சில சமயங்களில் விலையுயர்ந்த பட்டாடை பெறாத கவனக் குவிப்பை, ஒரு நேர்த்தியான, எளிய கைத்தறி சேலை பெற்றுவிடும். அப்படி, கோடிகளைக் கொட்டி பார்வையாளர் நேரத்தை வீணாக்கும் சில வணிக ஜிகினா திரைப்படங்களுக்கு நடுவே, அழுத்தமான எழுத்திலும் நேர்த்தியான உருவாக்கத்திலும் வெளிவந்துள்ள ‘சர்வம் மாயா’ மலையாளத் திரைப்படம் பார்வையாளர்களின் கவனயீர்ப்பைப் பெற்று, வணிக வெற்றியும் பெற்றுள்ளது.
ஒரு வசதியான வைதீகச் சடங்குகள் செய்யும் நம்பூதிரி குடும்பத்தில் பிறந்திருந்தாலும், இசையில் நாட்டம் கொண்டு அகப் போராட்டங்களுடன் அலைகிறான் கதாநாயகன் பிரபேந்து. சூழ்நிலைகளின் காரணமாகத் தன் குடும்ப தொழிலான புரோகிதத்துக்கு அவன் திரும்ப நேரிடுகிறது.
அப்போது, அவன் வாழ்க்கையில் ஒரு விவரிக்க முடியாத நபர் குறுக்கிடுகிறார். அதனால் விளையும் குழப்பங்கள், சிக்கல்கள், அவன் காதல் வாழ்வு, தந்தையுடனான முரண்பாடுகள் என்ன ஆனது என்பது கதை. இந்த எளிய கதையைச் சிரிக்க சிரிக்க அழகான தோரணமாகத் தொகுத்திருக்கிறார் எழுத்தாளர், படத்தொகுப்பாளர், இயக்குநர் அகில் சத்யன்.
ஓர் ஆவியை வைத்துக் கதை சொல்வது மலையாள சினிமாவுக்குப் புதிது அல்ல. ஆனால், இக்கதை ஆவியின் கதாபாத்திரத்தை ஜென் இசட் தலைமுறை பெண்ணாக வடிவமைத்த விதம் முற்றிலும் புதுமையாக இருந்தது. ஒரு மெல்லிய நகைச்சுவை படமாகத் தொடங்கி திகில் படம் போல பயணித்து, பின்னர் இறுதியில் முழுக்க முழுக்க உணர்வுப்பூர்வமான ஒரு திரைப்படமாக வெவ்வேறு களங்களில் பயணிக்கிறது.
அகச்சிக்கல்கள் கொண்ட நாயகன் பிரபேந்துவாக நீண்ட நாட்களுக்குப் பின் பழைய நிவின் பாலியை ரசித்துப் பார்க்க முடிகிறது. தொடர் தோல்விகளுக்குப் பிறகு நிவினுக்கு இது பெரிய ஆசுவாசம். தன் பெயரும், இறந்த விதமும் தெரியாத நவீன ஆவியாக வரும் ரியா ஷிபு மலையாள சினிமாவுக்கு ஒரு பிரமாதமான துள்ளல் அறிமுகம்.
நண்பனாக வரும் அஜூ வர்கீஸ் வரும் காட்சிகளெல்லாம் கைதட்டல் பெறுகிறார். நாயகன் நிவின் பாலி, ரியாவுக்கும் அஜு வர்கீஸுக்கும் விட்டுக்கொடுத்துத் திரை வெளியும் தந்து அவர்களை முன்னிலைப்படுத்தி இருப்பது சிறப்பு. காதலியாக வரும் பிரியா முகுந்தனும் தன் பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
ஒரு நல்லுணர்வு திரைப்படம் தானே என்கிற அலட்சியம் இல்லாமல் தயாரிப்பு வடிவமைப்பை மிகுந்த கவனத்துடன், தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்துத் தயாரித்திருப்பது மிகவும் குறிப்பிட வேண்டியது. உதாரணமாக நம்பூதிரியின் அரண்மனை போன்ற வீடு, கலை இயக்குநர் ராஜீவின் வடிவமைத்த ஓர் அரங்க நிர்மாணம் என்று தெரிய வருவது ஆச்சரியம்.
மேலும், இப்படத்தை வெறுமனே ஒரு மலினமான திகில் நகைச்சுவையாக இல்லாமல் ஓர் இசை சார்ந்த கதையாக மாற்றிய பெருமை இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனை சேரும். வெறுமனே எழுத்து இயக்கம் அகில் சத்யன் என்று போட்டுக் கொண்டு "எ ஜஸ்டின் பிரபாகரன் மியூசிக்கல்" என்று டைட்டில் கார்டு போடும் அளவுக்கு இசை பிரமாதமாக இப்படத்திற்கு உதவியுள்ளது. சரண் வேலாயுதத்தின் துருத்தாத ஒளிப்பதிவு அழகு.
என்னதான் சினிமா காட்சி ஊடகம் என்று சொல்லப்பட்டாலும் ஒரு மிகச்சிறந்த ஃப்ளாஷ்பேக்கை காட்சியாக அல்லாமல் ஒரு வசனமாகச் சொல்லும் போது அதன் உணர்வு இன்னும் ஆழமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தப்படுகிறது. நாயகன் பிரபேந்து தான் ஏன் தன் தந்தையுடன் முரண்படுகிறார், தான் கடவுள் நம்பிக்கையை விட்டது ஏன் என்று நெகிழ்ந்து கூறும் சிங்கிள் டேக் காட்சி ஆகச் சிறப்பு.
இயக்குநரே படத்தொகுப்பாளராகப் பங்களிக்கும் படங்கள் தனித்து ஒளிர்வது இப்படத்திற்கும் பொருந்தும். தேவையற்ற காட்சிகள், துப்பாக்கி, ரத்தம், வெடிகுண்டு, வில்லன் என ஏதும் இல்லாமல் குடும்பத்துடன் காணக்கூடிய ஓர் எளிய படமாக அமைந்திருப்பது வெகு சிறப்பு.
திரைப்பட இயக்குநர்களில் தந்தையும் மகனும் ஒரே ஆண்டில் வெவ்வேறு வெற்றிப் படங்கள் வெளியிடுவது என்பது ஓர் அபூர்வ நிகழ்வாகும். இப்படி ஒரு நிகழ்வு 2025 மலையாள சினிமாவில் நிகழ்ந்துள்ளது ஆண்டின் தொடக்கத்தில் சத்யன் அந்திகாடின் ‘ஹிருதயபூர்வமும்’. ஆண்டின் இறுதியில் அவர் மகன் அகில் சத்யனின் ‘சர்வம் மாயாவும்’ வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன.
மெல்லுணர்வுகள் கொண்ட நல்ல கதையும் அழகிய கதாபாத்திரங்களும் உரையாடல்களும் கொண்டு நெய்யப்பட்ட ஒரு நேர்த்தியான கைத்தறி சேலை போல இப்படம் நெய்யப்பட்டிருக்கிறது. அதுவே அதன் அடையாளமும், வெற்றியும் கூட.