

சினிமா கூட்டு முயற்சி என்பது எல் லோருக்கும் தெரிந்ததுதான். இம்முயற்சியில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குள் எழும் சின்ன சின்ன மனஸ்தாபங்கள், ஈகோ மோதல்கள் இயல்பானது. இக்கசப்பு,அப்படம் முடியும் வரை இருக்கும். அல்லது அவர்களுடன் பணியாற்றும் அடுத்தப்படம் வரை தொடரலாம். அப்படி சிலருக்கு ஏற்பட்டிருந்த மனக்கசப்புகளை மாற்றிய படம் ‘உயர்ந்த மனிதன்’!
வங்க மொழியில் வெளியான, ‘உத்தர் புருஷ்’ என்ற படம் நன்றாக ஓடுவதாக, ஏவி.எம் நிறுவனத்தின் கொல்கத்தா பங்குதாரர் விஏபி ஐயர் சொன்னதை அடுத்து அந்தப் படத்தை சென்னையில் பார்த்தார்கள். ஏவி.எம் நிறுவனத்துக்கு அதன் கதைப் பிடித்திருந்ததால் தமிழுக்காக சில மாற்றங்களைச் செய்து, திரைக்கதையை உருவாக்கினார்கள். ஜாவர் சீதாராமன் அதை சிறப்பாகச் செய்தார்.
கோடீஸ்வரன் மகனான ராஜு, தனது நண்பர்கள் டாக்டர் கோபால், சுந்தரத்துடன் கொடைக்கானலில் உள்ள தனது எஸ்டேட்டுக்கு அடிக்கடி செல்கிறார். அங்கு வேலைபார்ப்பவரின் மகள்பார்வதியை காதலிக்கும் ராஜு, அப்பாவுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு எஸ்டேட்டில் வாழ்கிறார். பார்வதி கர்ப்பமாகிறார். கோடீஸ்வர தந்தைக்கு விஷயம்தெரியவர, பார்வதியின் குடிசைக்குத் தீ வைக்கிறார். அவரை காப்பாற்ற முடியாத ராஜு, குற்ற உணர்ச்சியால் தவிக்கிறார். பிறகு ராஜுவை மிரட்டி, அவருக்கு விமலாவைத் திருமணம் செய்து வைக்கிறார் அப்பா.
இந்நிலையில் அவர்கள் வீட்டுக்கு வேலைக்காரனாக வருகிறான், பொய்யே பேசமாட்டேன் என்ற உறுதியுடன் இருக்கும் சத்யமூர்த்தி. அவன் மேல் பாசமாக இருக்கிறார் ராஜு. ஒரு கட்டத்தில் சத்யமூர்த்தி தனது மகன் என தெரிய வருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. இதில் ராஜுவாக சிவாஜி கணேசன், கோபாலாக அசோகன், சுந்தரமாக மேஜர் சுந்தர்ராஜன்,பார்வதியாக வாணி, விமலாவாக சவுகார் ஜானகி, சத்யமூர்த்தியாக சிவகுமார் நடித்தனர். மேலும் பாரதி, மனோரமா, ஜி.சகுந்தலா, வி.கே.ராமசாமி, வி.நாகையா, எஸ்.வி.ராமதாஸ், வி.எஸ்.ராகவன் என பலர் நடித்தனர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதிஇருந்தார். ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே’, ‘நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா’, ‘என் கேள்விக்கென்ன பதில்’, ‘வெள்ளிக்கிண்ணம்தான்...’, ‘அத்தானின் முத்தங்கள்’ என அனைத்துப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன.
‘என் கேள்விக்கென்ன பதில்’ பாடலில் சிவகுமாரும் பாரதியும் நடித்தனர். முதலில் பாடல் காட்சியை ஷுட் செய்துவிட்டார்கள். போட்டுப் பார்த்த ஏவி.எம்.செட்டியார், “கதைப்படி சிவகுமார் ஏழை, நாயகி டிரைவரின் மகள். இருவரும் மாடர்ன் டிரெஸ்சில் வெஸ்டர்ன் இசைக் கொண்ட பாடலில் ஆடுகிறார்கள்? இது எப்படி கதைக்குப் பொருந்தும். இப்பாடலை நீக்கிவிடுங்கள்” என்று சொல்லிவிட்டார்.
பிறகு ட்யூனை மட்டும் வைத்துக்கொண்டு,புல்லாங்குழல், சித்தார் போன்ற வாத்தியங்களை வைத்து பாடலை மாற்றி ஒலிப்பதிவு செய்துகொடுத்தார் எம்.எஸ்.வி. இதற்குப் பிறகு பாடல் காட்சியில் மாடர்ன் டிரெஸ் இல்லாமல் சிவகுமாரும் பாரதியும் தொட்டுக் கொள்ளாமல் பாடுவது போல ரீஷூட் செய்தார்கள்.
‘அந்த நாள் நாபகம் நெஞ்சிலே வந்ததே’ பாடலை, ‘மை ஃபேர் லேடி’ என்ற ஆங்கிலப் படத்தின் பாதிப்பில், பாடலுக்கு இடையே வசனம் வருவதுபோல உருவாக்கி இருந்தார்கள். ‘நாளை இந்த வேளைப் பார்த்து ஓடி வா நிலா’ பாடல் காட்சியை கொடைக்கானலில் படமாக்கத் திட்டமிட்டார்கள். அப்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால், அங்கு படமாக்க முடியாத நிலை. இதனால் கொடைக்கானல் போலவே தத்ரூபமாக செட் போட்டு அப்பாடல் காட்சியை படமாக்கினார்கள்.
அந்தப் பாடல், பி.சுசீலாவுக்கு தேசிய விருதைப் பெற்று தந்தது. சிவாஜி கணேசனுக்கும் ஏவி.எம் நிறுவனத்துக்கும் மனக்கசப்பு இருந்ததால், அந்த நிறுவனம் தயாரிக்கும் படங்களில் சில காலம் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்துக்காக யாரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று விவாதித்தபோது, சிவாஜி பெயரை சொன்னார், ஏவி.எம்.சரவணன். சரி என்றார், ஏவி.மெய்யப்பச் செட்டியார்.
சிவாஜியிடம் கேட்டதும் பழைய கருத்துவேறுபாட்டை மறந்து “சரி, நடிக்கிறேன்” என்றார். படத்தை கிருஷ்ணன் - பஞ்சு இயக்குவார்கள் என்றதும், “அவங்க இயக்கத்துல நடிக்க மாட்டேன், எங்களுக்கு சரிபட்டு வராது” என்றார் சிவாஜி. முதல் நாள் படப்பிடிப்பிலேயே எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி, அவரை ஒப்புக்கொள்ள வைத்தார், ஏவி.எம். சரவணன்.
சிவாஜிக்கு, அசோகன் நடித்த டாக்டர் வேடத்தின் மேல் ஆர்வம். ஆனால், ஏவி.எம் நிறுவனம் அசோகனை அந்த கேரக்டருக்கு முதலிலேயே ஒப்பந்தம் செய்துவிட்டது. சிவாஜிக்கும் அசோகனுக்கும் வேறு ஏதோ மனக்கசப்பு இருந்தது. ஆனால் ஷூட்டிங் தொடங்கியதும் இருவரும் எந்த இடத்திலும் அதை வெளிக் காட்டவில்லை. அதை மறந்து நண்பர்களாகவே பழகினார்கள்.
அசோகன் நெஞ்சுவலியால் துடித்து இறப்பதுபோல படத்தில் ஒரு காட்சி வரும். அதில் எப்படி நடிக்க வேண்டும், முகப்பாவங்களை எப்படி காட்ட வேண்டும் என்று அவருக்கு சொல்லிக்கொடுத்தார் சிவாஜி.
இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை, ஒரு பங்களாவில் தீ பிடித்து எரிவதுபோலவும் உள்ளே சிவகுமாரும் சிவாஜியும் இருப்பது போலவும் படமாக்கி இருந்தனர். தீ, நிஜமாகவே கொளுந்துவிட்டு எரிய, 4 கேமராக்களை வைத்து படமாக்கினர். நெருப்பு தொடர்ந்து எரிந்ததால் சுவாசிக்க முடியாமல் மயங்கி கீழே விழுந்ததாக சிவகுமார் தெரிவித்திருக்கிறார்.
தன் வீட்டில் வேலைக்காரனாக இருப்பதும் தான் அடித்து விரட்டியதும் தனது மகன் என்று தெரிந்ததும் சிவாஜி கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் பேசப்பட்டன. சிவாஜியின் 125-வது படமான இதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.1.5 லட்சம். 1968-ம் ஆண்டு இதே நாளில் (நவ.29) வெளியான இந்தப் படம் 125 நாட்களுக்கு மேல் ஓடியது.