருடங்களில் அந்த உரையை இந்த உலகத்தின் லட்சோப லட்சம் உதடுகள் உச்சரித்திருக்கும். ஒவ்வொரு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு, ஒவ்வோர் இதயத்திலும் கல்வெட்டைப்போலப் பதிக்கப்பட்டிருக்கும்.
வெறுப்பிற்கு எதிராக அன்பைப் போதிக்கும் நீண்ட அந்த உரையில் சாப்ளின் சொல்வார், “நம்பிக்கை இழக்காதீர்கள். நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது வேறொன்றுமில்லை. பேராசையின் விளைவுதான் அது, மனித முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களின் கசப்புணர்வுதான் அது. மனிதர்களின் வெறுப்பு கடந்துபோகும். சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள். மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும்” என்கிற சாப்ளினின் விருப்பம் பூமிப்பந்தின் ஒவ்வொரு கண்டத்திலும், கண்டத்திலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் திரும்ப வேண்டுமென்றே விரும்புகிறேன்.
ஒரு நேர்காணலில், “அந்த மேடைக்காட்சியும் அந்த உரையும் வெறும் நடிப்பல்ல, வெறும் வார்த்தைகளல்ல, என் இதயத்தில் இருந்த கோபமும் மனித நேயமும் நேரடியாக வெளியே வந்த தருணம்” என்று சாப்ளின் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை இதுவரையிலும் நீங்கள் தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தைப் பார்க்கவில்லையென்றால் உடனே பார்த்துவிடுங்கள். இதுவரையிலும் உங்கள் பிள்ளைகளுக்குக் காட்டாமல் இருந்தீர்களென்றால் இப்போதே காட்டிவிடுங்கள்.
ஒரு கலைஞனாகப் போருக்கு எதிராகவும், மானுட அன்பை வலியுறுத்தியும் தன்னால் முடிந்ததைச் செய்துவிட்டார் சாப்ளின். ஒரு கலைஞன் அவ்வளவு செய்ததே ஆச்சரியம். அதைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையிலான சோவியத்தின் செஞ்சேனை ஹிட்லரையும் நாஜிகளையும், பாசிசத்தையும் வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்துக்கட்டியது என்று சொல்லி முடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
- கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர் | தொடர்புக்கு: writer.josephraja@gmail.com