இந்து டாக்கீஸ்

சாத்தான் - தி டார்க்: திரைப் பார்வை - பயத்தின் புதிய முகவரி

திரை பாரதி

மேற்குத் தொடர்ச்சிமலை கிராமங்களில் கோரக்கர், காடர், காணி, தோடர், இருளர், காட்டு நாயக்கன் உள்பட 40க்கும் அதிகமான பழங்குடி சமூகங்கள் வசித்து வருகின்றனர். இன்று இவர்களில் கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் தன்னிறைவு அடைந்த பெரும்பாலான குடும்பங்கள் சமவெளிகளை நோக்கியும் மாநகரம் நோக்கியும் குடிபெயர்ந்துவிட்டனர்.

அதேநேரம், பாரம்பரியச் சொத்துரிமை கொண்ட பழங்குடிகளும் மலையகத்தில் தேயிலை உள்ளிட்ட தோட்டப் பயிர்களில் விவசாயத் தொழிலாளர்களாக இருப்பவர்களும் சொந்த மண்ணைப் பிரிந்து வெளியேற மறுத்து பூர்வீக இடங்களிலேயே வசித்து வருகின்றனர். தவிர, நீலகிரி, கொடைக்கானல் போன்ற என மலையக நகரியங்கள் சுற்றுலாத் தொழிலில் சிறந்த விளங்குவதும் அவர்களது பொருளாதாரத்தைச் சிதையாமல் வைத்துள்ளன.

          

ஆனால், சாலை, ஆரம்பச் சுகாதார நிலையம், ஓராசிரியர் பள்ளிகள் கூட இல்லாத உள்ளடங்கிய மலைக் கிராமங்களும் இன்னும் இருக்கவே செய்கின்றன. இதுபோன்ற கிராமங்களைத் தேடிச் சென்று கல்வி, மருத்துவச் சேவை செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பழங்குடிகளை பொதுச் சமூகத்துடன் இணைத்திருக்கிறார்கள். பழங்குடிகளின் முன்னேற்றத்தில் ஆங்கிலேய ஆட்சியில் தொடங்கி கிறிஸ்தவ மிசனரிகளின் பங்கும் கணிசமாக இருப்பதை மறுக்க முடியாது.

நிலைமை இப்படியிருக்கும்போது, பழங்குடிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படங்களில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ’ஜெய்பீம்’, ‘கெவி’ போன்று போதிய புரிதலோடும் தரமான திரைமொழியிலும் வெளியாகும் படங்கள் குறைவே. ஆனால், தெரிந்தே ‘கும்கி 2’ போல் பழங்குடிகளைக் கொச்சைப்படுத்தும் படங்களும் வந்துவிடுகின்றன.

தமிழகப் பழங்குடிகள் பெரும்பாலும் இயற்கை மற்றும் முன்னோர் வழிபாடு செய்கின்றனர். இறந்தவர்களைப் புதைத்து அந்த இடத்தில் மரக்கன்று நடுவதையும் அது மரமாக வளர்ந்தபிறகு அந்த மரத்தையே இறந்தவராக நினைத்து வழிபடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். ஆவி வழிபாட்டை (Animism) பின்பற்றும் ஒரு சில தமிழ்ப் பழங்குடிகளும் இன்னும் இருக்கிறார்கள். இதையே தன்னுடைய கதையின் கருவாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு ஒரு ‘பேராநார்மல் நேட்டிவிட்டி ஹாரர் த்ரில்லர்’ படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார் அறிமுக இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம்.

அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர்.

ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார்.

இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.

சிக்கலும் சிடுக்குகளும் கொண்ட ஒரு கதையை, கிறிஸ்தவ நம்பிக்கையை மட்டம்தட்டிக்கொண்டே சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறார் இயக்குநர். யாரைச் சந்தோஷப்படுத்த இயக்குநர் இந்த அணுகுமுறையைக் கையிலெடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

என்றாலும் தரமான ‘தயாரிப்பு வடிவமைப்பு’டன் கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்ற விதமும் பின்னணி இசை, ஒளிப்பதிவு, நடிகர்கள் தேர்வு, நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம், கலை இயக்கம், ஒப்பனை, எடிட்டிங் என ஒரு நேட்டிவிட்டி பேராநார்மல் ஹாரர் த்ரில்லர் படத்துக்கு இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களையும் தரமாக ஒருங்கிணைப்பு செய்திருக்கிறது இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் தலைமையிலான படக்குழு.

ஐராவின் அம்மாவாக வரும் மோனாவின் நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம். அவரது பேரா நார்மல் குணவியல்புகளை படிப்படியாகச் சித்தரித்துள்ள காட்சிகள் குலைநடுங்க வைக்கிறன. ஐராவும் சரி எஃப்ஜேவும் சரி, படத்தில் வரும் எட்வர்ட், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட அனைத்துத் துணைக் கதாபாத்திரங்களில் வருபவர்களும் சரி, இயக்குநர் கேட்டதைக் கொடுத்திருக்கிறார்கள். பிளாஷ் பேக் காட்சியில் வரும் சாந்தினியின் நடிப்பும் மிரள் வைக்கிறது.

திரைக்கதையில் அடுக்கப்பட்டுள்ள ஹாரர் காட்சிகளில் அவ்வளவாக ஜம்ப் ஹாரர்கள் இல்லையென்றாலும் ராஜேஷ் சிவனின் ஒலி வடிவமைப்பில் உருவான சத்தங்கள் பைத்தியம் பிடிக்க வைக்கின்றன. அஸ்வின் கிருஷ்ணாவின் பின்னணி இசையும் பாலா ஜி.ராமசாமியின் ஒளிப்பதிவும் சரியான கலவையில் பிணைந்துகொள்கின்றன.

சாந்தினி வரும் பிளாஷ் பேக் காட்சி, போஸ்ட் மார்டம் நடக்கும் காட்சி, பிணவறையில் மதர் சுப்பீரியரின் சடலத்தைக் கண்டு எஃப்.ஜே. அலறும் காட்சி என முக்கியமான ஹாரர் காட்சிகளும், சாத்தானின் தூண்டுதலால், நாயகியின் அம்மா, நாயகி, நாயகன், நாயகனின் நண்பன் எனப் பலரும் செய்யும் செய்கைகளும் படம் நெடுகிலும் அடிவயிற்றில் அட்ரினலின் ஹார்மோனை சுரக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன.

தர்க்க ரீதியாக ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தாலும் முதல் பாதியில் வரும் பள்ளிக் காதல் காட்சிகளை அளவாக வைத்து, அடுத்தகட்டத்தை நோக்கி விரையும் திரைக்கதையை இன்னொரு பாகத்துக்குத் தள்ளியிருக்கிறார்கள். படத்தில் இடம்பெற்றுள்ள ஹாரர் ஒலிகள், பயமுறுத்தும் பின்னணி இசை, மனிதர்களின் பேராநார்மல் நடவடிக்கைகளைப் பார்ப்பதில் இருக்கும் ஒவ்வாமை கொண்டவர்கள் யோசித்து படத்துக்குச் செல்லுங்கள். மற்றவர்களுக்கு இது அட்டகாசமான ஹாரர் வேட்டை.

புத்தாயிரத்துக்குப் பிறகான தரமான ஹாரர் த்ரில்லர் வகையில் ‘பீட்சா’வில் தொடங்கி ‘பரமசிவன் பாத்திமா’ வரை தரமாகப் பயமூட்டிய படங்களின் வரிசையில் வந்து சேர்ந்துகொள்கிறது இந்த ‘சாத்தான் - தி டார்க்’.

SCROLL FOR NEXT