இந்து டாக்கீஸ்

ரசவாதம் திரைக்கதை! | திரை நூலகம்

திரை பாரதி

வெகு மக்களுக்குப் பிடித்துப்போய்விடும் வெற்றிகர மான மிடில் சினிமாக்களைத் தந்துவரும் புத்தாயிரத்துக்குப் பிறகான இயக்குநர்களின் பட்டியல் இருபதைத் தாண்டாது. இவர்களில் பலரும் சினிமா என்கிற ‘கிராஃப்ட்’டை ‘டெம்பிளேட்’டுக்குள் அடைத்து வெற்றி கொடுக்கக் கூடியவர்கள். ஆனால், சாந்தகுமார் போன்ற வெகுசிலரை மட்டுமே ‘கிரியேட்டர்’கள் என்று துணிந்து கூறலாம்.

அவர்கள் தங்களுடைய அசலான பாணியைப் பிடிவாதமாக நேசித்து அதைத் தொடர்ந்து பயிற்சி செய்பவர்கள். அவரைப் போன்றவரின் படங்களில்தான், தமிழர்களின் அசலான, சமகால வாழ்க்கை ஒரு சிற்றோடைபோல சலசலக்கத் தொடங்கி ஒரு காட்டாறாக வேகமெடுத்துப் பாய்வதைக் காணமுடியும். இவருடைய ‘மௌன குரு’வும் ‘மகாமுனி’யும் இன்னும் விவாதிக்கப்படும் படங்கள்.

          

சாந்தகுமாரின் கதாபாத்திரங்கள் கொண்டிருக்கும் அகச் சிக்கல்கள் சமூகத்துடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருப்பவை. அவருடைய கதாபாத்திரங்களின் அகச் சிக்கல், அதற்குக் காரணமாக இருக்கும் கடந்த கால வாழ்க்கை, சமகாலச் சமூகநிலை உருவாக்கும் சிதிலங்கள், அதன்வழி உருவாகும் கதாபாத்திரங்களின் உள்முரண்கள் முடிவை நோக்கி நகரும் தருணங்கள் என, இதுதான் இந்த நிலத்தின் உண்மையான சினிமா என உணர வைப்பதுடன் மிக உயர்ந்த திரை அனுபவத்தையும் கொடுக்கும். அப்படியொரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுத்த படம் 2024இல் வெளியான ‘ரசவாதி’.

தன்னுடைய நிலத்தின் சமூக வாழ்க்கையை அவர் சித்தரிக்கும்போது, அரசியல் - சமூக நேர்மை, தன் திரை மொழியில் மென்மேலும் புதுமை (Aesthetic innovations in his own film language) ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களையும் ஒன்றோ டொன்று அவர் பிணைக்கும் பாணி சுவாரசியமான கதை சொல்லலாக மாறிவிடுவதை ‘ரசவாதி’ படத்தில் உணர முடியும்.

நிதானமாகவும் அகல மாகவும் விரியும் இப்படத்தின் ‘நிலப்பரப்பு’ மிகச் சிறந்த கதாபாத்திரமாக உணர வைப்பதைக் காணலாம். குளிர் நிறைந்த நிலப்பகுதியில் மனச்சூட்டுடன் உலவினாலும் அமைதியை நாடியும் அலைக்கழிப்பிலும் வாழும் கதாபாத்திரங்கள் முட்டி மோதும் காட்சிகளின் நீட்டிப்பு, சாந்தகுமாரின் புதிய முத்திரையாக வெளிப்படுவதை இப்படத்தில் காணலாம்.

தமிழர்கள் எந்த அளவுக்குச் சொந்த நிலத்தில் வெட்டப்படும் ‘பிராய்லர் கோழி’களாக இருக்கிறார்கள், தனது நிலத்தையும் வளத்தையும் காக்க முன்வரும் எவர் மீதும் அதிகாரத்தில் இருப்பவர்கள் பூசும் சேறு எத்தகையது, நாம் தொலைத்துவிட்ட சித்த மருத்துவம், வர்மம் நமது பண்பாட்டின் சிதைவு என ‘ரசவாதி’ படம் கதாபாத்திரங்களின் வாழ்க்கை நிகழ்வுகள் வழியாக மௌனமாக ஆனால் ஆழமாகப் பேசுவதைக் காணலாம்.

சாந்தகுமார் போன்ற ஒரு கிரியேட்டர், தன் நிலத்தின் சமூக வாழ்க்கை, கலாச்சார அடையாளங்கள், பிறழ்வுகள் (contradictions) ஆகியவற்றைத் திரைப்படத்தில் சித்தரிக்கும்போது, அதைத் தட்டையான ஆவணப்படத் தன்மைக்குள் ஒருபோதும் தள்ளிவிடுவதில்லை.

அவர் உருவாக்கும் காட்சிகளில் பண்பாட்டு அறிவும் வரலாற்று உணர்வும் மீட்சிக்கான கலைச் சிந்தனையும் அழுத்தமான காட்சியமைப்பில் இணைவதை அவர் எவ்வாறு திரைக்கதைப் பிரதியில் கொண்டுவருகிறார் என்பதை அறம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ரசவாதி’ படத்தின் திரைக்கதையை வாசிப்பதன் வழியாகக் கற்றுக்கொள்ள முடியும்.

கலைக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பவரே உண்மையான கிரியேட்டர் ஆகிறார். அவர், தான் வாழும் நிலத்தின் இனக்குழுக்களுடய வாழ்க்கையைப் பண்பாட்டுரீதியாக எவ்வளவு ஆழமாகப் புரிந்துகொள்கிறார் என்கிற கேள்வி மிக முக்கியமானது.

குறிப்பாக இயக்குநர் சாந்தகுமார் வர்க்கம், பாலினம், தொழில், சாதி, மதம், அரசியல் போன்ற பண்பாட்டுக் கூறுகளை ஒரு தனிமனிதப் பயணத்தில் எவ்வாறு பிணைத்து வெளிப்படுத்துகிறார் என்பதை ‘ரசவாதி’ திரைக்கதையை வாசிப்பதன் மூலம் அறியமுடியும்.

இது தரமான மிடில் சினிமாவை கற்க விரும்புகிறவர்களுக்கு மட்டுமல்ல; அது காட்சி வடிவம் பெறுவதற்கு முன் காகிதத்தில் எப்படி எழுதப்பட்டிருந்தது என்பதை வாசிக்க விரும்புகிறவர்களுக்கும் சுவாரசியமான புத்தகம். ஆங்கிலத்திலும் இத்திரைக்கதை வெளியாகியிருக்கிறது.

ரசவாதி - திரைக்கதை எழுத்து - இயக்கம்: சாந்தகுமார்

அறம் பதிப்பகம்

ஆரணி - 632316.

தொடர்புக்கு:9150724997 / 9865976642

SCROLL FOR NEXT