அந்த நாளின் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுலகத் தாரகை டி.ஆர்.ராஜகுமாரி. அவர் மிகப் பிரபலமான இருந்த காலத்தில் சென்னையின் தி நகர் அபிபுல்லா சாலையில் ஒரு பெரிய மாளிகைபோன்ற வீட்டைக் கட்டினார். அதன் புதுமனைப் புகுவிழா வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தெய்வ நம்பிக்கை நிரம்பப் பெற்றிருந்த ராஜகுமாரி அந்த விழாவிலே "நந்தன் சரித்திரம்" கதா காலட்சேபம் நடத்த விரும்பினார். அந்நாளில் அந்தக் கலையில் பிரபலமாக இருந்த சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரை அழைத்தார் ராஜகுமாரி.
'நடிகை வீட்டில் காலட்சேபமா?' ஆச்சாரம் தீட்சிதரைத் தடுத்தது. அவர் மறுக்கவே, அதனைக் கலைவாணரிடம் சொல்லி வருந்தினார் டி.ஆர்.ராஜகுமாரி. உடனே,"நானிருக்கிறேன், கவலைப்படாதே..." என்று ஆறுதல் சொன்னார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
இப்படி அவர் சொன்னதற்குக் காரணம் இருந்தது. இது நடந்த சில தினங்களுக்குமுன்தான் கலைவாணரும் அந்நாளைய பெரும்பாடலாசிரியர் உடுமலை நாராயணகவியும் ஒரு கதா காலட்சேபம் உருவாக்குவது பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
ராஜகுமாரியின் புதுமனை விழாவுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிற நிலை. விரைந்து கோவை சென்று உடுமலையாரைச் சந்தித்தார் கலைவாணர். அவரிடம் விபரம் சொன்னார். இருவரும் இரவு பகலாக அமர்ந்து உருவாக்க, "கிந்தனார் சரித்திரம்" - என்னும் கதா காலட்சேபம் பிறந்துவிட்டது.
"நந்தனுக்கு பதிலாகக் கிந்தனா? ஆத்திகர்கள் ஆத்திரமடைவார்களே..." - என்று அஞ்சினார் கலைவாணரின் காதல் மனைவி மதுரம். "இது எவரையும் கேலி செய்ய அல்ல... கல்வியின் அவசியத்தை நகைச்சுவையோடு வலியுறுத்தத்தான்!" - என்று விளக்கினார் கலைவாணர். அவர் சொன்னது போலவே உடுமலையாரின் அற்புத வரிகளில் கிந்தன் ரசிகர்களைக் கிறங்கடித்தான். சிரிக்கச் செய்து, சிந்திக்கவும் வைத்தான்!
அந்த நந்தன் பிறந்த அதே ஆதனூரில்தான் கிந்தனுடைய பிறப்பும். நந்தனைப்போலவே தீண்டத்தகாது என ஒதுக்கிவைக்கப்பட்ட சாதியில்தான் கிந்தனும் பிறக்கிறான்.
அந்த நந்தன் பக்திப் பெருக்கினால் ஆலயத்தினுள் போக ஆசைப்பட்டான். ஆனால், கலைவாணரின் இந்தக் கிந்தனோ தன் சாதிக்குக் காலகாலமாக மறுக்கப்பட்டிருந்த கல்வியைப் பெற்றே ஆகவேண்டுமெனும் தீரா விருப்பம்கொள்கிறான். இவைதாம் புராணகாலத்து நந்தனுக்கு, கலைவாணர் படைத்த நவீன காலத்துக் கிந்தனுக்கும் இடையிலான வேறுபாடு.
அடிமைப்பட்டுக்கிடந்த தந்தையின் மறுப்பை மீறி, கிராமத்து உயர்சாதி ஆசிரியரின் கேலியையும் பொருட்படுத்தாமல், எவர் தடுத்தபோதும் நில்லாமல் பட்டணத்துக்கு ஓடிப்போய், அங்கே நல்ல மனம் படைத்தவர்கள் சிலரால் படித்து, கல்வி அதிகாரியாக உத்தியோகம் பெற்று, தன் கிராமம் திரும்புகிறான் கிந்தன்.
சாதியைச் சொல்லிக் கேலிபேசிய அதே ஆசிரியர் கிந்தனை ஆரத்தழுவி வரவேற்கிறார் என்பதே உடுமலையாரோடு இணைந்து கலைவாணர் உருவாக்கிய கிந்தனார் சரித்திரத்தின் சாரம்.
இதன்மூலம் சாதிபேதத்தால் உண்டான தீண்டாமை என்பது கல்வியினால் தகர்ந்துபோகும் என்று நம்பிக்கை ஊட்டினார் கலைவாணர்.
டி.ஆர்.ராஜகுமாரியின் புதுமனை விழாவில் அரங்கேற்றி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது இந்தக் கிந்தனார் சரித்திரம் கதா காலட்சேப நிகழ்ச்சி. அதனைத்தொடர்ந்து இதை ஊர்கள் தோறும் மேடையேற்றினார் கலைவாணர். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்துப் பரவசமானார்கள். வியந்து பாராட்டினார்கள்.
தந்தை பெரியார் பார்த்துப் பாராட்டினார். அறிஞர் அண்ணா கண்டு மகிழ்ந்தார். கலைவாணரின் இந்தக் கதா காலட்சேபம்போல இதற்கு ஈடாக இன்னொன்று இல்லை என தலைவர்களும், கலைஞர்களும் ஒரே குரலில் குதூகலித்தார்கள்.
"கிருஷ்ணன் நம் வேலையைச் சுலபமாக்குகிறார்!" - என்று பாராட்டி மகிழ்ந்தார் பெரியார். அண்ணா இப்படிச் சொன்னார்:
"கதை கிதையல்ல... கட்டுரையும் அல்ல... காலட்சேபம் சார், சத் கதா காலட்சேபம்! நாகர்கோவில் சுடலைமுத்துக் கிருஷ்ண பாகவதரின் அதிரசமிகு அலங்கிருத அபிநய நவயுகக் காலட்சேபம்! உடுமலை ஈன்ற, உருவில் மெலிந்த நகைச்சுவை நாராயண கவியின் சிருஷ்டி! ஜீவன் தந்து நடமாடவிடுபவர் நமது என்.எஸ்.கிருஷ்ணன்!"
கிந்தனார் காலட்சேபத்தை அண்ணா அணுஅணுவாக ரசித்திருந்தால் மட்டுமே இவ்வளவு புகழ இயலும், அல்லவா?
கோபாலகிருஷ்ண பாரதியின் "நந்தனார் சரித்திரம்" கீர்த்தனைகளை - அதன் மெட்டுக்களை அடியொற்றி, நவீன சிந்தனைகளையும், பகுத்தறிவுக் கருத்துக்களையும் கொண்டு உடுமலையார் பின்னிய இதன் பாக்களை இன்று செவிமடுத்தாலும் வியக்கவே செய்வோம்.
இதில் சொல்லப்பட்ட அந்த ரயில் பற்றிய செய்தி ஒன்று போதும் இதன் 'ஒருசோறு பதம்' எடுத்துக்காட்டுக்கு.
இந்திய மக்கள் பொதுப் போக்குவரத்து என்ற ஒன்றையே அறிந்திருக்காத காலம் அது. முதன்முதலாக இங்கு வந்துசேர்ந்த ரயில் போக்குவரத்து என்பது நிர்ப்பந்தமாக சாதி வேறுபாடின்றி எல்லாரையும் ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்து பயணம் செய்யும் நிலையை ஏற்படுத்திவிட்டது. இதனைக் கவனித்த கலைவாணர் அந்த ரயிலைக்கண்டு மகிழ்ந்து பாடுகிறார்.
அதிலே இப்படியொரு வரி வருகிறது:
"மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஒழித்திட்ட ரயிலே!"
"இந்தியாவில் பம்பாய்க்கும் தானா என்னுமிடத்துக்கும் இடையே இருப்புப்பாதை போடப்பட்டிருக்கிறது. சாதிகளால் பிளவுண்டு கிடக்கும் இந்தியர்கள் முதன்முறையாக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒன்றாக அமர்ந்து பயணப்படப் போகிறார்கள். சாதி எனும் இறுக்கம் சற்றே தளர்வடையப்போகிறது" - என இந்தியாவைப் பற்றி எனும் தனது மிகமுக்கியமான கட்டுரையில் அந்த ஜெர்மானிய மேதை காரல் மார்க்ஸ் எழுதினார்.
மார்க்ஸ் எழுத்துக்கள் விரிவாக அறியப்படாத காலத்திலேயே அவரின் அதே தீர்க்கதரிசனம் - தொலைநோக்கு - நம்முடைய கலைவாணரின் உள்ளத்திலிருந்து முகிழ்த்துக் கிளம்பியிருக்கிறதென்பது நமக்கெல்லாம் எத்துணை அரிய - பெரிய பெருமைக்குரியது, வியப்புக்குரியது அல்லவா?
'இந்திர சபா' காட்சி
அது மட்டுமா?
இந்தியாவில் தீவுகளாகப் பிரிந்துகிடக்கும் சுயநிறைவு கிராம அமைப்பினில் ரயில் போக்குவரத்தினால் உண்டாகப்போகும் தொழில் வளர்ச்சி சிதைவினைக் கொண்டுவரப் போகிறது என்றும் மார்க்ஸ் மிகத் துல்லியமாகக் கணித்தார்.
அதே பார்வையுடன் ரயிலின் வரவைக் கொண்டாடுகிறார் கலைவாணர். ரயிலே நீ வியாபாரத்தை விருத்தி செய்யப்போகிறாய் என்கிறார்.
அத்தோடு விட்டாரா? அவர் நகைச்சுவைக் கலைஞர் ஆயிற்றே.
தண்டவாளத்தின்மீது தாண்டவம் ஆடும் ஆண்டவனாம் ரயில். அப்படிச் சொல்ல என்ன காரணமாம்?
ஆண்டவன் பணம் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் ஒரேபோல அருள் புரிவதுபோல டிக்கட் இருப்பவனையும் டிக்கட் இல்லாதவனையும் ஏற்றிக்கொண்டு போகிறதாம் இந்த ரயில்.
ஆக, ரயில் ஒடத் தொடங்கியவுடனேயே நம்மவர்கள் 'வித் அவுட்'டையும் அமலுக்குக் கொண்டுவந்து விட்டார்கள் என்பதும் தெளிவாகிறது.
அறிஞர் அண்ணாவின் எழுத்தில் உருவான கலைவாணரின் "நல்லதம்பி" திரைப்படத்தில் தீண்டாமைக்கு எதிரான இந்த "கிந்தனார் சரித்திரம்" - காலச்சேபத்தையும்; குடிப்பழக்கத்துக்கு எதிரான "இந்திர சபா" - எனும் தெருக்கூத்தினையும் இடம்பெறச் செய்தார் கலைவாணர்.
அதன் பயனாக யூடியூபில் இன்றும் அந்த நாகர்கோவில் சுடலைமுத்துக் கிருஷ்ண பாகவதரை நாம் தரிசிக்க வாய்த்திருப்பது நமது பேறு அல்லாமல் வேறு என்ன?
| கட்டுரையாளர் - எழுத்தாளர், கவிஞர், ‘கலைவாணரின் கதை!’ - எனும் தலைப்பில் இசைப்பேருரை வடிவில் உலகெங்கும் கலைவாணரின் புகழினைப் பரப்பிவருபவர். |