காலங்கள் பல கடந்தும் ஓர் ஓவியம் அதன் கோடுகளால் நினைவுகூரப்படுவதைப் போல, ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும்கூட, ஒரு கவிதை அதன் வார்த்தைகளால் நினைவுகூரப்படுவதைப் போல, எப்போதோ கேட்ட ஓர் இசை அதன் தூய ஒலியால் இப்போதும் நினைவுகூரப்படுவதைப் போல, ஒரு திரைப்படம் அதன் காட்சிகளால் தான் காலங்கடந்தும் நினைவில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறது.
ஒரு சாதாரண திரைப்பட ரசிகன், என்றோ பார்த்த சினிமாவைக் காட்சிகளின் வழியாகத்தான் மெல்லமெல்ல மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறான். அந்த வகையில் சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் திரைப்படம் காட்சிகளின் வழியாகத்தான் காலத்தைக் கடந்தும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மாடர்ன் டைம்ஸ் என்று சொன்னதும், ஆடுகளைப்போல தொழிற்சாலைக்குள் செல்லும் தொழிலாளர்கள், பற்சக்கரங்களுக்குள் சிக்கிக்கொள்ளும் சாப்ளின், தானியங்கி உணவூட்டும் இயந்திரம், கனவு வீடு எனச் சில காட்சிகள் கண்முன்னால் ஒளிரத் தொடங்குவதுதான் தொண்ணூறு வருடங்கள் கழிந்தும்கூட சாப்ளினுடைய மகத்தான வெற்றியாக விளங்குகிறது.
திரையில் தோன்றும் காட்சிகள் வெறும் காட்சிகள் மட்டுமல்ல, மனித மனங்களில் தேங்கியிருக்கும் கனவுகளின் வெளிப்பாடு. மனதிற்குள் மறைந்திருந்தாலும் வெளிப்படையாகச் சொல்ல முடியாத ஒரு செய்தியை, வெளிப்படுத்த முடியாத காதலை, அழுதுதீர்க்க முடியாத சோகத்தைத் திரையில் வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போகிறான். அப்படித்தான் மனித மனதின் பல பரிமாணங்களைத் திரையில் வெளிப்படுத்திய சாப்ளினின் ட்ராம்ப் கதாபாத்திரம் உலகத்தின் ஒவ்வோர் இதயத்திலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொண்டது.
சினிமா பேசத் தொடங்குவதற்கு முன்னால் சாப்ளின் தன்னுடைய உடல்மொழியால் உலகத்தின் ஒவ்வொரு மனிதர்களிடமும் பேசத் தொடங்கிவிட்டார். எளிய குடும்பத்திலிருந்து வறுமையைப் பார்த்து வளர்ந்துவந்த சாப்ளினின் ஒவ்வொரு கதாபாத்திரமும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களிடம் நிறைந்திருக்கும் மானுட அன்பை, அதிகார வர்க்கம் அல்லும்பகலும் அவர்களைப் பந்தாடும் அவலத்தை, எல்லாவற்றையும் மீறி அவர்களிடம் நிறைந்திருக்கும் நம்பிக்கையை ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு காட்சியிலும் உறுதியாகச் சொன்னார் சாப்ளின்.
ஏழைகளாக்கப்பட்ட மனிதர்களின் மீதான பரிவால், அதிகாரவர்க்கத்தின் பணத்தாசைப் பிடித்த வாழ்க்கையைக் கடுமையாக விமர்சனம் செய்யவும், கேலி செய்யவும் தொடங்கினார். நேரடி அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் அவருடைய படைப்புகள் அரசியல் உலகில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்திக்கொண்டே இருந்தன.
ஒரு கலைஞனாக ஏழைகளின் பக்கம் உறுதியாக நின்றதால் அதிகாரவர்க்கத்தின் மீதான விமர்சனம் அவரது படைப்புகளில் அழுத்தமாகவே இருந்தது. இயந்திரங்களோடு இயந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் உலகெங்கும் இருக்கும் தொழிலாளர்களுக்காக அவருடைய இதயத்தில் இருந்து வெளிப்பட்டதுதான் மாடர்ன் டைம்ஸ் திரைப்படம். காட்சி மொழியாகட்டும், கதைசொல்லும் விதமாகட்டும், இசையாகட்டும், சாப்ளின் உள்ளிட்ட கதாபாத்திரங்களின் நடிப்பாகட்டும் எல்லாவற்றிலும் உச்சம்தொட்ட ஒரு படைப்பு மாடர்ன் டைம்ஸ்.
1931ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த படைப்பான சிட்டி லைட்ஸ் திரைப்படத்தை விளம்பரம் செய்வதற்காக ஐரோப்பா எங்கும் பயணம் செய்தார் சாப்ளின். அந்தக் காலம் மாபெரும் பொருளாதார மந்தநிலை நிலவிக் கொண்டிருந்த காலம். 1929ஆம் ஆண்டு பங்குச்சந்தை சரிவிற்குப் பிறகு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வறுமையும், பசியும், வீடற்ற நிலைமைகளும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டேயிருந்தன.
அமெரிக்காவின் கனவுகள் சுக்குநூறாக உடைந்து சிதறின. இந்த நெருக்கடிகளைப் பல ஹாலிவுட் இயக்குநர்கள் பார்க்காமல் முகம் திருப்பிக்கொண்டபோது, சாப்ளின் தைரியமாக அதைப் பார்த்தார். ஒரு கலைஞனாக அந்த மானுட வேதனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தார். அதன் வெளிப்பாடுதான் இந்தத் திரைப்படம்.
அன்றைய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிறைந்திருந்த வேலையிழப்பும் தொழில்மயமாதலும், மனிதர்கள் இயந்திரங்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருப்பதையும், எங்கெங்கும் நிறைந்திருந்த வறுமையையும் படத்தின் கதைக்குள் கொண்டுவந்தார். அந்தப் பயணத்தில் சாப்ளின் மகாத்மா காந்தியைச் சந்தித்தார். நவீனத் தொழில்நுட்பம், இயந்திரமயமாக்கல் குறித்தான இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலும்கூட முக்கியமானதுதான்.
‘லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவத்தின் இயந்திரமயமாக்கல், மனிதர்களின் வேலையையும், வாழ்க்கையையும் அழித்துவிட்டது’ என்கிற நிலைப்பாட்டிற்கு வந்த சாப்ளின் அந்தக் கருத்தில் உறுதியாகயும் இருந்தார்.
ஹாலிவுட் பேசும் படங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அதுவரையிலும் உடல்மொழியால் பேசிக்கொண்டிருந்த சாப்ளின், பேசாமல் உலகையே பேசச் செய்து கொண்டிருந்த தன்னுடைய ட்ராம்ப் கதாபாத்திரத்தைப் பேசவைத்து விடலாம் என்கிற முடிவிற்கு வந்திருந்தார்.
1934இல் மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தைப் பேசும் படமாகவே தொடங்கினார். சில காட்சிகளை இயக்கி முடித்துப் பார்த்த பிறகு ட்ராம்ப் கதாபாத்திரம் பேசுவதை அவரால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. மொழியற்ற உடல்மொழிதான் அந்தக் கதாபாத்திரத்தின் பலம் என்கிற நிலைக்கு வந்தார். சுற்றியிருந்தவர்கள் உலகத்தின் போக்கை எடுத்துக்காட்டாகச் சொல்லி சாப்ளினைக் குழப்பினார்கள். ஆனால், சாப்ளின் தன்னுடைய இதயம் சொல்கிறதைக் கேட்கத் தொடங்கினார். மாடர்ன் டைம்ஸிலும் ட்ராம்ப் கதாபாத்திரம் பேசாமலே பேசியது.
இந்தத் திரைப்படத்தைப் படமாக்குவதற்குக் கிட்டத்தட்ட ஓர் ஆண்டைக் எடுத்துக்கொண்டார் சாப்ளின். 1936இல் வெளியான இந்தத் திரைப்படம், அமெரிக்க சினிமா வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது. வழக்கம்போல எழுத்து, இயக்கம், இசை, படத்தொகுப்பு, தயாரிப்பு என அனைத்தையும் தானே செய்து வெளியிட்டார். தன்னுடைய புகழ்பெற்ற ட்ராம்ப் கதாபாத்திரமாகக் கடைசியாக நடித்த படம்.
சாப்ளினின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜெஃப்ரி வான்ஸ் ட்ராம்ப் கதாபாத்திரத்திற்கு சாப்ளின் கொடுத்த வழியனுப்புதல்தான் இந்தத் திரைப்படம் என்று எழுதினார். எல்லாவற்றையும்விட சாப்ளினின் மீது உறுதியாக கம்யூனிஸ்ட் முத்திரை குத்துவதற்கும், பிற்காலத்தில் அமெரிக்காவில் நுழைய தடை விதித்ததற்கும் இந்தத் திரைப்படமும், திரைப்படத்தில் இடம்பெற்ற ஒருகாட்சியும் காரணமாக இருந்தது
இந்தத் திரைப்படத்தில் பெரும் பொருளாதார மந்தநிலை நிலவும் காலத்தில், ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளியாகத் திரையில் தோன்றினார் சாப்ளின். மனிதனை இயந்திரமாகவே மாற்றத் துடிக்கும் முதலாளியின் பேராசையைப் பகடி செய்தார்.
ஏற்கெனவே இயந்திரத்தின் வேகத்தை அதிகரித்து, அந்த வேகத்திற்கு ஈடுசெய்ய வலியுறுத்தும் முதலாளி, தொழிலாளர்களுக்கு உணவூட்டும் இயந்திரம் ஒன்றை வரச்செய்து, சாப்ளினை வைத்தே அதைச் சோதித்துப் பார்க்கிறார். இந்தக் காட்சியையெல்லாம் கண்டிப்பாக நீங்கள் திரையில்தான் பார்க்க வேண்டும். வேகத்தைச் சமாளிக்க முடியாமல் நரம்பு பிரச்சினையாகி மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார் சாப்ளின்.
உடல்நிலை சரியாகி வெளியே வந்தார். கம்யூனிஸ்டுகளின் பேரணி நடந்து கொண்டிருந்தது. தவறுதலாகத் தானும் கலந்துகொள்கிறார். தவறுதலாகத் தலைவரென்று நினைத்து கைதுசெய்யப்படுகிறார். சில நாள்கள் கழித்து விடுதலை செய்யப்படுகிறார். பசிக்குத் திருடும் எலன் என்கிற பெண்ணிற்கு உதவி செய்கிறார்.
இருவரும் கைதுசெய்யப்பட, இருவருமே சிறைசெல்லாமல் தப்பித்துச் செல்கிறார்கள். சாப்ளினுக்கு ஒரு பல்பொருள் அங்காடியில் பாதுகாவலர் வேலை கிடைக்கிறது. இரவு எலனை அழைத்துச் சென்று நல்ல உணவைச் சாப்பிட வைக்கிறார். அங்கிருக்கும் நகரும் படிக்கட்டுகளில், பொம்மைகளோடு விளையாடுகிறார்கள் இருவரும். மறுநாள் காலையில் சாப்ளின் மாட்டிக்கொள்ள மீண்டும் கைது செய்யப்படுகிறார்.
சாப்ளின் திரும்ப வரும்போது எலன் இருவருக்காகவும் ஒரு குடிசையைத் தயார் செய்து வைத்திருக்கிறார். தொழிற்சாலை திறக்கப்படுகிறது என்கிற செய்தி கேட்ட சாப்ளின், வேகமாகச் சென்று வேலையில் சேர்கிறார். எலனைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற தேவையிருக்கிறது அவருக்கு.
வெளியே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய, இப்போதும் சாப்ளின் கைதுசெய்யப்படுகிறார். இம்முறை சாப்ளின் வெளியே வரும்போது எலன், ஒரு விடுதியில் நடனமாடுகிறவராக இருக்கிறார். சாப்ளினையும் அழைத்துச் சென்று அங்கே வேலை வாங்கித் தருகிறார். இருவரும் சிறந்த வாழ்க்கையைக் கனவு காண்கிறார்கள். ஆனால் சிறிய குற்றங்களில் ஈடுபட்ட எலனைக் கைதுசெய்ய காவலர்கள் வர, இருவரும் தப்பித்துச் செல்கிறார்கள்.
தொலைதூரம் கடந்த பிறகு, சாலையோரத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் இருவரும். எலன் மனம் உடைந்து, விரக்தியடைகிறார். சாப்ளின் அவரைத் தேற்றுகிறார். அவரைச் சிரிக்கச் சொல்கிறார். இருவரும் கைகோத்தபடி நிறைந்த நம்பிக்கையோடு புதிய வாழ்க்கையை நோக்கி அந்த நெடுஞ்சாலையில் நடந்து செல்கிறார்கள். இதுவரையிலான திரைப்பட வரலாற்றில் மிகமிக அழகான கடைசிக் காட்சியாக இதுதான் இருக்குமென்று எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்கள், மானுட அன்பை வலியுறுத்தும் அந்தக் காட்சியை நீங்களும் அப்படித்தான் ஒப்புக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்!
கட்டுரையாளர்: ஜோசப் ராஜா | கவிஞர் / திரைக்கதை ஆசிரியர்
தொடர்புக்கு: writer.josephraja@gmail.com