பழங்குடிகள் என்றால் யார்? ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இனத்தைப் பழங்குடிகள் என்று சொல்லலாம். இன்னும் எளிமையாக, இந்த உலகத்தை உருவாக்கியவர்கள் என்றும் சொல்லலாம். கட்டிடக் காடுகளாக இந்த நகரங்கள் மாறுவதற்கு முன்னால், பழங்குடியினரின் கைகளில்தான் தவழ்ந்து கொண்டிருந்தன.
காடுகள் அவர்களின் கைகளில் பல்லுயிர்ப் பெருக்கும் காடுகளாக மட்டுமே இருந்தன. இன்று இந்த நகரங்களும் காடுகளும் பழங்குடியினருக்கானதாக இல்லை என்பது உண்மை. அப்படிப்பட்ட ஆயிரம் கசப்புகளில், ஓர் ஆஸ்திரேலியக் கசப்புதான் இந்தத் திரைப்படம்.
1905இல் ஆஸ்திரேலியப் பாரளுமன்றத்தில் ஒரு பழங்குடிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பழங்குடியினத் தாய்க்கும் வெள்ளையினத் தந்தைக்கும் பிறந்த குழந்தைகளை அரைச் சாதியினர் என்று சொன்னது சட்டம். ‘பழங்குடியின மக்கள் வெறுக்கத்தக்கவர்கள், ஆபத்தானவர்கள், கலப்பு முறையில் பிறக்கும் குழந்தைகள் நீக்கப்பட வேண்டியவர்கள்’ என்று வெறுப்பைக் கக்கியது சட்டம்.
அப்படிப் பிறந்த குழந்தைகளை அவர்களின் தாயிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து, தொலைதூரத்தில் இருக்கும் முகாமில் அடைத்து வைத்து, வெள்ளையினத்தவருக்குப் பணிவிடை செய்யப் பயிற்சி கொடுக்கச் சொன்னது சட்டம். 1915இல் பழங்குடியினச் சட்டத்தை நிறைவேற்றவும்,அந்த மக்களைக் கண்காணிக்கவும் நெவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டான். அப்போது நடந்த உண்மைச் சம்பங்களின் அடிப்படையில்தான் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
பிலிப் நாய்ஸின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் 2002இல் வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆஸ்திரேலியர்களின் மனசாட்சியை உலுக்கி எடுத்தது. வழக்கம்போல உண்மையைச் சொன்னதற்காக அழுகிப்போன இதயம் கொண்ட அரசியல்வாதிகள் நாட்டின் பெருமையை இப்படியா சீர்குலைப்பது என்று இயக்குநரைக் கண்டித்தார்கள். ‘உண்மை கெட்டதாகத் தெரிந்தால் அது உண்மையின் தவறல்ல’ என்று பதில் கொடுத்தார் இயக்குநர். மேலும், ‘இந்தப் படம் பழங்குடியினரைப் பற்றியது அல்ல; பழங்குடியினருக்கு நாம் என்ன செய்தோம் என்பது பற்றியது’ என்று சொன்னார் இயக்குநர் பிலிப் நாய்ஸ்.
ஆஸ்திரேலிய சினிமாவின் அரசியல் மற்றும் மனிதநேய படைப்புகளில் முக்கியமான படைப்பு இந்தத் திரைப்படம். திருடப்பட்ட தலைமுறைகள் என்றழைக்கப்பட்ட கலப்பினக் குழந்தைகள் அல்லது அரை ஜாதிக் குழந்தைகளைப் பற்றிய உண்மைக் கதை.
1931இல் மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜிகலாங் கிராமத்தில், பழங்குடியினக் குடியிருப்பில் 14 வயதான மாலி, அவளின் சகோதரி டெய்ஸி, அவர்களுடைய உறவுக்காரப் பெண் கிரேஸி மூவரும் இயற்கையோடு இயற்கையாக மகிழ்ச்சியாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் பழங்குடியினச் சட்டம் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விளையாடிக் கொண்டிருக்கும் மூன்று சிறுமிகளையும் அரசாங்க உத்தரவு என்று சொல்லி அடித்து இழுத்துச் செல்கிறான் ஆஸ்திரேலிய அதிகாரி. தாய்மார்கள் ஏதும் செய்ய முடியாமல் அழுது புரள்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரின் வடக்கே இருக்கும் முகாமிற்கு அழைத்து வரப்படுகிறார்கள் சிறுமிகள். அங்கே ஏற்கெனவே அவர்களைப்போல பல சிறுமிகளும் சிறுவர்களும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு மேற்பார்வையாளர்களாக இருக்கும் கன்னியாஸ்திரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக் குழந்தைகளைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக? வெள்ளையினத்தவரின் வீட்டில் வேலை செய்வதற்காக. மாலி தன் தங்கைகளை அரவணைத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறாள்.
வெள்ளை ரத்தத்தின் தொடர்ச்சியான கலப்பு, இறுதியில் கறுப்பினத்தை முற்றிலுமாக அழித்துவிடும் என்கிற உறுதியான நம்பிக்கையிலும் இனவெறியிலும் இருக்கிறான் நெவில். முகாமில் தாய்மொழியில் பேச அனுமதி கிடையாது. பிரார்த்தனை கட்டாயமாகச் செய்ய வேண்டும். முகாமின் விதிகளை மீறினால், தப்பிக்க முயற்சி செய்தால் கடுமையான தண்டனை நிச்சயம். மாலிக்குச் சுத்தமாக அந்த இடம் பிடிக்கவில்லை. காட்டிலும் மேட்டிலும் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்து கொண்டிருந்தவளை, கேவலம் ஒரு முகாமில் அடைத்து வைப்பதா? தப்பித்து வீடுசெல்ல, அம்மாவைப் பார்க்க ஆசைப்படுகிறாள்.
ஒருநாள் மழை வரப்போகிறது என்பதை அறிந்த மாலி, காலடித் தடங்களைக் கண்டறிய முடியாது என்று அறிந்தவளாக, தங்கைகளை அழைத்துக் கொண்டு தப்பித்துச் செல்கிறாள். அடர்ந்த காடுகளின் வழியாக ஓடுகிறார்கள் மூவரும். மழை பெய்யத் தொடங்குகிறது. முகாமின் காவலாளி தேடிக்கொண்டே வந்து கொண்டிருக்க, ஆற்றைக் கடக்கிறார்கள். மலையைக் கடக்கிறார்கள். அம்மாவின் அணைப்பிற்குள் சென்றுவிட வேண்டும் என்கிற தவிப்பு அவர்களை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது.
மலையுச்சியில் ஒருவனைச் சந்திக்கிறார்கள். அவர்களுக்குக் கொஞ்சம் உணவு கொடுத்து வழிகாட்டிவிட்டுச் செல்கிறான். நீண்ட சமவெளிகளை நடந்தே கடக்கிறார்கள். பசி பாடாய்ப் படுத்துகிறது. ஒரு வீட்டிற்குப் பின்புறம் கோழிகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் உணவை எடுக்கிறாள் மாலி. வீட்டுக்காரப் பெண் பார்த்து, அவர்களின் மேல் இரக்கம் கொண்டு உணவும் உடையும் கொடுத்தனுப்புகிறாள். அந்தப் பெண்மனி மூலமாகப் பக்கத்தில்தான் முயல் தடுப்பு வேலி இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறாள் மாலி. அந்த வேலியைத் தொடர்ந்து சென்றால் தங்களுடைய கிராமத்திற்குச் சென்றுவிடலாம் என்கிற நம்பிக்கை பிறக்கிறது அவளுக்கு.
இதற்கிடையில் சிறுமிகளை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று ஆட்களை அனுப்புகிறான் நெவில். காற்றைப் போல நடந்து கொண்டே இருக்கிறார்கள் சிறுமிகள். வழியில் சந்தித்த ஒருவன் கிரேஸின் அம்மா இன்னொரு ஊரில் இருப்பதாகச் சொல்லி அவளை அழைக்க அவளும் நடந்த களைப்பில் அவன் வார்த்தைகளை நம்பிச் சென்றுவிடுகிறாள். மாலி வேண்டாமென்று சொல்லியும் கேட்காமல் செல்கிறாள். கடைசியில் நெவிலின் ஆள் ஒருவன் அவளை வண்டியில் ஏற்றி முகாமிற்கு அழைத்துச் செல்கிறான். மாலியும் தங்கை டெய்ஸியும் பயணத்தைத் தொடங்குகிறார்கள். மரங்களில் கூடு கட்டியிருக்கும் பறவைகளின் முட்டைகள் உணவாகின்றன. வேறு எதுவும் கிடைக்கவில்லையென்றால் புற்கள் உணவாகின்றன.
வழியில் ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக இருக்கும் கறுப்பினப் பெண்மணியைப் பார்த்து உதவி கேட்கிறாள் மாலி. அவளும் உணவு கொடுத்து, அறையில் இரவு தங்க வைக்கிறாள். நெவிலின் ஆட்களுக்குத் தெரிந்து முகாமின் காவலாளியோடு தேடிவர, அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார்கள். இரவெல்லாம் நடந்து விடிந்தும் நடந்து கொண்டிருக்கிறார்கள். எதிரில் சந்தித்த ஒருவன் கொஞ்சம் உணவு கொடுத்து, அவர்கள் ஊரான ஜிகலாங்கிற்கு வழிசொல்லி அனுப்பி வைக்கிறான். பாலைவனம் நீண்டு கிடக்கிறது. தங்கையை தூக்கிக் கொண்டு நடக்கிறாள் மாலி. சூரியன் தகித்துக் கொண்டிருக்க இருவரும் மயங்கி விழுகிறார்கள்.
வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது கழுகு. கண்விழித்துப் பார்க்கிறாள் மாலி. வழி தெரிகிறது. தங்கையை அழைத்துக் கொண்டு நடக்கத் தொடங்குகிறாள். வேறு வழியில்லாமல் இருவரையும் தேடுவதை நிறுத்தச் சொல்லிவிட்டான் நெவில். ஊரை நோக்கி மகள்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அதிகாரிகள் மூலம் அறிந்துகொண்ட மாலியின் தாய் காத்திருக்கிறாள். ஒன்பது வாரங்கள், 1600 கிலோ மீட்டர்கள் நடந்து மாலியும் டெய்ஸியும் வந்துசேர்கிறார்கள். அன்பு, தூய அன்பு, கலப்படமில்லாத அன்பு அங்கே பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்தத் திரைப்படம், ஆஸ்திரேலியாவின் பழங்குடி எழுத்தாளரான டோரிஸ் பில்கிங்டன் 1996இல் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. நிஜத்தில் மாலி எழுத்தாளரின் அம்மாதான். டோரிஸும் நான்கு வயதிலிருந்து சுமார் 21 வருடங்கள் முகாமில் கழித்தவர்தான். அந்த வலியை எழுத்தில் கடத்திவிட்டார் டோரிஸ். அதைக் கொஞ்சமும் குறையாமல் திரையில் கொடுத்துவிட்டார் இயக்குநர் பிலிப் நாய்ஸ். மிக முக்கியமாக பீட்டர் கேப்ரியல் இந்தத் திரைப்படத்திற்கு இசைத்த பின்னணி இசை Long Walk Home : Music from the Rabbit Proof Fence என்கிற பெயரில் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. உயிர் அறுக்கும் அந்த இசையைக் கேட்டுக் கொண்டேதான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நாகரிகம் என்கிற பெயரில், வளர்ச்சி என்கிற பெயரில் பழங்குயின மக்களுக்கு நாம் செய்தது கொஞ்ச நஞ்சமல்ல. பாருங்கள், நாகரிகமற்றவர்கள் என்று அவர்களைச் சொல்லிவிட்டு, எவ்வளவு அசிங்கமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கட்டுரையாளர் : ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com